Published : 23 Jul 2019 12:45 PM
Last Updated : 23 Jul 2019 12:45 PM

தங்கம் விலை உயர்வு ஏன்; தங்கம் வாங்கலாமா? 

நெல்லை ஜெனா

உலகளாவிய பொருளாதார சூழலால்  அமெரிக்க டாலரின் மதிப்பும் குறையும் சூழல் உள்ளது. இதனால்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

தங்கத்தின் விலை அண்மையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லபடுகிறது. தங்கத்தின் விலை மற்றும் அதன் போக்கு எப்படி இருக்கும் என நிதி ஆலோசகர் சோம.வள்ளியப்பனை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தங்கத்தை பெரும்பாலும் அரசுகளே அதிகம் வாங்குகின்றன. ஒவ்வொரு அரசுகளும் தங்கள் ரிசர்வ் வங்கி மூலம் தங்கத்தை வாங்கி கையிருப்பாக வைக்கின்றன. தங்கத்தின் உற்பத்தியில் முதலிடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன.

சோம.வள்ளியப்பன்

தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடாக சீனாவும், இந்தியாவும் உள்ளன.  இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தை இறக்குமதி செய்யும் நிலையிலேயே உள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 718 டன்கள் அளவிற்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. 

இந்தியா முழுவதும், மக்களிடம், கோயில்களில் என தற்போது உள்ள தங்கத்தின் கையிருப்பு உலக நாடுகள் அதிசயத்து போகும் அளவுக்கு 24 ஆயிரம் டன்களாக உள்ளது. 
அதேசமயம் அரசு என்று பார்தால் அதிகமான தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பது அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி தான். அந்த வங்கியின் மொத்த கையிருப்பில் 75 சதவீதத்தை தங்கமாகவே உள்ளது. 

இந்தியாவின் ரிசர்வ் வங்கி வெறும் 6 சதவீத கையிருப்பு மட்டுமே தங்கமாக வைத்துள்ளது. உலகம் முழுவதும் அரசு, மக்கள் என பலரும் பாதுகாப்பானதாக தங்கத்தை கருதும் நிலையே உள்ளது. 

தற்போது தங்கம் விலை உயர்ந்து வருவதற்கு காரணம் சில உலகளாவிய அரசியல், பொருளாதார சூழலே காரணம்.  
அமெரிக்க- சீனா வர்த்தக பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்துக் கொள்வதால் வர்த்தகர போராக மாறி உலக பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக இருநாடுகளிடையே போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுமட்டுமினறி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தக சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. சீனாவில் 27 ஆண்டுகளில் இல்லாத வர்த்தக மந்தநிலை நீடிக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற வர்த்தக சுணக்கம் பெரிய அளவில் இருக்கிறது.

இதுபோன்ற உலகளாவிய பொருளாதார சூழலால்  அமெரிக்க டாலரின் மதிப்பும் குறையும் சூழல் உள்ளது. இதனால்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த போக்கு இனிமேலும் தொடர வாய்ப்புள்ளது. 

ஆனால் தங்கம் விலை தொடரந்து உயர்ந்து இருக்கும் என்று கூற முடியாது. உலகளாவிய பொருளாதார சூழல் மாறினால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தில் இருந்து பிற முதலீடுகள் மீது போகும். அப்போது தங்கம் விலை குறையும். எனவே தங்கத்தை முதலீடாக கருதி மக்கள் வாங்க வேண்டிய தேவையில்லை.
தங்கம் என்பது நகை போன்ற தேவைக்காக வாங்குவது வேறு. முதலீடாக கருதி வாங்கினால் இதே விலை தொடர்ந்து இருக்கும் என்று கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x