Last Updated : 30 Jul, 2015 02:50 PM

 

Published : 30 Jul 2015 02:50 PM
Last Updated : 30 Jul 2015 02:50 PM

மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி கொள்கையை முடக்குவது குறித்து ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை

மூடி கார்ப்பரேஷனின் மூடி அனலிடிக்ஸ் என்ற பொருளாதார ஆய்வுப் பிரிவு, வட்டி விகிதங்கள் பற்றிய கொள்கை முடிவுகளில் மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி கொள்கையை முடக்குவது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

இந்திய நிதி விதிமுறைகளின் திருத்தப்பட்ட வரைவு, வட்டிவிகித நிர்ணய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க முன்மொழிந்துள்ளது. இதில் 7 உறுப்பினர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுவார்கள்.

இந்த விதிமுறை வரைவின் முந்தைய வடிவத்தில் ஆர்பிஐ ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் அளித்திருந்தது. அதாவது வட்டிவிகித நிர்ணய உயர்மட்டக் குழுவின் முடிவுகளை நிராகரிக்க ஆர்பிஐ ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருத்தப்பட்ட வரைவில் அத்தகைய அதிகாரத்தை முடக்கியுள்ளது.

இது குறித்து இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில், “அரசு தேர்வு செய்யும் குழு மத்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை முடக்கும் என்றே நாங்கள் கருதுகிறோம். இந்த புதிய மாதிரிக்கு நகர்ந்தால், அது மத்திய ரிசர்வ் வங்கியின் திறமையை முடக்கும். நம்பகத்தன்மையும் குறையும், முக்கிய நிதிசார் முடிவுகளை அரசியலே தீர்மானிக்கும். வெளிப்படைத்தன்மையும் குறையும்.

ஒட்டுமொத்தமாக, மத்திய ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை முடக்குவதென்பது பணவீக்க நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கும். இது இந்திய பொருளாதார வளர்ச்சி நிலைகளின் மீது தாக்கம் செலுத்தும். குறிப்பாக நிதிச்சந்தையின் நிலைத்தன்மையை இது பாதிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரகுராம் ராஜன் தலைமையில் மத்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் திறம்படவுள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.

பணவீக்கம் குறைந்துள்ளது, பொருளாதாரம் மேலும் வட்டிவிகிதக் குறைப்புகளுக்கு ஆயத்தமாகி வருகிறது. எனவே மத்திய அரசின் தற்போதைய இந்த புதிய வரைவு மசோதா மத்திய ரிசர்வ் வங்கியின் இதுவரையிலான நற்பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும், இது அபாயகரமான பாதை என்று எச்சரித்துள்ளது இந்த அறிக்கை.

வட்டி விகித விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுக்கு அதிக செல்வாக்கு இருப்பது அவசியம் என்று நடப்பு அரசு கருதி வருகிறது. ஆனால் ஆர்பிஐ அதிகாரம் முடக்கப்பட்டு புதிய நிதிக்கொள்கைகள் வரைவின் படி ஒரு தனிப்பட்ட குழு அமைக்கப்படுவதும், அதில் அரசு தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் முடிவுகளை எடுப்பதும் நாட்டுக்கு நல்லதல்ல என்று ஒருதரப்பினரும், ஆர்பிஐ, மத்திய அரசு இணைந்து செயல்படுவது சில முன்னேற்றமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்று பிரிதொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மூடி அனலிடிக்ஸ் பொருளாதார ஆய்வு ஆர்பிஐ-யின் அதிகாரங்களை முடக்குவது ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x