Published : 29 Jun 2015 04:04 PM
Last Updated : 29 Jun 2015 04:04 PM

ஷேரில் இருந்து வீல் சேர் வரை: 30-ஐ தொடாதோருக்கு முறையான நிதி ஆலோசனைகள்!

நண்பர்களுடன் ஊர் சுற்றலாம்; படம் பார்க்கலாம்; வாழ்க்கையைக் கொண்டாடி மகிழலாம். ஆனால் எதிர்காலத்துக்கு பணத்தை சேமித்து வைக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இளமைக்காலத்திலேயே புத்திசாலித்தனத்தோடு, செல்வங்களை சேமிக்கக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தில் நிம்மதியோடு வாழலாம்.

இந்த உலகமே நம்முடையதாகத் தெரியும் இந்தக் காலகட்டம்தான் நமது பொன்னான நேரம். சரியான முறையில், திட்டமிட்டு வாழ்க்கையை நகர்த்தினால் இதே மகிழ்ச்சி எப்போதும் உடன் வரும்.

சேமிக்கப்படும் ஒற்றை ரூபாயும் ஒரு வருமானமே. குறைவான பணத்தைக் கொண்டு சேமிக்கத் தொடங்கினாலும், சேமிப்பு தொடங்கிவிட்டது என்பதை மறக்காதீர்கள்.

குறிப்பிட்ட அளவு பணத்தை (எ.கா: 1000/-, 2000/-) சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, ஊதியத்தின் குறிப்பிட்ட சதவீத பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். (ஒவ்வொரு மாதமும் மொத்தப்பணத்தில் 25 %). இப்படிச் செய்யும்போது, ஒவ்வொரு முறையும் உங்கள் சம்பளம் ஏறும் போது, சேமிக்கும் தொகையும் அதிகமாகும். எப்போதும் மாதத்தின் தொடக்கத்திலேயே சேமிக்கப் பழகுங்கள். வணிக மொழியில் சொல்ல வேண்டுமென்றால் "முதலில் உங்களுக்கு ஊதியமளியுங்கள்".

நல்ல தொடக்கம்

வைப்பு நிதிகளால் லாபமா?

ஆண்டுக்கொரு முறை வங்கிகள் தரும் வெறும் 4 முதல் 6 சதவீத வட்டிக்காக (அதுவும் வரிக்குட்பட்டது) உங்கள் பணத்தை, வங்கிக் கணக்குகளிலேயே வைத்திருக்க வேண்டியதில்லை. பணத்தை முறையாகப் பிரித்து சேமிக்கத் தொடங்குங்கள். 30 வருட அலுவலக வாழ்க்கையில் நீங்கள் நிறையச் சேமிக்கலாம். இப்போது உங்கள் வயது 25, மாதம் 2,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால், உங்களின் அறுபதாவது வயதில் 12 சதவீத ஆண்டுக் கணக்கோடு, சுமார் 1.3 கோடியைப் பெறலாம். 35 வயதில் சேமிக்கத் தொடங்கினால் கூட 38 லட்சம் ரூபாயைப் பெற முடியும்.

பங்குகளை தைரியமாக அணுகுங்கள்:

அதிர்ஷ்டம் தைரியசாலிக்கே அனுகூலம் செய்கிறது. நீங்கள் இளைஞர்கள் என்பதால் துணிந்து பங்குச்சந்தையில் இறங்கலாம். சின்னச்சின்ன தடங்கல்களை எளிதாகக் கடந்து வரலாம். குடும்பப் பொறுப்புகள் குறைவான அளவிலேயே இருக்கும் காலமிது.

நிலையான வைப்புத்தொகை உள்ளிட்ட பாதுகாப்பான சேமிப்புகளில் முதலீடு செய்து, சவாலான பங்குச் சந்தைகளை விட்டுவிடுவது சரியான சேமிப்பாக இருக்காது. திட்டமிடப்பட்ட ரிஸ்கை நீங்கள் எடுக்கும் வரையிலும், சீரான வளார்ச்சி இருக்காது. அதே சமயம் பங்குச் சந்தை முதலீடுகளில் ஏதேனும் தயக்கம் இருப்பின் அந்த முதலீடைக் குறைத்துக் கொள்ளலாம்.

எளிமையான கணக்குதான். நூறிலிருந்து உங்கள் வயதைக் கழித்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் வயது 25 என்றால் 100-25= 75 சதவீதம் நீங்கள் தைரியமாக ரிஸ்க் எடுக்கலாம். இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். பங்குச்சந்தையில் நீங்கள் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யப் போகிறீர்களே தவிர வர்த்தகத்தில் ஈடுபடப்போவதில்லை.

உங்கள் முதலீடுகளை ஒரே இடத்தில் போடாமல், பங்குச்சந்தை, நிதி, ரியல் எஸ்டேட், தங்கம் என வெவ்வேறு துறைகளில் பிரித்து முதலீடு செய்யலாம். உங்களின் வயது, குடும்ப சூழ்நிலை, முடிவு எடுப்பதற்கான தைரியம் உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு ரிஸ்க் எடுக்கத் தயாராகுங்கள்.

முறையான முதலீட்டுத் திட்டம்

$ ஆரம்பக் காலங்களில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்ய முடிகிற மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

$ எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது என்பதில் தெளிவாக இருங்கள்.

$ கணிசமான தொகையை மொத்தமாக ஒரே இடத்தில் முதலீடு செய்வதைக் காட்டிலும், முறையாகத் திட்டமிட்டு சீரான தொகையை முதலீடாக்குவது நல்லது.

$ நல்ல நிலையில் இருக்கும் நம்பிக்கையான நிறுவனப் பங்குகளை வாங்குவது மிகவும் அவசியம்.

$ பங்குச்சந்தை நிபுணர்களை அணுகி, தோன்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் சிறப்பானவை அல்ல. உதாரணத்திற்கு, வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லாதவர்கள், அதற்குரிய மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுக்கலாம். வருமானவரி கட்டுபவர்கள், வரி ஆதாயம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டை நாடுவது புத்திசாலித்தனமானது. மூன்று வருடங்களுக்கு, பணத்தை எடுக்க முடியாமல் இருக்கும் பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டங்கள் (Equity linked savings schemes), இதற்குச் சிறந்த தேர்வு.

உத்தரவாத முதலீடு: (Debt investments)

பங்குச் சந்தை சிறந்த முதலீடாக இருந்தாலும், கடன் பத்திரங்களில், நிலையான நிதிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பான, முறையான வருமானத்தைத் தரவல்லது. உங்கள் சேமிப்பில் 20-25 சதவீத பணத்தை இதில் முதலீடு செய்யலாம்.

இதில் முக்கியமானது பிபிஎஃப் என்று அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. நீண்ட கால சேமிப்புத் திட்டமான (15 ஆண்டுகள்) இதற்கு, வரி எதுவும் கிடையாது. இதற்குக் கிடைக்கும் வட்டிக்கும் (தற்போது 8.7%) வரி இல்லை. ஈபிஎஃப் எனப்படுகிற வருங்கால ஊழியர்நல நிதித் திட்டமும் சிறந்ததே. நீண்டகால வைப்பு நிதியான ஈபிஎஃப் கணக்கை அலுவலகம் மாறினாலும், புது இடத்துக்கே நமது கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு செய்வது நமது ரிஸ்கின் அளவீட்டைக் குறைக்கும். ஆனால் 10 சதவீதத்துக்கு மேல் அதில் முதலீடு செய்ய வேண்டாம். தங்கம் சார்ந்த பங்குச் சந்தை வர்த்தக நிதிகளை நாடுங்கள்.

ரியல் எஸ்டேட்டை யோசியுங்கள்

ரியல் எஸ்டேட் என்றவுடனே, வீடுகளை வாங்கி விற்பதா என்று நினைக்க வேண்டாம். சொந்த வீடு வாங்குவதே இந்தக்காலத்தில் பெரிய முதலீடுதான். மருத்துவம், விவசாயம், திருமணம் உள்ளிட்டவைகளுக்கு லோன்கள், கல்விக்கடன் இருக்கும் பட்சத்தில் அவற்றை முழுமையாக அடைத்துவிட்டு வீடு வாங்குவது நல்லது. சீரான வருமானம் வரும் என்ற உறுதி இருந்தால் ஈ.எம்.ஐ. மூலமும் வாங்கலாம். ஆனால் ஒழுங்காகக் கடனை அடைத்தால் மட்டுமே வீடு நம் கையில் இருக்கும்.

முதலில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

"இன்ஷூரன்ஸா? எனக்கென்ன, நல்லாத்தானே இருக்கேன், இந்த வயசுல என்ன வந்துடப் போகுது?" என்பதுதான் வாழ்க்கை மற்றும் மருத்துவக் காப்பீட்டைப் பற்றிக் கேட்கும்போது இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் சொல்லும் பொதுவான பதில். வாழ்க்கையும், உடல்நலமும் யார் கையிலும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நேரலாம். திடீரென பெரிய மருத்துவச் செலவொன்று எதிர்பாராமல் வரலாம். அப்போது கையைப் பிசைந்துக் கொண்டு நிற்பது புத்திசாலித்தனமல்ல. இளம் வயதில் போடப்படும் காப்பீட்டுத் தொகை மிகவும் குறைவாகவே இருக்கும்.

முறையான கால இடைவெளி கொண்ட காப்பீட்டு திட்டங்கள் நல்லது. குறைவான பிரீமியத் தொகையிலேயே, குறிப்பிடத்தக்க தொகை, காப்பீடாகக் கிடைக்கும். அதுவும் இத்தகைய திட்டங்களை ஆன்லைனிலேயே விண்ணப்பிப்பது, அதற்குச் செலவாகும் தொகையைக் குறைக்கும்.

இன்ஷூரன்ஸ் வேறு; சேமிப்பு வேறு. இன்ஷூரன்ஸ் உங்களின் ரிஸ்க் காரணிகளைக் குறைக்க, சேமிப்பு வருங்காலத்துக்கான பணத்தை சேமிக்கிறது.

முதுமைக்கால சேமிப்பு

முதுமைக் காலத்துக்காக இப்பொழுதே சேமிப்பதா என்று தோன்றினாலும் இது நிச்சயமாய் வெகு சீக்கிரம் இல்லை. அதிகமாய் சேமிப்பது உங்கள் பாதுகாப்பை இன்னும் உறுதிப்படுத்தும். மியூச்சுவல் பண்ட், ஈபிஎஃப் உடன், என்.பி.எஸ். (தேசிய ஓய்வூதிய திட்டம்) தொகையையும் இணையுங்கள்.

உங்களின் துணிச்சலான மனநிலையைப் பொறுத்து என்.பி.எஸ். திட்டம் பங்காக இருக்க வேண்டுமா, நிதியாக இருக்கவேண்டுமா என்பதை முடிவு செய்யலாம். மொத்தத்தில் 50 சதவீத சேமிப்பு பங்குகளிலும், மீதி மற்ற நிதிகளிலும் (வைப்பு நிதி, தங்கம், கடன் பத்திரங்கள்) இருப்பது ஆரோக்கியமானது. ரிஸ்க் எடுக்கத் தயங்கும் சூழ்நிலையில் நிதிகள் சார்ந்த முதலீட்டின் சதவீதத்தை உயர்த்தலாம்

வாழ்த்துகள்!

தமிழில்:க.சே.ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x