Published : 17 May 2015 01:13 PM
Last Updated : 17 May 2015 01:13 PM

வணிக நூலகம்: ஸ்மைல் ப்ளீஸ்!

சிரிக்கக்கூட நேரமில்லாத, நகைச் சுவை பற்றிய சிந்தனையே இல்லாத சூழ்நிலை இன்று. மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய, அனுபவிக்கக்கூடிய மற்றும் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒரு உணர்வு நகைச்சுவை. மற்றவர்களை விட நகைச்சுவை உணர்வு அதிகம் உடையவர்களையே இந்த உலகம் விரும்புகின்றது. முக்கியமாக நிர்வாகவியல் துறையில் நகைச்சுவையானது ஒரு வலிமையான கருவியாக இருந்து வருகின்றது என்கிறார் இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் சத்யநாராயணா. இவரது “தி பவர் ஆப் ஹியூமர் அட் தி வொர்க்பிளேஸ்” என்னும் இந்தப் புத்தகத்தில், பல்வேறு சூழ்நிலைகளில் நகைச்சுவையின் மகத்துவத்தைப்பற்றி சொல்லியுள்ளார்.

சிரிப்பால் கவர்வோம்!

ஒருமுறை மகாத்மா காந்தி பேசுவதற்காக கூட்டம் ஒன்று மைசூரில் ஏற்பாடாகியிருந்தது. நேரந் தவறாமையினை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிப்பவர் மகாத்மா காந்தி. அப்படியிருந்தும் ஒரு சில காரணங்களால் அன்று அவர் மைசூருக்கு வந்தடைய நேரமாகிக்கொண்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தைவிட சுமார் ஒரு மணிநேரம் தாமதமாகிவிட்டது. மக்களும் ஆவலுடன் காந்திஜியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர். அந்தநேரம் கூட்டத்திலிருந்த இளைஞர்கள் சிலர், காந்திஜியின் உருவத்தை பெரிய பெரிய காகிதங்களில் வரைந்து அவற்றை பட்டமாக பறக்கவிட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தசமயம் காந்திஜியின் கார் மேடையை அடைந்தது. பெரும்பாலானோர் அவர் வந்ததை அறியாமல் பட்டத்தினையே பார்த்துக்கொண்டிருந்தனர். மொத்தக் கூட்டத்தினரையும் தன்பால் ஈர்க்க நினைத்த காந்திஜி, மைக்கில் “நண்பர்களே! ஒரிஜினல் காந்தி இங்கே இரத்தமும் சதையுமாக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன், நீங்கள் ஏன் அந்தப் பட்டத்திலுள்ள படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று தனது பேச்சை ஆரம்பித்தார். உடனே மொத்தக் கூட்டமும் மேடையை நோக்கித் திரும்பியது. சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் மக்களைக் கவர்ந்த காந்திஜியின் செயல் நகைச்சுவையின் வலிமையை உணர்த்துவதாகவே இருக்கின்றது அல்லவா!

எந்தச் சூழ்நிலையிலும்!

கடுமையான மற்றும் துன்பமான நேரங்களிலேயே நகைச்சுவையானது நமக்கு பேருதவியாக இருக்கின்றது என்கிறார் ஆசிரியர். நகைச்சுவை நம்மை பல இக்கட்டான சூழலில் நிம்மதியாக இருக்க உதவுகிறது. இதற்கு உதாரணமாக காந்திஜியின் மற்றொரு சம்பவத்தை விவரிக்கிறார் ஆசிரியர். தென்னாப்பிரிக்காவில் தன்னுடைய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார் காந்திஜி. ஒரு நாள் இரவு காந்திஜியை கைது செய்வதற்காக ஒரு சிவில் நீதிமன்ற நீதிபதி மற்றும் சில போலீஸாரை அனுப்பியிருந்தது தென்னாப்பிரிக்க அரசு.

அவர்கள் சென்று காந்திஜியை எழுப்பி விஷயத்தை சொல்ல, அவர்களை சிரிப்புடன் வரவேற்ற காந்திஜி, அவர்களிடம், “இதுவரை காவல்துறையில் உள்ள ஜூனியர்களையே என்னை கைது செய்வதற்காக உங்கள் அரசு பயன்படுத்தி வந்தது. ஆனால் இப்பொழுது, என்னை கைது செய்ய சிவில் நீதிமன்ற நீதிபதியை அனுப்பியதன்மூலம் உங்கள் அரசால் எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. அதற்காக எனக்கு வாழ்த்துகளைச் சொல்லுங்கள்” என்று கூறி கைதாகவேண்டிய தருணத்தைக்கூட கலகலப்பான தருணமாக மாற்றியிருக்கிறார் காந்திஜி.

சிரிப்பே டானிக்!

செய்திதாள்களில் வெளிவருகின்ற கேலிச்சித்திரம் (கார்ட்டூன்ஸ்) மற்றும் காமிக்ஸ் போன்றவை, மற்ற கடினமான செய்திகளிலிருந்து நம்மை விலக்கி, சகஜ நிலைக்கு வைக்கின்றன அல்லவா!. பெரும்பான்மையான செய்திகளான அரசியல், சமூக நிகழ்வுகள் மற்றும் வணிகம் போன்றவற்றிற்கு மத்தியில் இந்த மாதிரியான இடைச்செருகல்கள் மிகவும் தேவையான ஒன்று என்பது ஆசிரியரின் வாதம். மேலும், வார இதழ் மற்றும் மாத இதழ்கள் நகைச்சுவைக்கான பகுதிகளைக்கொண்டிருப்பதும் இந்தக் காரணங்களுக்காகவே!.

இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த சமயம், ஹிட்லரின் ஜெர்மானியப் படைகள் பிரிட்டனின் நகரங்களை துவம்சம் செய்துகொண் டிருந்தன. அந்த துரதிர்ஷ்டவசமான நிலையிலும் பிரிட்டிஷ் மக்களின் நகைச்சுவை உணர்வு ரசிக்கத்தக்க வகையில் இருந்ததாக கூறுகின்றார் ஆசிரியர். அதாவது, ஜெர்மானிய படைகளின் குண்டுவீச்சுகளால் தங்களது கடைகளின் மேற்கூரைகளை இழந்த கடைக்காரர்கள் “வி ஆர் மோர் ஓபன் பார் பிசினஸ்” என்று போர்டு எழுதி வைத்திருந்தனராம்.

கேள்வியில் இருக்கு சூட்சுமம்!

ஒரு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர் இரண்டு தொழி லாளிகள். அதில் ஒருவருக்கு சிகரெட் பிடிக்கவேண்டும்போல் தோன்றுகிறது. உடனே ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைக்க முற்படுகிறார். அப்போது அவருடன் வேலைசெய்துகொண்டிருந்த மற்றொரு தொழிலாளி, “இங்கு சிகரெட் பிடிப்பதற்கான அனுமதி உன்னிடம் இருக்கின்றதா?” என்று கேட்கிறார். உடனே அவர் தன் முதலாளியிடம் சென்று “நான் வேலை செய்யும்போது சிகரெட் பிடிக்கலாமா?” என்று கேட்கிறார். அவரது கோரிக்கை முதலாளியால் நிராகரிக்கப்பட, விரக்தியுடன் திரும்புகிறார்.

இவரிடம் விபரங்களை கேட்டுக் கொண்ட இரண்டாவது தொழிலாளி, தான் சென்று ஒரு நிமிடத்தில் அனுமதி வாங்கிவருவதாக கூறி செல்கிறார். சொன்னபடி ஒரு நிமிடத்தில் திரும்பி வந்தவர், “நீ இப்பொழுது தாராளமாக சிகரெட் பிடிக்கலாம், அதற்கான அனுமதி கிடைத்துவிட்டது” என்கிறார். உடனே, “நீ மட்டும் எப்படி அனுமதி பெற்றாய்?” என்று முதலாவது தொழிலாளி கேட்க, அதற்கு அவர் “உனக்கு எப்படி கேட்க வேண்டும் என்ற சூட்சுமம் தெரியவில்லை, அதனாலேயே உனக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்றும் தான் முதலாளியிடம் சென்று “சிகரெட் பிடிக்கும்போது வேலை செய்யலாமா?” என்று கேட்க, அவரும் உடனே அனுமதியளித்ததாக சொல்கிறார். ஆக, கேட்கும் கேள்வியில் இருக்கிறது நமது செயலுக்கான சூட்சுமம் என்கிறார் ஆசிரியர்.

புத்திசாலித்தனமான நகைச்சுவை!

ஒரு நிறுவனத்தின் நிதி பிரிவிற்கான முதுநிலை மேலாளர் வேலைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. அதற்கான தேர்வுக் குழு வந்திருந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து, ஒரு சிலவற்றை தேர்வு செய்திருந்தனர். அதில் ஒரு பெண்ணின் விண்ணப்பமானது தேர்வு குழுவினரை மிகவும் கவர்ந்திருந்தது. அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வின் இறுதியில் தேர்வுக் குழுவின் தலைவர் அந்தப் பெண்ணிடம், அவரது அனைத்து தகுதிகளும் இந்த வேலைக்குப் பொருத்தமானதாக இருப்பதாகவும் ஆனால் இந்த வேலைக்கு ஆண் ஒருவரை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றார். மேலும், அந்த பிரிவில் பணியில் உள்ள அனைவரும் ஆண்களே என்றும் சொல்கிறார்.

இதனைக்கேட்ட அந்த பெண், “இதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஆண்களைப்போலவே சூட் மற்றும் டை அணிந்து பணிக்கு வருகிறேன். பெண்ணிற்கான எந்த சலுகையையும் எதிர்பார்க்காமல், ஆண்களுக்கான அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், என்னால் ஆண்களைப்போல் மீசை மட்டும் வைத்துக்கொள்ள முடியாது” என்று நகைச்சுவையாக பதிலளிக்கிறார். மிகவும் புத்திசாலிதனமான அதேசமயம் நகைச்சுவையான பதிலால் தனது திறமைகளை தேர்வுக் குழுவினருக்கு உணர்த்திய அந்த பெண்ணிற்கு வேலை கொடுக்கப்படுகின்றது. நகைச்சுவையில் உள்ள சாதுர்யமோ அல்லது சாதுர்யத்தில் உள்ள நகைச்சுவையோ நம்முடைய தகுதிகளையும் திறமைகளையும் வெளிக்காட்டுவதாக இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

சமயோசித நகைச்சுவை!

உடல் பருமனான ஒரு பெண், தன் உடல் எடையினைக் குறைப்பதற்கான புத்தகங்கள் வாங்குவதற்காக ஒரு புத்தக விற்பனையகத்திற்குச் செல்கிறார். அங்கிருந்த விற்பனை பெண் ஒருவரிடம் “உடல் எடையைக் குறைப்பது எப்படி?” என்ற தலைப்பில் புத்தகங்கள் இருகின்றனவா என்று கேட்கிறார். அதற்கு அந்த விற்பனை பெண், அவை அனைத்தும் விற்பனையாகிவிட்டதாகவும் ஆனால் அதே ஆசிரியால் எழுதப்பட்ட “உடல் எடையை அதிகரிப்பது எப்படி?” என்ற தலைப்பில் தங்களிடம் புத்தகம் இருப்பதாகவும் சொல்கிறார்.

அதனைக்கேட்ட அந்த பெண், தன்னை அந்த விற்பனை பெண் கிண்டல் செய்வதாகக் கருதி, மிகவும் கோபமாகி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். உடனே அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட விற்பனை பெண், “உங்களை வருத்தமடைய வைப்பதற்காக இதைச் சொல்லவில்லை, நீங்கள் இந்த புத்தகத்தை வாங்கிச்சென்று அதில் பரிந்துரைக்கப்பட்ட வழிகளுக்கு நேர் எதிரானவற்றை செய்யுங்கள்” என்று சொல்ல, அந்த பெண்ணும் சிரிப்புடன் அந்த புத்தகத்தை வாங்கிச்செல்கிறார். தனது சமயோசித நகைச்சுவையால் வாடிக்கையாளரை கவர்ந்ததோடு தன்னுடைய வேலையிலும் வெற்றி பெறுகிறார் அந்த விற்பனை பெண்.

சரியான முறையில் சொல்லப்படும் நகைச்சுவையானது நம்முடைய பணி யிடத்தை பிரகாசமாகவும் மகிழ்ச்சியான தாகவும் மாற்றுகின்றது. அதேசமயம், இனிமையான நினைவுகளையும் ஏற்படுத்துகின்றது. உளவியல் தொடர்பான ஆராய்சிகளும் இதனையே வலியுறுத்துகின்றன. என்னதான் கடுமையான பணிச்சூழலானாலும் கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்துதான் பார்ப்போமே.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x