Last Updated : 28 Apr, 2015 10:03 AM

 

Published : 28 Apr 2015 10:03 AM
Last Updated : 28 Apr 2015 10:03 AM

பாதிப்பில்லாத வரி விதிப்பு உறுதி: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

மத்திய அரசு பாதிப்பில்லாத வரி விதிப்பு முறையைத்தான் விரும்புவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். கடுமையான வரிகளை விதித்து வரி செலுத்துவோரைக் கொடுமைப்படுத்த இந்த அரசு விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். முன் தேதியிட்டு வரி விதிக்கப்படுவதை அரசு ஒரு போதும் விரும்பவில்லை என்றார்.

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ ஏற்பாடு செய்திருந்த அதன் முதலாவது இயக்குநர் கோஹ்லி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய ஜேட்லி, பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகள் அவசியம் என்றார். இத்தகைய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமெனில் பாதிப்பில்லாத வரி விதிப்பு முறை, சாதகமான தொழிலாளர் கொள்கைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும் என்றார். இந்நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:

வரி விதிப்பு கடுமையாக இருந்தால் இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவ னங்கள் முன்வராது. தொழில் தொடங்க ஏதுவான சூழல் நிலவ வேண்டும் இதை அரசு உணர்ந்துள்ளது.

உற்பத்தித் துறை வளர்ச்சியடைய வேண்டுமெனில் நமது முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். அவ்விதம் முதலீடுகளை ஈர்க்க வேண்டுமெனில் நமது வரி விதிப்பு முறைகள் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவாவது குறைவாக இருக்க வேண்டும். அல்லது அந்த நாட்டு அளவுக்காவது இருக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாகவும் அமையலாம் அல்லது தவறாகவும் போகலாம். இது பரிட்சார்த்த முயற்சிதான். இருந்தாலும் இப்போதைய சூழலில் இத்தகைய முயற்சிகளை துணிச்சலாக எடுத்துத்தான் ஆக வேண்டும்.

சர்வதேச வர்த்தகச் சூழலில் நுகர்வோர் என்பவர் தங்கள் நாட்டில் தயாராகும் பொருளை வாங்கத்தான் விரும்புவர். அதே சமயம் நமது பொருளுக்கான சந்தை சர்வதேச அளவில் விரிந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருள்களுக்கான வாடிக்கை யாளர் எல்லையை சர்வதேச அளவுக்கு விரிவுபடுத்த வேண்டும். வெறுமனே கோஷம் போட்டுக் கொண்டிருந்தால் வர்த்தகம் வளராது. சர்வதேச சந்தையில் போட்டியிடும் வகை யில் தரமானதாக, விலை குறை வானதாக இருந்தால் மட்டுமே சர்வதேச போட்டிகளைச் சமாளிக்க முடியும் என்றார்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசுதான் முன்தேதியிட்ட வரி விதிப்பு முறையைப் போட்டு முதலீட்டாளர்களை வெளியேறச் செய்தது. ஆனால் இந்த அரசு பாதிப்பில்லாத வரி விதிப்பு முறையில் மிகத் தெளிவான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இந்த அரசு வரிச் சுமையை ஏற்ற விரும்பவில்லை என்றார்.

அரசு அதிகாரிகள் மிகவும் சுதந்திரமாக செயல்படலாம். முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டும். இப்போது சுதந்தி ரமான சூழலில் உள்ளோம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார். நடப்பு நிதி ஆண்டில் நமது பொருளாதாரம் 8 சதவீதம் முதல் 8.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

நமது நிறுவன வரி விதிப்பு முறைகள் பிற நாடுகளில் போடப்படும் வரி விதிப்பு முறைகளுடன் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டுதான் நிறுவன வரி விதிப்பு 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி குறித்து கருத்து தெரிவித்த ஜேட்லி, இந்த மசோதா அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து தடையின்றி நடைபெற ஏதுவாக இருக்கும் என்றார்.

2014 பொதுத் தேர்தலில் மக்கள் ஒரு கட்சி ஆட்சிக்கு தெளிவான ஒப்புதலை வழங்கியுள்ளனர். இதன் மூலம் சட்ட ரீதியான மற்றும் நிதித்துறை சார்ந்த சீர்திருத்தங்களை எடுக்க வழியேற்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிக அளவில் குறைந்ததும் நமக்கு சாதகமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

போதுமான முதலீடுகள் இல்லாததால் வேளாண் துறையும் கட்டமைப்புத் துறையும் கடந்த சில ஆண்டுகளாக பின் தங்கியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x