Last Updated : 26 Apr, 2015 12:17 PM

 

Published : 26 Apr 2015 12:17 PM
Last Updated : 26 Apr 2015 12:17 PM

பெட்ரோநெட் தலைவர் பதவி: புதியவரைத் தேடும் பணி தீவிரம்

இந்தியாவில் திரவ எரிவாயு (எல்என்ஜி) அதிக அளவில் இறக்குமதி செய்யும் பெட்ரோநெட் நிறுவனத்துக்கு தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

ஏற்கெனவே இப்பதவிக்காக உரிய நபரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவினரின் பரிந்துரையை ஏற்பதில் இயக்குநர் குழு உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் இப்போது மீண்டும் ஆள் தேடும் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசி தலைவர் தினேஷ் கே. சராஃப் தலைமையிலான குழு உரிய நபரைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆனால் இந்த குழு நியமனம் குறித்து நிறுவன மேம்பாட்டு இயக்குநர் ஒருவர் கேள்வி எழுப்பியதையடுத்து பரிந்துரை செய்த நபர் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து புதிதாக தலைவரைத் தேர்வு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோநெட் நிறுவனத்துக்கு தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியைத் தேர்வு செய்யும் பணியை இதற்கான தேர்வுக் குழு முடிவு செய்யும். இக்குழுவில் பெட்ரோநெட் மேம்பாட்டாளர்களான கெயில், ஐஓசி, பிபிசிஎல், ஓஎன்ஜிசி, பிரான்சின் ஜிடிஎப் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். சராப் தலைமையிலான குழுவில் பெட்ரோநெட் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பொறுப்புகள் இல்லாத இயக்குநர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதனிடையே பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், பெட்ரோநெட் நிறுவனம் தனியார் நிறுவனமாக பட்டியலிடப்பட்டிருந்தாலும் இதன் தலைவராக பெட்ரோலியத்துறையின் செயலர் இருப்பார். இருப்பினும் பணி மூப்பு அடிப்படையில் சராஃப்பை விட மூத்த அதிகாரிகள் உள்ளனர். இதனால் இக்குழு பரிந்துரை நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

தலைமைப் பதவிக்கு மொத்தம் 20 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. பிஹெச்இஎல் நிதி இயக்குநராக உள்ள பிரமோத் கே பாஜ்பாய், பெட்ரோலியத்துறை செயலர் சௌரவ் சந்திரா, கெயில் சந்தைப் பிரிவு இயக்குநர் பிரகலாத் சிங், ஓஓசி நிர்வாக இயக்குநர் எஸ்.கே. ஸ்ரீவாத்சவா, இஐஎல் நிறுவன தலைவர் ஏ.கே பூர்வாஹா ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன. கெயில் இயக்குநர்கள் பி.கே. ஜெயின் மற்றும் அஷுதோஷ் கர்நாடக், பெட்ரோநெட் நிறுவன நிதிப்பிரிவு இயக்குநர் ஆர்.கே. கார்க் மற்றும் இந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் ராஜேந்தர் சிங் ஆகியோரும் பெட்ரோநெட் தலைமைப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x