Published : 20 Mar 2015 09:58 AM
Last Updated : 20 Mar 2015 09:58 AM

பேட்டரி கார் பந்தயம்: மஹிந்திரா பங்கேற்பு

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெறும் பேட்டரி கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான பந்தயத்தில் மஹிந்திரா நிறுவனம் கலந்து கொள்கிறது. பேட்டரி கார், மோட்டார் சைக்கிளுக்கென்றே நடத்தப்படும் இந்தப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

கார் பந்தய வீரர் கருண் சந்தோக் தலைமையில் மஹிந்திரா அணி இப்போட்டியில் பங்கேற்கிறது. இந்த அணியினர் கடற்கரைப் பகுதி நிறைந்த சுற்றுலா மையமான மியாமி சாலைகளில் பேட்டரி கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வலம் வர உள்ளனர்.

பார்முலா இ எனப்படும் இந்த கார் பந்தயத்தில் பங்கேற்கும் அனைத்து கார்களும் பேட்டரியால் இயங்குபவை. கடந்த ஆண்டு பெய்ஜிங்கில் இத்தகைய போட்டி நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பல்வேறு நாடுகளில் இப்போட்டி நடத்தப் படுகிறது. இத்தகைய போட்டி பெர்லின் மற்றும் லண்டனிலும் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி நடத்தப் படுவதன் முக்கிய நோக்கமே எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத கார்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான். அத்துடன் எதிர்கால ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியைப் பறைசாற்றும் விதமாக இது அமையும்.

மியாமி கிராண்ட்பிரீ இ சர்க்யூட் கார் பந்தயமானது அந்நகரின் டவுன்டவுன் பகுதியில் நடைபெறுகிறது.

இந்த கார் பந்தயத்தில் பேட்டரியில் இயங்கும் கார்கள் பங்கேற்பதோடு அதற்கான தொழில்நுட்பமும் இத்துறையைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியவரும். இதில் மஹிந்திரா நிறுவனத்தின் ஜென்இஸட் இ 2.0 எனப்படும் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனமும் பங்கேற்கிறது.

பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாகன பெருக்கம், சுற்றுச் சூழல் பாதிப்பு இவற்றைத் தவிர்த்து மக்கள் எப்படி சூழலை பாதுகாக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இத்தகைய போட்டிகள் மற்றும் சூழல் பாதிப்பில்லாத வாகனங்கள் சாலைகளில் வலம் வருகின்றன.

கலிபோர்னியா நகரில் இப் போட்டி நடத்தப்பட்டபோது தான் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்களையும் இதில் சேர்க்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

ஜென் இஸட் இ எனப்படும் இந்த பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனம் அமெரிக்க நகரங்களிடையே போக்கு வரத்துக்கு மிகவும் ஏற்ற வாகனமாகும். இதில் மாற்றத்தக்க லித்தியம் பேட்டரிகள் உள்ளன. இந்த பேட்டரிகள் எத்தகைய ரீசார்ஜ் மையத்திலும் ரீசார்ஜ் செய்ய முடியும்.

இதன் மூலம் உபயோகிப்பாளர் பாது காப்பான, எளிதான வாகன சவாரியை அனுபவிக்க முடியும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x