Last Updated : 04 Jan, 2015 01:30 PM

 

Published : 04 Jan 2015 01:30 PM
Last Updated : 04 Jan 2015 01:30 PM

வணிக நூலகம்: பயம் என்ற தடையை தாண்டுவது எப்படி?

பயம் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. தனி மனிதனைப் பொறுத்தவரை பயம் என்பது வெற்றிக்குத் தடைக்கல்லாகும். பயத்தை வெல்வதை பற்றி பலரும் பலவாறான கருத்துகளைக் கூறியுள்ளனர். ஆனால் நிறுவனங்களில் ஏற்படும் பயத்தை வெல்வதற்கு நூலாசிரியர் தம்முடைய பல்லாண்டு பணி மூலம் சேர்த்த தகவல்களையும், அறிவார்ந்த ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.

நிறுவனங்களில் பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் இலக்குகளை அடைய இயலாமை ஊக்கம், ஊக்க நிதி கிடைக்கப் பெறாமல் இருத்தல் முடிவெடுக்கும் சுதந்திரத்தை இழத்தல் மரியாதை மற்றும் மதிப்பு இழத்தல் என்று கூறுகிறார். பயம் என்பது பணியாளர்களையும், மேலாளர்களையும் தங்களைச் சுற்றி ஒரு தடையை ஏற்படுத்தி ஒருவரை வாட்டி, மற்றவரைத் தாக்கி, தங்களை உயர்த்தி பணியில் தொய்வு ஏற்படக் காரணமாகின்றது.

பயத்தினால் ஏற்படும் தடைகள் ஒரு நிறுவனத்தில் வெகு வேகமாகப் பரவும். பயத்தின் முதல் வெளிப்பாடே நிறுவன இலக்குகளை அடையாமல் தனிமனித இலக்குகளை தக்க வைத்துக்கொள்ளுதல் ஆகும். கொள்கை முடிவுகளில் குழப்பம் ஏற்படும். நிறுவனத்தை நிறுவ மற்ற துறைகளில் இருந்து திறமைகளை பயன்படுத்தி அவரவர் வளர முயற்சி செய்வார்கள். இதை போன்ற எதிர்மாறான நடவடிக்கைகளால் பணியாளர்கள் துன்பப்படுவர். வெற்றி விட்டு ஓடும். திறமை மறைந்து போகும். குழப்பம் கொடி கட்டி பறக்கும். பயம் பந்தி வைக்கும். இது போன்று ஏற்படும் குழப்பங்கள் நிறுவனங்களை பொறுத்தவரையில் அந்தந்த நிறுவனங்களுக்குள்ளேயே சரி செய்ய வேண்டும். தைரியமான ஆக்க பூர்வமான தலைமைப் பண்புகள் பயத்தை பறக்கச் செய்யும். அவ்வாறு செய்யும் பொழுது வியக்கத்தக்க மாறுதல்கள் ஏற்படும்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரெனால்டு ரீகன் கூறியதைப் போல நம்மைச் சுற்றிலும் நாமே தடைகளை ஏற்படுத்தி கொள்கிறோமே ஒழிய மனித மனத்தில் தடையில்லை, உணர்வில் தடைச் சுவர்கள் இல்லை. நம் முன்னேற்றத்திற்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தடைகளைத் தவிர நமது வெற்றிக்கு வேறு தடைகள் இல்லை. அவ்வாறு நாமே ஏற்படுத்தி கொள்ளும் தடைகள் நமது பய உணர்வினால் வருவது. தனி மனித பய உணர்வுகளும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வரும் பய உணர்வுகளும் நம்மை வெகுவாகப் பாதிக்கின்றன. தைரியத்தை அதிகரிப்பதற்காகவும்.

பயத்தை போக்குவதற்காகவும் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் உதவுகின்றன.

* வெளிப்படையான தைரியத்தையும், தார்மீக தைரியத்தையும் பிணைத்தல்.

* வலிமைக்கேற்ற பொறுப்புகளை அளித்தல்.

* பணியாளர்களைத் தொடர்ந்து கவனித்தல்.

* தைரியமான நடவடிக்கைகளை ஊக்குவித்து பரிசு அளித்தல்.

உதாரணமாக என்ரான் நிறுவனம் அழிவு தன்மையை நோக்கிய வெளிப்படையான தைரியத்தை ஊக்குவித்தது. அதன் விளைவாக வெகுவான துறைகள், தெளிவான, துல்லியமான தகவல்களை அளிக்கவில்லை. பணியாளர்கள் ஒருவரை மற்றவர் மதிக்காமலும், கீழ்ப்படியாமலும் இருந்தனர். அதிகமான உற்பத்தித் திறன் அளவையும், மேலதிகமான காகித தகவல்களை தவறான முறையில் அளித்தவர்களையும், பதிவு செய்தவர்களையும் தாராளமாகப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. விளைவு என்ரான் எங்கோ போனது, பணியாளர்கள் பாதை மாறினார்கள். மாறாக தார்மீக தைரியம் என்பதை நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தனக்காக அல்லாமல் நிறுவனத்திற்கான பலன்களை பெற மேலதிகமான பணிகளை செய்வதை குறிப்பிடலாம். உதாரணமாக சக பணியாளர்களுக்கு உதவுவதன் மூலம் வேலைகள் தாமதம் ஆவதை பற்றியும். அதிக சுமைகளை பற்றியும் கவலைப்படாமல் உதவுவதே ஆகும்.

நிறுவன தலைவர்களும், மேலாளர்களும் தம்மிடம் பணிபுரியும் பணியாளர்கள் வசதியாகவும், ஊக்கம் நிறைந்தவர்களாகவும் பணியாற்ற தார்மீக தைரியத்தை அளிக்க வேண்டும். சில நிறுவனங்களில் பொறுப்புகளையும் அவர்கள் தகுதி திறமைகளையும் இணைக்கும் பொழுது பாராட்டும்படியான முடிவுகள் வெளிப்படும். ஆனால் மனிதர்களைக் கையாள்வது மகத்தான சிக்கலாகும். எந்த நிறுவனத்தில் குறுகிய வட்டம் இருக்கின்றதோ அங்கு இணைப்புகள் நிகழ்வது இல்லை. வெளிப்படை தன்மையும், பொறுப்புகளை உணர்ந்து, தகுதிகளைத் தெரிந்து இணைப்புகளை ஏற்படுத்தும் நிறுவனங்கள், நிறுவனத்தில் ஏற்படும் பயத்தை போக்குவதுடன் வெற்றிகரமாக செயல்படவும் உதவுகின்றன.

பணியாளர்களை இணைத்து பணியாற்ற வைப்பது நிறுவனங்களின் தனித் தன்மை. மற்றவரை பற்றிய சிந்தனை பணி மேம்பாடு, அனைவரும் தகுதியான பணிகளை மேற்கொள்ளுதல், உடன் பணிபுரிபவர்களுடன் நட்பாக இருத்தல் மற்றும் முன்னேற்றத்திற்கான கருத்து பரிமாறல்கள் ஆகியவை இருக்கும் இடங்களில் பணியாளர்கள் தங்களை நிறுவனம் தொடர்ந்து கவனித்து, ஊக்குவிப்பதாக கருதி திறமையாக பணிபுரிவார்கள். இந்த நிறுவனங்களில் தேவையற்ற பயம் இருக்காது.

எந்த ஒரு பணியாளராவது புதுமையான ஒரு கருத்தை ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக எடுத்து கூறினால் அந்தப் பணியாளரை பாரட்டுதல் நிறுவனம் பற்றிய பயத்தை போக்கும். தார்மீக மற்றும் வெளிப்படையான தைரியத்தை இணைத்துப் பாராட்டுதல், வலிமைக்கேற்ற பொறுப்புகளை அளித்தல் ஆகியவற்றை வெளிப்படையான அணுகுமுறையோடும், பரந்த மனப்பாங்கோடும், நிறுவனத்தை பேணி வளர்ப்பதாலும் பயமற்ற நிறுவனமாக மாற்ற முடியும். பயமற்ற நிறுவனத்தில் பணியாளர்கள் உளமாற பணியாற்றுவர். உளமாற பணியாற்றுபவர்கள் உற்சாக மிகுதியில் அளவுக்கு அதிகமான உற்பத்தி திறனை அடைந்தாலும் தங்கள் சொந்த நிறுவனமாக நினைத்து பயமின்றி பணியாற்றலாம்.

தைரியத்தை கொல்ல ஏராளமான காரணிகள் உண்டு.

கீழ் கண்டவைகளை தைரியத்தை கொல்லும் காரணிகளாக கொள்ளலாம்.

* சீரற்ற தன்மை

* பழி சொல்லும் விளையாட்டு குணம்

* தகவல்களை பதுக்குதல்

* பொது இடத்தில் தூற்றுதல் மற்றும் மரியாதையற்று பேசுதல்

* பாரபட்சமான ஊக்குவிக்கும் பாணி

* சேவை செய்யும் சரியான நபர்களை தாழ்வாக நடத்துதல்

* அதிகபட்ச கட்டுப்பாடு

மேற்கூறிய காரணிகளை புறந் தள்ளும் நிறுவனங்கள் தைரியத்தை விதைக்கும். மாறாக பழக்கத்தில் பற்றிக் கொள்ளும் நிறுவனங்கள் பயத்தை ஊற்றாய் பெருக்கெடுக்க வைக்கும்.

நூலாசிரியர் பயத்தை வெல்ல தன்னுடைய பரந்து பட்ட அனுபவத்திலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும், இராக், ஆப்கானிஸ்தான் போர்களங்களிலும் கண்டு, கேட்டு, உள்வாங்கி, உணர்வு பூர்வமாக பெற்ற தார்மீக தைரியத்தை தெளிவாக எழுதியுள்ளார். ‘கேலப்’(Gallop) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் ஆலோசகராக வெற்றிக்கு தடைகளை தகர்ப்பது பற்றி எழுதியுள்ள இந்த நூல் பயம் என்ற தடையை தகர்க்கும். உங்கள் பயத்தை தகர்க்க தவறாமல் படியுங்கள். எளிதான, குழப்பம் இல்லாத, எண்கள் இல்லாத உணர்வு பூர்வமான புத்தகம்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x