Published : 06 Dec 2014 11:52 AM
Last Updated : 06 Dec 2014 11:52 AM

டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கிறது. ஒரு வருடத்துக்கு மேலான டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கிகள் சில நாட் களுக்கு முன்பு வட்டி விகிதத்தை குறைத்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடங்களுக்குள்ளான டெபாசிட்களுக்கு சில மாதங்களுக்கு முன்பே எஸ்.பி.ஐ வட்டி விகிதத்தை குறைத்தது.

வரும் திங்கள் கிழமை முதல் ஒரு வருடங்களுக்கு மேல் ஐந்து வருடங்களுக்குள் இருக்கும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 8.50 சதவீதமாக இருக்கும். முன்னர் இது 8.75 சதவீதமாக இருந்தது. ஐந்து வருடங்களுக்கு மேலான டெபாசிட்டுகளுக்கு 8.50 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

இது சிறுமுதலீட்டாளர்கள் செய்யும் ஒரு கோடி ரூபாய்க்கும் கீழான டெபாசிட்டுகளுக்கு என்று வங்கி தெரிவித்திருக்கிறது. மற்றுமொரு பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கி 6 மாதம் முதல் 20 வருடங்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 0.50 சதவீதம் வரை வட்டி விகிதத்தை நேற்று முன் தினம் குறைத்தது.பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதங்கள் குறைவதாக யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கருவூலபிரிவின் பொதுமேலாளர் கே.என். ரங்க நாதன் தெரிவித்தார்.

இதுபோன்ற வட்டி விகித குறைப்புகள் வரும் காலத்தில் மேலும் பல வங்கிகள் மேற்கொள்ளலாம் என்றும், வட்டி குறைப்பு ஆரம்பித்துவிட்டது, விரைவில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என்ற கணிப்புகள் ஆரம்பித்துவிட்டன.

இந்திய கார்ப்பரேட் நிறுவ னங்கள் மற்றும் பல தொழில் அமைப்புகள் இவற்றை பல காலமாக வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த டிசம்பர் 3-ம் தேதி ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அடுத்த ஆண்டில் இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது. ஏப்ரல் 2012 முதல் ஜூலை 2013 வரை ரிசர்வ் வங்கி 1.25 சதவீத அளவுக்கு ரெபோ விகிதத்தை உயர்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x