Last Updated : 04 Dec, 2014 11:26 AM

 

Published : 04 Dec 2014 11:26 AM
Last Updated : 04 Dec 2014 11:26 AM

இந்திய உருக்கு ஆலைகள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளன: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

இந்திய உருக்கு ஆலைகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளன என்று மத்திய உருக்கு மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் விஷ்ணு தேவ் சாய் கூறினார்.

மாநிலங்களவையில் இந்திய உருக்கு ஆலைகளின் நிலை குறித்த கேள்விக்கு விளக்கமளிக்கையில், பிளாஸ்ட் பர்னஸ் உற்பத்தி மற்றும் எரிசக்தி நுகர்வு தொழில்நுட்பத்தில் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய நிறுவனங்கள் மிகவும் பழமையான தொழில்நுட்பத்தைப பின்பற்றுவது புலனாகும்.

பிளாஸ்ட் பர்னஸ் எனப்படும் உலை பயன்பாடு மூலம் ஒரு நாளைக்கு 2.8 டன் உருக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வ தேச நிறுவனங்கள் நாளொன்றுக்கு 3.5 டன் உருக்கு உற்பத்தி செய்கின்றன.

இதேபோல பன்னாட்டு நிறுவனங்கள் நுகரும் எரிசக்தி அளவும் மிகக் குறைவாக உள்ளது. நிலக்கரி உபயோகத்திலும் இந்திய நிறுவனங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவு அதிகமாக உள்ளது என்றார்.

கிரீன்பீல்டு உருக்கு ஆலைகள் அதாவது 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்டவை மட்டுமே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. மிகக் குறுகிய காலத்தில் இவை பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உற் பத்தி பலமடங்கு அதிகரித்துள்ளது. இவற்றினால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

அதேசமயம், பழைய ஆலைகள் நவீனமயமாக்குவது மற்றும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை மிகவும் மெதுவாக மேற்கொள்கின்றன. இவற்றுக்கு மூலப் பொருள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு, மிகவும் பழைய தொழில்நுட்பம், வருவாய் குறைவு உள்ளிட்டவை இவற்றின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாகும்.

மேலும் மூலப் பொருள் எடுத்துச் செல்வது, அவற்றின் விலை, உற்பத்திப் பொருள்களை சந்தைக்கு சென்று சேர்ப்பதில் இந்நிறுவனங்கள் இன்னமும் பின்தங்கியே உள்ளன என்றார்.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரை யான காலத்தில் சீனாவிலிருந்து 3.59 லட்சம் டன் இரும்பு பாளங்கள் மற்றும் இரும்பு உருளைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில் அவர் தெரிவித்தார்.

இரும்புத் தாது மற்றும் இரும்பு துகள்கள்(பில்லட்டுகள்) ஏற்றுமதி மீது அதிக வரி விதிப்பது அல்லது அதை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இப்போதைக்கு இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நஷ்டம் ரூ. 5,312 கோடி

அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களால் அரசுக்கு மொத்தம் ரூ. 5,312 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மக்களவையில் இது குறித்து அவர் அளித்த பதிலில் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் ரூ. 3,785 கோடி நஷ்டமும், எம்டிஎன்எல் நிறுவனத்தால் ரூ. 1,567 கோடி நஷ்டமும் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

வருமானம் குறைந்தது, செலவு அதிகரித்ததால் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், இப்போதைக்கு இவ்விரு நிறுவன பங்குகளையும் விற்கும் யோசனை அரசின் பரிசீலனையில் இல்லை என்றார். இவ்விரு நிறுவனங் களையும் மீண்டும் லாபகரமாக செயல்படுத்த குறுகிய கால திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். நீண்ட காலஅடிப்படையில் இவ்விரு நிறுவனங்களையும் இணைக்க முடிவு செய்துள்ளாக அவர் கூறினார்.

தரைவழி தொலைபேசி உபயோ கிப்பு குறைந்தது, ஜிஎஸ்எம் விரிவாக்க நடவடிக்கையை கால தாமதமாக எடுத்தது உள்ளிட்டவை மிக முக்கிய காரணமாகும் என்றார் பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x