Published : 26 Aug 2017 10:36 AM
Last Updated : 26 Aug 2017 10:36 AM

சாம்சங் துணைத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை

லஞ்சம் அளித்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் அதிபரை பதவி இறக்கம் செய்யும் அளவிற்கு லஞ்சம், ஊழல்களை புரிந்ததாக லீ ஜே யோங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மின்னணு தொழில் துறையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அந்நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள உள்ள முதலீட்டு நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் எடுப்பது தடைபடும்.

49 வயதான லீ ஜோ யோங், சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்துக்கு கைவிலங்கிடப்பட்ட நிலையில் வாகனத்தில் அழைத்து வரப்பட்டார்.

கொரிய அதிபர் பார்க் கெயூன் ஹையின் நெருங்கிய நண்பருக்கு 4 கோடி டாலரை அளித்து அதன் மூலம் சில காரியங்களை சாதிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

லீ ஜோ யோங் அளிக்கும் லஞ்சத்துக்கு கைமாறாக கொரிய அதிபர், சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவாக கொள்கை வகுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். அதிலும் சாம்சங் சாம்ராஜ்யத்துக்கு தந்தைக்குப் பிறகு தான் வருவதில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என்பது முக்கியமானதாகும். இவரது தந்தை மாரடைப்பு காரணமாக 2014-ம் ஆண்டிலிருந்து படுத்த படுக்கையாக இருக்கிறார். இதனால் நிர்வாகத்தை தானே எடுத்து நடத்துவதில் அரசு தரப்பில் எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்தத் தொகை அளிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டது. ஆனால் லீ யோ யோங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிபர்தான் நிறுவனத்துக்கு நெருக்குதல் அளித்து பணத்தை பெற்றதாக வாதாடினார். இவ்விதம் நிறுவனம் மூலமாக அளிக்கப்பட்ட பணம் லீ-க்கு தெரியாது என்றும் கூறினார்.

இந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் நான்கு முக்கிய உயர் அதிகாரிகளுக்கும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப் போவதாக லீ வழக்கறிஞர் கூறினர்.

கொரிய அதிபருக்கு எதிராக கடந்த ஆண்டு மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆயிரக் கணக்கானோர் வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சாம்சங் நிறுவனத்துக்கெதிராகவும் கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது. -ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x