Published : 20 Sep 2013 12:01 PM
Last Updated : 20 Sep 2013 12:01 PM

ரெப்போ விகிதம் அதிகரிப்பு எதிரொலி: பங்குச்சந்தையில் வீழ்ச்சி

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் அதிகரித்தன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி நிலவுகிறது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் 60.47 புள்ளிகள் உயர்ந்து 20,586.17 ஆக இருந்தது.

இதையடுத்து, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் அதிகரித்து, அதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. இதன்மூலம், ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மீதான மறு ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால், வீடு மற்றும் வாகன கடன் வட்டி மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.

அதேவேளையில், வங்கிகளின் இருப்புக்கான சி.ஆர்.ஆர். விகிதத்தை எந்த மாற்றமும் இல்லாமல், 4.0 சதவீதத்தில் நீடிக்கச் செய்வது என ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் நிதிக்கொள்கை கூட்டத்தில், ரெப்போ ரேட்டை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டது கவனத்துக்குரியது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையின் எதிரொலியால், மும்பை பங்குச்சந்தையில் இன்று பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 561 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,084 ஆக இருந்தது.

இதனிடையே, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 180 புள்ளிகள் சரிந்து 5,935 ஆகக் காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x