Published : 22 Nov 2014 11:37 AM
Last Updated : 22 Nov 2014 11:37 AM

நீல்கிரிஸ் நிறுவனத்தை வாங்குகிறது பியூச்சர் குழுமம்

கிஷோர் பியானி தலைமையில் செயல்படும் பியூச்சர் கன்ஸ்யூமர் என்டர்பிரைசஸ் தென்னிந்தியாவில் செயல்பட்டு வருடம் சங்கித்தொடர் சில்லறை வர்த்தக நிறுவனமான நீல்கிரிஸ் நிறுவனத்தை 300 கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறது.

நீல்கிரிஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் பியூச்சர் குழுமம் வாங்குகிறது. இந்த இணைப்பு மூலம் தென்னிந்தியாவில் தங்களது பலத்தினை அதிகரிக்க முடியும் என்றும் பியூச்சர் குழும நிறுவனர் கிஷோர் பியானி தெரிவித்தார்.

இப்போதைக்கு வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில் பிரதானமாக இருக்கிறது பியூச்சர் குழுமம். தென்னிந்தியாவில் தடம் பதிக்க கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நீல்கிரீஸ் நிறுவனம் பிரான் ஸைசி அடிப்படையில் தென் இந்தியாவில் 140 கடைகளுடன் செயல்பட்டுவருகிறது. மேலும் பால், பேக்கரி, சாக்லேட் உள்ளிட்ட இதர தயாரிப்புகளுக்கான தொழிற் சாலையும் இந்த நிறுவனத்துக்கு பெங்களூருவில் இருக்கிறது.

மேலும், பொருட்களை வாங்கும் பிரிவு, சேமிக்கும் பிரிவு, லாஜிஸ்டிக்ஸ், கடைகளுக்கு தேவையான தொழில்நுட்பம் வழங்கும் பிரிவு, 8 வினியோக நிலையங்கள், பொருட்களை கொண்டு செல்வதற்கான வாக னங்கள், குளிர்சாதன பெட்டி இருக்கும் வாகனங்கள் உள்ளிட்ட வற்றையும் நீல்கிரிஸ் நிறுவனம் கொண்டிருக்கிறது.

நீல்கிரிஸ் நிறுவனத்தின் பால் பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவை பியூச்சர் குழுமத்தின் பிக்பஜார், புட்ஹால் கடைகளில் விற்கப்படும்.

அதேபோல பியூச்சர் குழும பொருட்களான டேஸ்டி டிரீட், கோல்டன் ஹார்வெஸ்ட், பிரீமி யம் ஹார்வெஸ்ட் ஆகியவை நீல்கிரீஸ் கடைகளில் விற்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருக் கிறது.

மேலும் நீல்கிரிஸ் நிறுவனம் பிரான்ஸைசி மூலம் கடைகளை விரிவுபடுத்தி வருகிறது. அது மேலும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னோடி...

முறைப்படுத்தப்பட்ட இந்திய ரீடெய்ல் துறையின் முன்னோடி என்று நீல்கிரிஸ் நிறுவனத்தை சொல்லலாம். முத்துசுவாமி முதலியார் 1905-ம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து நிறுவனத்தை வாங்கி நீல்கிரிஸ் டெய்ரி பார்ம் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.1922-ம் ஆண்டு ஊட்டியிலும் 1936-ம் ஆண்டு பெங்களூருவிலும் கடையை திறந்தார். முத்துசுவாமியின் மகன் சென்னியப்பன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று ரீடெய்ல் துறை செயல்படுவதை கவனித்து இங்கு அதனை செயல்படுத்த ஆரம்பித்தார்.

1945-ம் ஆண்டு பெங்களூருவில் இருக்கும் கடையில் பால் பொருட்களுக்கான தனிப்பிரிவை தொடங்கினார்கள். அதன் பிறகு பேக்கரி பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள்.

1962-ம் ஆண்டு பால் பண்ணை ஆரம்பித்தார்கள். இப்போது ஒரு நாளைக்கு 50,000 லிட்டர் பாலை பதப்படுத்தி பால் சார்ந்த பொருட்களை தயாரிக்கிறார்கள். இப்போதைக்கு நீல்கிரிஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் பால் சார்ந்த பொருட்களின் விற்பனை 30 சதவீத அளவுக்கு இருக்கிறது. 1982-ம் ஆண்டு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தினார்கள். 1992-ம் ஆண்டு பிரான்ஸைசி முறையில் விரிவாக்கம் செய்ய ஆரம்பித்தார்கள்.

2006-ம் ஆண்டு நிறுவனத்தின் 67 சதவீத பங்குகளை Actis பிரைவேட் ஈக்விட்டி பண்ட் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்கள். மீத பங்குகள் குடும்ப உறுப்பினர்கள் வசம் இருந்தது. Actis நிறுவனம் சி.இ.ஓவை நியமித்தது. புதிய சி.இ.ஓ. பொறுப்பேற்ற பிறகுதான் விரிவாக்க நடவடிக்கைகளில் நிறுவனம் வேகமாக இயங்கியது.

மார்ச் 2014-ம் ஆண்டு முடிவில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 765 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த செய்தி வெளியான உடன் பியூச்சர் கன்ஸ்யூமர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x