Published : 03 Jan 2014 01:13 PM
Last Updated : 03 Jan 2014 01:13 PM

பங்குச் சந்தையில் கடும் சரிவு

பங்குச் சந்தையில் புத்தாண்டின் இரண்டாம் நாளன்றே பெரும் சரிவு ஏற்பட்டது. வியாழன் அன்று 252 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 20,888 புள்ளிகளானது. நவம்பர் 21-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரும் சரிவு இதுதான். கடந்த 9 வர்த்தக தினங்களில் 21000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ் சரிவது இதுதான் முதல் முறை.

தேசிய பங்குச் சந்தையில் 85 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 6221 புள்ளிகளானது. முதலீட்டாளர்கள் தங்களது லாங் பொஷிசன்களை குறைத்து, ஷார்ட் பொஷிசன்களை அதிகரித்தது, லாபத்தை வெளியே எடுத்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. மேலும் ஹெச்.எஸ்.பி.சி. நிறுவனத்தின் பி.எம்.ஐ. குறியீடும் {purchasing managers' index -PMI.} முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறவில்லை. டிசம்பர் மாத குறியீடு 50.7 ஆக இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய மாதத்தில் 51.3 என இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானம், எரிசக்தி, வங்கித்துறை என அனைத்துத் துறைகளின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. கடந்த நவம்பரில் பங்குச் சந்தையில் 406 புள்ளிகள் சரிந்ததே மிகப் பெரும் வீழ்ச்சியாகும். பி.எஸ்.இ. மிட்கேப் குறியீடு 1.77 சதவீதமும், பி.எஸ்.இ. ஸ்மால்கேப் இண்டெக்ஸ் 2 சதவீதமும் சரிந்தது.

ஆசிய பிராந்தியத்தில் சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிவில் முடிந்தன. ஹாங்காங், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. ரியால்டி துறை பங்குகள் 3.07 சதவீதமும், கேபிடல் குட்ஸ் 2.84 சதவீதமும், எரிசக்தித் துறை பங்குகள் 2.09 சதவீதமும், வங்கித் துறை பங்குகள் 1.82 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

ஐடிசி, லார்சன் அண்ட் டியூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. முக்கியமாக 30 முன்னணி நிறுவனப்பங்குகளில் 25 நிறுவனப் பங்குகளின் விலைகள் சரிவைச் சந்தித்தன. மொத்தம் 1,564 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,038 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,636 கோடியாகும்.

ஜனவரி 10-ம் தேதி முதல் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வர இருக்கிறது என்பதையும் முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x