Last Updated : 25 Jul, 2016 06:03 PM

 

Published : 25 Jul 2016 06:03 PM
Last Updated : 25 Jul 2016 06:03 PM

ரூ.32,510 கோடிக்கு யாகூவை வாங்குகிறது வெரிஸான்

யாகூ நிறுவனத்தை வெரிஸான் கம்யூனிகேஷன்ஸ் வாங்குவதாக அறிவித்திருக்கிறது. 483 கோடி டாலர் (ரூ. 32,510 கோடி) கொடுத்து யாகூவை வாங்குகிறது வெரிஸான். யாகூ நிறுவனத்தை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில் இதில் வெரிஸான் வெற்றி பெற்றுள்ளது.

டாட்காம் குமிழுக்கு (Dotcom Bubble) முன்பு இந்த நிறுவனத்தின் மதிப்பு 10,000 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த இணைப்பில் யாகூ நிறுவனம், சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில் வைத்துள்ள 15 சதவீத பங்கு மற்றும் யாகூ ஜப்பான் நிறுவனத்தில் உள்ள 35.5 சதவீத பங்கு போன்றவற்றைத் தவிர்த்து இந்த இணைப்பு நடக்கிறது. இந்த இரண்டு நிறுவனப் பங்குகளின் மதிப்பு 4,000 கோடி டாலர் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்தவருடம் முதல் காலாண்டில் இந்த இணைப்பு முழுமையடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாகூ நிறுவனத்தின் சர்ச், கன்டென்ட், அட்வர்டைசிங், உள்ளிட்டவற்றை வெரிஸான் வாங்கியுள்ளது. ஏஓஎல், டெக்கிரன்ச் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பிராண்டுகளும் வெரிஸான் வசம் உள்ளன.

இணையதள நிறுவனங்களில் முன்னோடி நிறுவனங்களுள் ஒன்றான யாகூவின் முடிவு இப்படியாகும் என்பது யாரும் எதிர்பார்க்காதது. கடந்த 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,400 கோடி டாலர் கொடுத்து யாகூவை வாங்க முன்வந்தது. ஆனால் யாகூ மறுத்துவிட்டது. அதேபோல பேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களை வாங்கும் முயற்சியை ஒரு காலத்தில் மேற்கொண்ட யாகூ நிறுவனம் தற்போது சந்தை வாய்ப்பை இழந்து வெரிஸான் நிறுவனம் வாங்கும் அளவுக்கு சுருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. தவிர கடந்த சில வருடங்களில் தேவையற்ற சில நிறுவனங்களையும் யாகூ வாங்கியது. அந்த நிறுவனங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை.

இது ஒரு முக்கியமான நாள். யாகூவை நான் விரும்புகிறேன். யாகூவில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வருடம் ஏஓஎல் நிறுவனத்தை 440 கோடி டாலர் கொடுத்து வெரிஸான் வாங்கியது. வெரிஸான் மற்றும் யாகூ ஆகிய நிறுவனங்களை யாகூ இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x