Published : 18 Jun 2016 10:02 AM
Last Updated : 18 Jun 2016 10:02 AM

3-வது ஆலை தொடங்கும் பணியை விரைவுபடுத்துங்கள்: ஹூண்டாய் ஆலைக்கு மத்திய அமைச்சர் அறிவுரை

தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் மூன்றாவது ஆலையை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தொடங்கலாம். ஆனால் ஆலை தொடங்கும் பணியை தாமதப்படுத்த வேண்டாம் என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்லும் இத்தருணமே ஆலை தொடங்குவதற்கு ஏற்ற சமயமாகும். எனவே மூன்றாவது ஆலை தொடங்கும் திட்டத்தை தாமதப்படுத்த வேண்டாம் என்று ஹூண்டாய் நிர்வாகிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் ஃபிக்கி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கொரிய-இந்திய கட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர், மூன்றாவது ஆலை தொடங்கும் திட்டம் தாமதமாவதற்கு போதிய காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் தொடங்கலாம் என முடிவு செய்தபிறகு அதை தாமதம் செய்ய வேண்டாம். புதிய ஆலை தொடங்குவதற்கு இதுவே ஏற்ற தருணம். அதற்கான அறிவிப்பை வெளியிடுங்கள் என்று ஹூண்டாய் நிர்வாகிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

கார் உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம். இந்நிறுவனத்துக்கு தமிழகத் தலைநகர் சென்னையை அடுத்த பெரும்புதூரில் இரண்டு ஆலைகள் உள்ளன. இந்தியாவில் இரண்டு ஆலைகள் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது ஆலையைத் தொடங்குவது பிரச்சினையாக இருக்க முடியாது. மேலும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து வருகிறது என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இதனிடையே கடந்த பிப்ரவரியில் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமைச் செயல் அதிகாரி யங் கே கூ பேசுகையில் தற்போது உள்ள இரண்டு ஆலைகளின் உற்பத்தித் திறன் போதுமான அளவுக்கு உள்ளது என்றும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதிகரித்து வரும் தேவையை இந்த ஆலைகள் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தென் கொரிய தலைநகர் சியோலில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் தலைவர் சுங் மோக் கூ பிரதமரை சந்தித்து பேச்சு நடத் தினார். அப்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், மூன்றாவது ஆலை அமைப்பது தொடர்பாக பேசப்பட்டதாகவும் தெரிகிறது. மூன்றாவது ஆலை அமைப்பதற்காக குஜராத், ஆந்திரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x