Last Updated : 05 Jun, 2016 02:42 PM

 

Published : 05 Jun 2016 02:42 PM
Last Updated : 05 Jun 2016 02:42 PM

வங்கிக் கடன் மோசடி செய்தவர்கள் நிம்மதியாக உறங்க முடியாது: அருண் ஜேட்லி எச்சரிக்கை

மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் 10 பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.15,000 கோடி நஷ்டம் அடைந்திருக்கும் நிலையில் வங்கிகளுக்கு மூலதன ஆதரவு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.

ஆனால், வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்பவர்கள் அனைத்துக் கவலைகளையும் வங்கிகளிடத்தில் விட்டுவிட்டு தாங்கள் நிம்மதியாக உறங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர், அது நடக்காது என்று எச்சரித்துள்ளார்.அதாவது வங்கிகளின் பாதுகாப்புக்கென்று சட்டங்கள், நடைமுறைகள் உள்ளன என்கிறார் அருண் ஜேட்லி.

அவர் மேலும் கூறும்போது வங்கிகளின் வாராக்கடன் அனைத்தையும் கடன் பாக்கி மோசடியுடன் தொடர்பு படுத்தக்கூடாது என்றும் வாராக்கடன்களின் பெரும்பாலான பகுதிகள் வர்த்தகம் தொடர்பான நஷ்டங்களின் விளைவே என்றார்.

“வங்கிகளின் இருப்புநிலை குறிப்புகளை கவனியுங்கள், பஞ்சாப் நேஷனல் வங்கி நல்ல லாபம் ஈட்டியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியும் நல்ல லாபம் ஈட்டியுள்ளது. அனைத்தையும் இருப்புநிலைக்குறிப்புக்குள் கொண்டு வரப்படுகிறதா இல்லையா என்பதல்ல விஷயம், வெளிப்படையான பேலன்ஸ் ஷீட் என்பதுதான் வர்த்தகம் செய்ய சிறந்த வழி, இதைத்தான் வங்கிகள் தற்போது கடைபிடித்து வருகின்றன.

எனவே வங்கிகளுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன், இது குறித்து பட்ஜெட்டிலும் குறிப்பிட்டுள்ளேன். ஆனாலும் பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையை விட கூடுதல் தொகை தேவைப்பட்டால் அதுவும் பரிசீலிக்கப்படும்.

வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்க திவால் சட்டம் ஒரு வழியாகும். அதே போல் ஆர்பிஐ-யின் உத்தி சார்ந்த கடன் மறுகட்டுமான முறையும் வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்க ஏற்படுத்தப் பட்டவையே.

கடன் மீட்புத் தீர்ப்பாயம் என்பதே வங்கிகளுக்கு பாதுகாப்பு அதிகாரம் அளிக்கும் திட்டமே. எனவே காலவரையற்ற முறையில் வங்கிகள் மட்டுமே கவலைப்பட வேண்டும், கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் கவலையை வங்கிகளிடம் விட்டுவிட்டு தாங்கள் நிம்மதியாக உறங்க முடியும் என்ற நிலை இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

கடன்கள் சரியாகவே வழங்கப்பட்டுள்ளன, ஆனால் சில துறைகளில் சரியான வர்த்தகம் கைகொடுக்கவில்லை.

வர்த்தகத்தில் ஏற்பட்ட கடன் எலும்புக்கூடு அல்ல. எனவே வாராக்கடன்கள் அனைத்துமே மோசடி என்று கூற முடியாது, எலும்புக்கூடு என்று கூறப்படுவது மோசடி, ஊழல் குறித்து கூறப்படுவது எனவே வங்கிகள் நஷ்டம், அல்லது லாபம் என்ற விவகாரத்தில் வாராக்கடன் பற்றி பேசும்போது நஷ்டத்தையும், மோசடியையும் நாம் பிரித்துப் பார்ப்பது அவசியம்.

மேலும் வாராக்கடன்களில் பல பழைய கடன்களே. சமீபத்தில் அளிக்கப்பட்டதல்ல. இதுவும் சில துறைகள் பின்னடைவு கண்டதால் ஏற்பட்ட விளைவு. இந்த தொழிற்துறைகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து முக்கியமாக பேசப்பட்டுள்ளது” என்றார்.

திங்களன்று பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டுத்திறன் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெறுகிறது என்று நிதியமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x