Published : 06 Jan 2014 10:20 AM
Last Updated : 06 Jan 2014 10:20 AM

லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

சென்றவாரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்தும் அவ்வகை முதலீடுகளில் என்.ஆர்.ஐ – களுக்கு உள்ள கவர்ச்சிகள் குறித்தும் பார்த்தோம். மியூச்சுவல் ஃபண்டுகளில் மூன்று வகை திட்டங்கள் உள்ளது என்றும் பார்த்தோம். அந்த மூன்று வகை திட்டங்களில் கடன் சார்ந்த திட்டங்கள் குறித்து இவ்வாரம் பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் தற்பொழுது கிட்டத்தட்ட 8.90 லட்சம் கோடி சொத்தை நிர்வகித்து வருகின்றன. இந்த சொத்தில் மிகவும் அதிகமான சதவிகிதம் கடன் சார்ந்த திட்டங்களில்தான் உள்ளது. கடன் சார்ந்த திட்டங்களிலும் ரிஸ்க்கே இல்லாத முதலீடுகள் மற்றும் குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடுகள் உள்ளன. கடன் சார்ந்த திட்டங்களை கீழ்கண்ட வகைகளாக பிரிக்கலாம்.

# லிக்விட் ஃபண்டுகள் (LIQUID FUNDS)

# அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் (ULTRA SHORT TERM FUNDS)

# ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் (SHORT TERM FUNDS)

# மீடியம் டேர்ம் ஃபண்டுகள் (MEDIUM TERM FUNDS)

# கிரிடிட் ஆப்பர்சூனிடீஸ் ஃபண்டுகள் (CREDIT OPPORTUNITIES FUNDS)

# இன்கம் ஃபண்டுகள் (INCOME FUNDS)

# கில்ட் ஃபண்டுகள் (GILT FUNDS)

நாம் கொடுத்த வரிசையிலேயே ரிஸ்க்கும் அதிகரிக்கும். முதல் இரண்டு ஃபண்டுகளில் அதாவது லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் ரிஸ்க்கே இல்லை எனக் கூறலாம். இந்த ஃபண்டுகள் தற்பொழுது ஆண்டிற்கு 8.5 முதல் 9.5% வருமானத்தை தந்து கொண்டு இருக்கின்றன. இந்த ஃபண்டுகளில் உள்ள மிகப் பெரிய கவர்ச்சி என்னவென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நாம் முதலீடு செய்யலாம்.

அதேபோல் எப்பொழுது வேண்டு மானாலும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக் கொள்ளலாம் இருந்த நாட்களுக்கு வட்டி கிட்டும். திருப்பி எடுப்பதற்கு பெனால்ட்டி ஏதும் இல்லை. என்.ஆர்.ஐ கள் இந்தியாவில் உள்ள தங்களது வங்கி சேமிப்பு கணக்குகளில் தங்களது பெண்ணின் திருமணத்திற்காகவோ அல்லது வீடு வாங்குவதற்காகவோ அல்லது படிப்புச் செலவுகளுக்காகவோ ஒரு பெரிய தொகையை போட்டு வைத்திருப்பார்கள்.

அது அவர்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். இதற்காகத்தான் அவர்கள் சேமிப்பு கணக்குகளில் பெருந்தொகைகளை வைத்துக் கொள்கிறார்கள். இதில் இரண்டு அசெளகரியங்கள் உள்ளன. ஒன்று குறைவான வட்டி விகிதம் மற்றொன்று திருட்டு. சேமிப்பு கணக்குகளுக்கு பெரும்பாலான வங்கிகள் ஆண்டிற்கு 4% வட்டியைத்தான் வழங்குகின்றன.

ஆனால் இவ்விதமான ஃபண்டுகளில் சேமிப்புக் கணக்கைப் போல இரண்டு மடங்கு வட்டி கிடைக்கும். தற்பொழுது ஆண்டிற்கு 8.50% - 9.50% வட்டி கிடைக்கிறது. இந்தியாவில் இன்னும் வங்கிகள் ஆன்லைனில் நடக்கும் திருட்டுகளுக்கு (Fraud) பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. அந்த பொறுப்பை வாடிக் கையாளர்களின் மீதே தள்ளிவிடுகின்றன. சமீபத்தில் சில வங்கிகளில் என்.ஆர்.ஐ –களின் கணக்குகளிலிருந்து பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகவே தேவைக்கு மேலாக சேமிப்பு கணக்குகளில் பணம் வைத்துக்கொள்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. அதற்குப் பதிலாக தேவைக்கு மேல் உள்ள பணத்தை லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் என்.ஆர்.ஐ-கள் முதலீடு செய்து கொள்வது நல்லது. கிடைக்கும் வட்டியோ ஃபிக்ஸட் டெபாஸிட்டிற்குச் சமம்; அதே சமயத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தை திருப்பி எடுத்துக் கொள்ளும் வசதி. இது போன்ற ஒரு உன்னதமான சேர்க்கை வேறு எந்த முதலீட்டிலும் நாம் பார்க்க இயலாது.

சரி இந்த இரண்டு வகையான ஃபண்டுகளும் எங்கு தாங்கள் திரட்டும் தொகையை எங்கு முதலீடு செய்கின்றன என்ற கேள்வி உங்களுக்கு எழும். இந்த ஃபண்டுகள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளுக்கும் நல்ல கிரெடிட் ரேட்டிங் கொண்ட தரமான நிறுவனங்களுக்கும் தினசரி அல்லது மிகக் குறுகிய காலத்திற்கு (சராசரி முதிர்வு காலம் பொதுவாக 120 நாட்களுக்கு கீழ்) தாங்கள் திரட்டும் தொகைகளை கடனாக வழங்குகின்றன.

ஆகவே இந்த ஃபண்டுகள் மிகவும் பாதுகாப்பானவை ஆகும். ஷார்ட் டேர்ம் மற்றும் மீடியம் டேர்ம் ஃபண்டுகளில் சற்று ரிஸ்க் இருக்கும். அடுத்த வாரத்தில் கடன் சார்ந்த திட்டங்களில் உள்ள மிகப்பெரிய கவர்ச்சியைப் பற்றி பார்ப்போம்.

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x