Published : 11 Jan 2017 10:10 AM
Last Updated : 11 Jan 2017 10:10 AM

இந்தியாவின் பலம் 3டி: மோடி பெருமிதம்

இந்தியாவின் பலம் 3-டியில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமைபடக் குறிப்பிட்டார். இந்தியாவின் மக்கள்தொகை (டெமோகிராபி), ஜனநாயகம் (டெமாக்ரஸி) மற்றும் தேவை (டிமாண்ட்) ஆகியனதான் இந்தியாவின் வலுவான அம்சங்கள் என்று வைப்ரன்ட் குஜராத் மாநாட்டில் தொழிலதிபர்கள் மத்தியில் பெருமைபடக் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக 8-வது வைப்ரன்ட் குஜராத் மாநாடு நேற்று தொடங்கி இம்மாதம் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஸ்திரமான பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு என்பதே இம்மாநாட்டின் முக்கிய கருப்பொருளாகும்.

இம்மாநாட்டில் மோடி மேலும் பேசியதாவது: இந்தியாவின் மிகப் பெரிய பலம் இங்குள்ள மக்கள்தொகைதான். சிலர் ஜனநாயக நாட்டில் வலுவான, விரைவான நிர்வாகம் இருக்காது என்று குறிப்பிடுவர். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இது சாத்தியமே என்று நிரூபித்துள்ளதோடு அதன் பலனையும் உணர்த்தியுள்ளோம்.

"தொழிலதிபர்களாகிய நீங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்க வேண்டாம். உங்களுக்கு எப்போதெல்லாம் நான் தேவைப்படுவேன் என்று நினைத்தால் அப்போதெல்லாம் என்னை அணுகலாம். நான் உங்களுடன் கரம் சேர்க்கத் தயாராக உள்ளேன்,’’ என்று மோடி குறிப்பிட்டார்.

முதலீட்டைப் பொறுத்தமட்டில் இவ்வளவுதான் தேவை என்று வரையறை கிடையாது. இதற்கு வானமே எல்லை. முதலீடுகளை ஈர்ப்பதற்கேற்ப முன்னேறிய கொள்கைகளை வகுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் இந்தியா ஒரு மிகச் சிறந்த கட்டுமானத்துறை சந்தையாக திகழ உள்ளது. இவை அனைத்துமே முதலீட்டாளர் சமூகத்துக்கு மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளாகும்.

இந்திய மக்கள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டுக்குள் குடியிருப்பு களை உருவாக்கித் தர திட்டமிட் டுள்ளோம். அதேபோல அனை வருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதே இலக் காகும். இந்தியாவில் 35 வயதுக் கும் கீழ் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 80 கோடியாகும். சுற்றுச் சூழலை பாதிக்காத எரிசக்தியை உருவாக்கத் திட்ட மிட்டுள்ளோம். விரைவான ரயில் போக்குவரத்து வசதியை உருவாக் குவது, கனிம வளங்களைக் கண்டறிவது மற்றும் நகர்ப்புற வசதிகளை மேம்படுத்தி வலுப் படுத்துவது ஆகியவையே அரசின் பிரதான நோக்கமாகும்.

உலகிலேயே உற்பத்தித் துறையில் 6-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. முன்னர் 9-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது முன்னேறியுள்ளது. கிராமப்பகுதியையும் ஒருங் கிணைத்த வளர்ச்சியை உருவாக் குவதே அரசின் பிரதான குறிக்கோளாகும். மேக் இன் இந்தியா திட்டம் மிகவும் வலுவான திட்டமாக உருவாகியுள்ளது. இதன் மூலம் உற்பத்தித்துறை, வடிவமைப்பு மற்றும் புத்தாக்கங்களின் பிறப்பிடமாக இந்தியா வளரும். இத்திட்டம் வெற்றிகரமாக தனது இரண்டாம் ஆண்டைக் கொண்டாடுகிறது.

சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் அனைத்து மதிப்பீடுகள், தரம் உள்ளிட்டவற்றை நோக்கி முன்னேறி வருகிறோம். எங்களது கொள்கை மற்றும் நடைமுறைப்படுத்துதலால் மிகச் சிறந்த பயன் கிட்டியுள்ளது எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக கட்டுப் பாடுகளை தளர்த்தியுள்ளோம். இந்தியாவில் தற்போது வெளிப்படையான பொருளாதாரம் நிலவுகிறது. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உரிய சூழலை ஏற்படுத்துவதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதே தனது முன்னுரிமைப் பணி என்று நரேந்திர மோடி கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x