Last Updated : 02 Jun, 2017 09:54 AM

 

Published : 02 Jun 2017 09:54 AM
Last Updated : 02 Jun 2017 09:54 AM

வணிக நூலகம்: உணர்வுகள் மேம்பட வேண்டும்

ஃப்ரிடு (FREUD) என்ற உளவிய ளாலார் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை சரி என்றும், மறுத்தவர்களை தவறு என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், டேவிட் பர்ன்ஸ் (DAVID BURNS) என்ற இந்த நூலாசிரியர் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை மறுத்தும், சரி என்று ஒப்புக் கொண்டவர்களை உணர்வுகள் மேம்படும் வகையில் உருவாவார்கள் என்றும் வகைப்படுத்தினார். மன அழுத்தம் என்பது அறிந்தும் அறியாதது, தெரிந்தும் தெரியாதது. நல்ல உணர்வு களைக் கொண்டிருப்பதைப் போன்ற மோசமான எழுச்சி நிலையாகும்.

மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களை பற்றிய எண்ணங்களையும், அவர்களுடைய உண்மையான வெற்றி களையும் மாறுபாடான கோணத்தில் அணுகுவார்கள். மன அழுத்தம் என்பது எதிர்மறையான சரியில்லாத எண்ணங்களின் சுழற்சியாகும். அது போன்ற சுழற்சிகள் மனச்சோர்வுகளை அதிகரிக்கும். மனச்சோர்வு என்ற வட்டத்திற்குள் சென்றவர்கள் மன அழுத்தம் என்ற சுழற்சியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டிது தான்.

இந்த உள்ளுணர்வுகள் எண்ணங் களின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்து வதற்கு தேவையானதாக அமையும். எண்ணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படுவது இயலுமா என்ற கேள்விக்கு எண்ணங்கள் தான் செயல்களை தீர்மானிக்கின்றன என்ற அடிப்படையில் அறிவுபூர்வமான மருத்துவ முறை களை பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள். தங்களைப் பற்றிய வேறுபட்ட தவறான சுய மதிப்பீடுகளை எண்ணங்கள் மூலம் ஒவ்வொரு முறையும் மாற்றிக்கொண்டே வரும் பொழுது மதிப்பீடுகள் மாறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற ஆய்வுகள் மன அழுத்தத் திற்கான ஆய்வுகளின் மிகப்பெரிய தூண் என்று சொன்னால் அது மிகையாகாது.

உணர்வுகளை மேம்படுத்துதல் என்பது ஒரு செயல் முறையாகும். நூலாசிரியர் தன்னுடைய மருத்துவ முறைகளிலும், ஆய்வுகளிலும் இதை பயன்படுத்தி அறிவுசார் மருத்துவ முறைகளுக்கும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்துள்ளார். இது போன்ற புத்தகங்கள் சில நேரங்களில் படிப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும், மனம், எண்ணங்கள், உணர்வுகள் பற்றி சில உண்மைகளைப் புரிய வைக்கிறது.

தவறுகள் பாவங்கள் அல்ல. தவறுகள் தீமைகள் அல்ல என்பதை உணர்ந்து புரிந்துகொள்ள கீழ் வரும் மூன்று கூறுகள் பெரிதும் உதவுகின்றன.

1. நம்ப இயலாத மன அழுத்தக் காரணிகள்

2. உணர்வுகள் உண்மையல்ல

3. குறைந்த எரிச்சல் ஈவுகள்

நம்ப இயலாத மன அழுத்தக் காரணிகள்

மன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் உளவியலின் வரலாற்றில் மன அழுத்தம் என்பது மெய்பாடுகளின் குறைபாடுகள் என்றும், சீர்குலைவுகள் என்றும் முத்திரை குத்தப்பட்டுள்ளது. அறிவுசார் மருத்துவ முறைகள் அறிவு பூர்வமான தவறுகளை ஏற்படுத்தவோ அல்லது மோசமானதாக சித்தரிக்கவோ மன அழுத்த நோய் குறியீடாக பயன்படுத்தப்பட்டது. எதிர்மறை எண்ணங்கள் பனிப்பந்து விளைவுகளை ஏற்படுத்தும். எவ்வாறு பனிப் பாறைகள் ஒன்றின் மேல் ஒன்று விழுகின்றனவோ அதே போன்று ஒவ்வொரு எண்ணங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து வேதனைகளையும், சோகங்களைம் கூட்டிக் கொண்டே போகும்.

மாறாக, எண்ணங்கள் சரியான முறையில் செயல்படும் பொழுது அறிவுசார்ந்த மருத்துவ முறைகள் தன்னைப் பற்றிய நம்பிக்கைகளையும், தன்னைப் பற்றிய மதிப்பீடுகளையும் ஒவ்வொரு படியாக மேலே ஏறுவதற்கு உதவியாக அமைகின்றன. வருத்தம் என்றால் மனித வாழ்வில் ஒரு பகுதி. அது சுய அறிவை வளர்க்கும் மாறாக மன அழுத்தம் என்பது வாழ்வின் அனைத்து சாத்திய கூறுகளையும் அடைத்துவிடும். எனவே, மன அழுத்தம் என்பது வேறு, வருத்தம், மன சோர்வு என்பது வேறு. இவைகளைப் பிரித்துப் பார்த்தால் உணர்வுகள் மேம்படும்.

உணர்வுகள் உண்மையல்ல

மெய்பாடுகள் நம்மை ஏமாற்றும், முட்டாளாக்கும். மெய்பாடுகள் சரியானவை என்றும் நம்மை பற்றிய தவறான உணர்வுகள் சவால்களை எதிர்கொள்ள முடியாது என்றும் நாம் எண்ணிக் கொண்டே இருப்போம். எண்ணங்கள் உந்தக்கூடிய உணர்வுகள் முரண்பட்டவைகளாக இருந்தால் அது மிகப்பெரிய கேள்விகுறியாகும். நூலாசிரியர் வெகு அழகாக உணர்வுகள் உண்மையல்ல என்று கூறுகிறார். ஏனென்றால் உணர்வுகளுக்கு தரவுகள் கிடையாது. அந்த தரவுகளை மெய்ப்பிக்கவோ, தள்ளுவதற்கோ வாய்ப்புகள் இல்லை. உணர்வுகளால் மட்டுமே மேம்பாடு அடைய முடியாது. உணர்வுகள் மேம்பட எண்ணங்கள் துணை செய்ய வேண்டும். மிகப் பெரிய மனிதன் அல்லது மதிப்புமிக்க மனிதன் என்ற உணர்வு நம்மை மகாமனிதனாக நினைக்கச் செய்யுமா? அல்ல உணர்வுகள் மட்டுமே மனித செயல்களுக்கு ஆதாரங்கள் ஆகாது உணர்வுகளும் எண்ணங்களும் இணையும் பொழுது அறிவுசார் மருத்துவம் அங்கே பயன்பாட்டிற்கு வருகிறது. ஏனென்றால் தன்னை பற்றி மிகவும் கீழாகவும், மோசமாகவும் உணருபவர்கள் உண்மையிலேயே அவ்வாறு இருக்கிறார்கள் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உறவுகள் மெய்ப்பாடுகளைத் தூண்டும். பகுத்தறிவான எண்ணங்கள் சரியான செயல்களை நோக்கிச் செல்லும்.

குறைந்த எரிச்சல் ஈவுகள்

எரிச்சலும், சின மூட்டும் உணர்வும் மன அழுத்தத்தின் வெளிப்பாடு. சினமும் எரிச்சலுட்டும் உணர்வும் கோபத்தை உள் நோக்கித் திருப்பும். அவ்வாறு உள் நோக்கி செலுத்தப்பட்ட சினம் அல்லது கோபம் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கனமான அந்த அழுத்தம் மன அழுத் தம் எனப்படும். அந்த மன அழுத்தம் வெளிப்படும் பொழுது சினமும் சினம் சார்ந்த சில கூட்டு செயல்களும் வெளியாகும். அறிவுசார்ந்த மருத்துவ முறை சினத்தை தவிர்ப்பதற்கு வழி முறைகளை சொல்வதோடு அவற்றில் இருந்து வெளிவர வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

சினம் என்னும் “சேர்ந்தாரைக் கொல்லி” நிகழ்வுகளால் ஏற்படுவது அல்ல. எண்ணங்களால் ஏற்படுவது. நிகழ்வுகளை நமக்கு தொடர்புடைய எண்ணங்களாக மாற்றிகொள்ளும் பொழுது கோபம் அரங்கேறுகிறது. அரங்கேறும் கோபம் அங்கேயே நின்று போவதில்லை. அடுத்தடுத்து சில செயல்களைச் செய்கிறது. அவ்வாறு செய்யும் பொழுது அழுத்தம் அதிகமாகிறது. மன அழுத்தம் மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. விமர்சனம் என்பது சரியோ தவறோ. ஆனால், விமர்சனத்திற்கு சில கேள்விகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு விமர்சனத்திற்கு உள்ளான கேள்விகள் என்ன சொன்னோம் என்பதை பற்றியும் நம்மை பற்றிய நடத்தைகளை மாற்றிக்கொள்வதற்கு வாய்ப்பாகவும், அந்த மனிதரின் எண்ணக் குலைவுகளுக்கும் விடைகளாகவும் அமைகின்றது. எதிர்மறை மெய்பாட்டு எழுநிலை தேவையில்லை. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது தள்ளலாம். ஏற்றுக் கொண்டால் எழுச்சிக்கு வாய்ப்பு, தள்ளினால் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். சுய மதிப்பீட்டு குறைபாடுகளினால் அல்லது சுய மதிப்பீடுகளின் ஊதிப் பெரிதாக்கப்பட்ட காற்று பைகளினால் சினம் ஏற்படுகிறது. சினத்தை தவிர்பதன் மூலம் தன்னை பற்றிய மதிப்பீடுகளை சரிவர ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நூலை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் ஒரு சவால் உள்ளது. இதை சரி வர கொடுக்க முடியாது என்ற சவாலை ஏற்று பாதி அளவாவது அடித்தள கருத்துகளை எடுத்து கூறியிருப்பது சவாலான விஷயம் தான். சினத்தைத் தவிருங்கள். உணர்வுகனை மேம்படுத்துங்கள். வானமே எல்லை, எதிர்க்க யாருமே இல்லை.

தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x