Published : 08 Apr 2019 12:44 PM
Last Updated : 08 Apr 2019 12:44 PM

திட்டினால் கொட்டுமாம் ஓட்டு!

டீவியை போட்டாலே பாழாய்போன விளம்பரங்கள் தான் என்று புலம்பும் கேஸா நீங்கள். இதற்கே புலம்பினால் எப்படி? வரும் காலங்களில் உங்களை வச்சு செய்ய ஒரு கூட்டமே ரெடி. முதலில் ஐபிஎல் விளம்பர சத்தம். பின் கிரிக்கெட் உலக கோப்பை ஆரம்பம். கேட்கவே வேண்டாம், கச்சேரி உச்சஸ்தாயியை எட்டும். இதற்கிடையே தேர்தல் வேறு. அரசியல் கட்சிகளின் அபஸ்வரம் அமோகமாய் அரங்கேறும். இத்தனை நாள் டீவி போட்டால் தானே விளம்பரம் என்று புலம்பினீர்கள், இனி டீவியை அணைத்தால் கூட விளம்பரம் வரும்.

அதுதான் பொழுதன்னைக்கும் அரசியல்வாதி அலப்பறை அதிகமாக இருக்கிறதே, தினசரிகளில் முகம் காட்டி, பத்திரிக்கையில் பேட்டி தந்து டீவி விவாதங்களில் உளறி, முச்சந்தி மீட்டிங்கில் அலறுவது போறாதா, இவர்கள் விளம்பரங்களில் வேறு வந்து என் கழுத்தை அறுக்கவேண்டுமா என்று கேட்பீர்கள். இது தேர்தல் நேரம்.

மற்ற நேரங்களில் மறைந்திருந்தாலும் தீபாவளி நேரம் விளம்பரம் செய்யாமல் இருக்குமா ஜவுளிக் கடைகள்? சாதா நேரம் சும்மா இருந்தாலும் அட்சயதிரிதியை போது அட்வர்டைசிங் செய்யாமல் இருக்குமா நகைக் கடைகள். அரசியலும் பிசினஸ் தானே. தேர்தல் காலம் தானே கட்சிகளுக்கு தீபாவளி. ஓட்டு போடும் நேரம் தானே அரசியல்வாதிகளுக்கு ஆடி தள்ளுபடி. அடுத்த ஐந்து வருட மகசூலுக்கு நாற்று நடவேண்டாமா? பின் ஏழு தலைமுறைக்கு நீங்களா சேர்த்துக் கொடுப்பீர்கள் அவர்களுக்கு? வேண்டுமானால் காதை பொத்தி கண்ணை கட்டி மனதை மறைத்து அரசியல் விளம்பர அட்டகாசத்தை பொறுத்துக்கொள்ள பழகுங்கள்.

தேர்தல் நேரம் வெள்ளையும் சொள்ளையுமாக அல்லக்கை படைசூழ அரசியல்வாதி வீடுவீடாக கதவை தட்டி கை கொடுத்து கும்பிடு போட்டு கையேந்தி ஓட்டுபிச்சை  கேட்ட காலம் என்னாச்சு. அது எங்கேயும் போகவில்லை. இம்முறையும் வருவார்கள் மடிப்பிச்சை கேட்டு. ஆனால் பாருங்கள், ஜனத்தொகை அநியாயத்துக்கு அதிகரித்துவிட்டது. வீடுகள் ஏகத்துக்கும் பெருகிவிட்டன பாதி நேரம் வீடுகளில் மக்கள் இருப்பதில்லை. மீதி நேரம் தட்டினாலும் கதவை திறப்பதில்லை. ஓட்டுக்கு காசு வாங்கும் நேரம் தவிர.

 போதாக்குறைக்கு அரசியல் போட்டி அக்கிரமத்துக்கு அதிகரித்துவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் கட்சிகள். தேர்தல் கமிஷனில் ரிஜிஸ்தர் செய்யப்பட்டிருக்கும் கட்சிகள் ஆயிரத்து எண்ணூறுக்கும் மேலாம். மக்களை தேடிப்போய் கும்பிட்டு மயக்குவது முடியாததாகிவிட்டது. அவர்களை வழிக்கு கொண்டுவர வேறு மார்க்கம் தேவைப்படுகிறது. சப்ஜாடாய் சகலரையும் சந்திக்க சல்லிசான வழி வேண்டப்படுகிறது. கிடைத்தன விளம்பரங்கள். அதனால் தான் டீவி, பத்திரிக்கை, ரேடியோ, அவுட்டோர், இன்டர்னெட் என்று கிடைத்த இடத்திலெல்லாம் குப்பையை கொட்டுகிறார்கள் அரசியல்வாதிகள். வாக்காளராய் லட்சணமாய் நாம் தான் பொறுத்துக்கொண்டு பொறுக்கிக்கொள்ள வேண்டும்!

அப்படி என்ன பெரியதாக விளம்பரப்படுத்தப் போகிறார்கள் என்று கேட்பவர்கள் கவனத்துக்கு... வரும் தேர்தலில் சுமார் நாலாயிரம் கோடிக்கு மேல் விளம்பர செலவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டீவி, பத்திரிக்கை, ரேடியோ கணக்கு மட்டுமே. போஸ்டர், ஹோர்டிங், அவுட்டோர் இத்யாதிகள் எக்ஸ்ட்ரா. இது தனியாக ஒரு நானூறு கோடி ரூபாய் தேறுமாம். இண்டர்னெட்டில் செய்யப்படப் போகும் செலவு வேறு.

 அது எவ்வளவு என்று சொல்லி உங்கள் வயிற்றெரிச்சலை மேலும் கொட்டிக்கொள்வது மனிதாபிமானம் அல்ல. இதைத் தவிர நீங்கள் ஆபிசில் இருக்கும்போது கட்சிகளிடமிருந்து வரும் எஸ்எம்எஸ், தூங்கும்போது வேட்பாளர்களிடமிருந்து வரும் ஃபோன் முதலியன சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொண்டு மனதை திடப்படுத்திக் கொள்க!

தேர்தல் நேர விளம்பரங்கள் கட்சிகள் திட்டமிட்டபடி வேலை செய்யுமா? செய்யும், செய்யவேண்டும், செய்தால் தேவலை என்று தான் இத்தனை செலவு செய்கின்றன கட்சிகள். இதைபற்றி இந்தியாவில் பெரிய அளவில் ஆராய்ச்சி செய்யப்படுகிறதா என்று தெரியவில்லை.

அமெரிக்காவில் தேர்தல் நேர விளம்பர உத்திகள் பற்றி, அதன் உபயோகங்கள் பற்றி பிரித்து மேய்ந்து ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதித் தள்ளியிருக்கும் ஆய்வுக் கட்டுரைகள், ஆராய்ச்சி ரிப்போர்களை படித்து முடிப்பதற்குள் அடுத்த தேர்தலே வந்து முடிந்துவிடும்!

யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்யாதவர்களை தேர்தல் நேர விளம்பரங்கள் பாதித்து அவர்கள் மனதை மாற்ற செய்கின்றன என்கிறது. ‘ஹாவர்ட் பல்கலைக்கழக’ ஆய்வு. ஒரு கட்சியின் அனுதாபிகள் தாங்கள் நினைத்திருக்கும் கட்சிக்கே ஓட்டு போட அவர்களை நேரில் சென்று கைகொடுத்தால் மட்டும் போதுமாம். தேர்தலில் போட்டி கடுமையாய் இருக்கும் போது தான் டீவி விளம்பரங்களின் தாக்கம் மக்களிடையே பெரிய அளவில் இருக்குமாம்.

பல காலம் அமெரிக்க தேர்தல்களை ஆராய்ந்து வரும் உளவியலாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுவாரசியமான விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘அந்த கட்சி படு மோசம், அவர்கள் வந்தால் ஊழல் மலியும், நாட்டை கொள்ளையடிப்பார்கள், மக்கள் நாசமாய் போவீர்கள்’ என்ற வகையான நெகடிவ் விளம்பரங்கள் மக்களை சீரியஸாக சிந்திக்க வைக்கும் என்கிறது 2005-ல்

வெளியான ஒரு ‘American Journal of Political Science’ ஆய்வறிக்கை. இவ்வகை நெகட்டிவ் விளம்பரங்கள் மக்களை சிந்திக்க வைத்து நெகட்டிவாக சித்தரிக்கப்பட்ட கட்சிகள் பற்றி மேலும் தகவல் பெறவேண்டும் என்ற ஆவலை மக்களிடம் தூண்டுகிறதாம். ‘எங்கள் ஆட்சி பொற்கால ஆட்சியாக்கும், ரோட்டில் நீங்கள் வழுக்கி விழுந்தால் அதற்கு காரணம் எங்கள் ஆட்சியில் பெருக்கெடுத்து ஓடிய தேனும் தினைமாவும் தான்’ என்பது போன்ற விளம்பரங்கள் பெரிய அளவில் மக்களை பாதிப்பதில்லையாம். ஏற்கெனவே அந்த கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் வேண்டுமானால் ‘தேவலையே, சரியான கட்சிக்கு தான் ஓட்டு போட்டிருக்கிறோம்’ என்று தங்களை தேற்றிக்கொள்ள வேண்டுமானால் செய்யுமாம்.

இதையெல்லாம் ஏதோ ஒரு தேர்தல் இரண்டு தேர்தல்களை ஆராய்ந்து கூறவில்லை. இதையே ஒரு தொழிலாக வைத்து ஆராய்ந்து அதன்படி அறிக்கைகளும் ஆய்வு கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்கள். Political Psychology என்ற ஜர்னலில் வெளியான கட்டுரை ஒன்றில் தேர்தலில் ஓரளவு முன்னணியில் உள்ள கட்சி பாசிட்டிவ் வகை விளம்பரங்களையும் பின் தங்கிய நிலையில் உள்ள கட்சி மாற்று கட்சியை தாக்கும் நெகட்டிவ் ரக விளம்பரங்கள் தருவது பயன் தரும் என்று கூறுகிறது.

‘நீங்கள் நாசமாகிவிட்டீர்களே, அய்யோ இந்நாட்டை கொள்ளையடிக்கிறார்களே, அய்யஹோ, நாங்கள் இருக்கும் போது நீங்கள் ஏன் அந்த கட்சியிடம் ஏமாறுகிறீர்கள், நாங்களே செய்யமாட்டோமா’ போன்ற விளம்பரங்கள் முடிவு செய்யாத வாக்காளர்களை ஓரளவு சிந்திக்க வைக்குமாம்.

அதோடு ஆட்சியில் ரொம்ப நாள் இல்லாதிருந்து அதனால் பணம் சம்பாதிக்க முடியாமல் சிரமதிசையில் உள்ள கட்சிகள் இவ்வகை நெகடிவ் விளம்பரங்கள் செய்தால் சிறிய பட்ஜெட்டிலும் ஓரளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ண முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ‘யாரும் இதை செய்யக்கூடாது என்று நான் பர்சனலாக நினைத்தாலும் எதிரி கட்சியை தாக்குவது சமயங்களில் வேலை செய்யத் தான் செய்கிறது’ என்கிறார் ‘அடெல்ஃபி பல்கலைக்கழக’ பேராசிரியர் ‘ஜோயெல் வெயின்பர்கர்’.

இதெல்லாம் அமெரிக்காவுக்கு வேண்டுமானால் பொருந்தும், நம் நாட்டு அரசியலுக்கு ஒத்து வராது என்று நினைக்கிறீர்களா? அரசியல் என்பதே சம்பாதிக்கும் வழி என்று ஆன பிறகு அமெரிக்கா என்ன அரக்கோணம் என்ன, எல்லாம் ஒரே கொடுமைதான். ஒரு உதாரணம் கொண்டு இதை விளக்குகிறேன்.

அமெரிக்காவில் ஆண்களை விட பெண் வேட்பாளர்கள் தான் நெகட்டிவ் விளம்பர உத்தியை அதிகம் பிரயோகிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. உபி முதல் வங்காளம் வரை நம்மூர் மாதர்குல மாணிக்கங்கள் செய்வதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், ஒற்றுமை உங்களுக்கே விளங்கும்!

என்ன, அமெரிக்காவில் அரசியலையும் தேர்தலையும் ஓரளவுக்கு அறிவியல் ரீதியாக அணுகுகிறார்கள். நம்மூரில் வெறும் பணவியல் மட்டுமே. ஆனால் ஒன்று சொல்லவேண்டும். தேர்தல் நேரத்தில் செலவிடப்படும் அத்தனை விளம்பரப் பணமும் நம் நாட்டு பொருளாதாரத்துக்கு ஒரு சின்ன அளவாவது பூஸ்ட் கொடுக்கும். இத்தனை நாள் கொடுத்திருக்கிறது. இம்முறையும் எதிர்பார்க்கலாம்.

தேர்தல் கால விளம்பரங்கள் அரசியல் கட்சிகளுக்கு பயன் தருகிறதோ இல்லையோ அந்த விளம்பரங்களை உருவாக்கி வெளியிடும் விளம்பர ஏஜென்சிகளுக்கு லௌகீக பயன்களை தரத்தான் செய்கின்றன. ஆனால் ஒரு வேடிக்கை பாருங்கள்.

மற்ற ப்ராண்டுகளும் கம்பெனிகளும் விளம்பரம் செய்தால் முப்பது நாள் முதல் அறுபது நாட்கள் வரைக்கும் கூட பொறுத்துக்கொண்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் விளம்பர ஏஜென்சிகள் அரசியல் கட்சிகளிடமிருந்து மட்டும் அட்வான்ஸாக முழுப் பணத்தையும் வாங்கிக்கொண்டு தான் விளம்பரம் செய்கின்றன. நம் நாட்டை ஆளப்போகும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அப்பேற்பட்டவர்களிடம் தான் இந்த நாட்டை ஒப்படைக்க ஓடிச் சென்று ஓட்டுப்போடுகிறோம். தலையெழுத்து!

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறும்போது அதுவே உண்மையாகிறது என்றார் ஒருவர். விளம்பரங்கள் சட்டபூர்வமாய் அனுமதிக்கப்பட்ட சூது விளையாட்டு என்றார் இன்னொருவர். இரண்டும் கூட்டனி அமைக்கப்போகின்றன. ஊர் உருப்பட்டா மாதிரிதான்.

- satheeshkrishnamurthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x