Published : 10 Apr 2018 08:58 AM
Last Updated : 10 Apr 2018 08:58 AM

ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அதிகாரி சாந்தா கொச்சாருக்கு வலுக்கும் எதிர்ப்பு: பதவி விலகுமாறு இயக்குநர்களில் சிலர் வலியுறுத்தல்

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சாந்தா கொச்சாரை பதவி விலகுமாறு இயக்குநர் குழுவில் ஒரு பிரிவினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

கடந்த வாரம்தான் சாந்தா கொச்சார் மீது முழு நம்பிக்கை உள்ளது என இயக்குநர் குழு சார்பில் வங்கித் தலைவர் எம்.கே. சர்மா அறிவித்திருந்தார். ஆனால் சிபிஐ விசாரணை நாளுக்குநாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் இயக்குநர் குழுவில் ஒரு பிரிவினர் சாந்தா கொச்சார் பதவியில் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இயக்குநர் குழு இரண்டுபட்டுள்ளது. ஒரு பிரிவினர் ஆதரவாகவும், மற்றொரு பிரிவினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

சாந்தா கொச்சாரின் பதவிக் காலம் மார்ச் 31, 2019-ல் முடிவடைகிறது. அதற்கு முன்பாகவே அவரை பதவி விலகச் சொல்லலாம் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் சாந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் பலனடைந்திருப்பது குறித்து சிபிஐ முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. தீபக் கொச்சார் மற்றும் அவரது சகோதரர் வெளிநாடு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாந்தா கொச்சாருக்கு எதிராக இயக்குநர் குழுவில் ஒரு பிரிவினரும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழுவில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். செபிக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி அனுப்பிய கடிதத்தில் சாந்தா கொச்சார் மீது முழு நம்பிக்கை உள்ளதாக சர்மா தெரிவித்திருந்தார். கடன் வழங்கியதில் எவ்வித முறைகேடும் இல்லை. வங்கியின் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினர்களில் சர்மா உள்ளிட்ட 6 பேர் வங்கியில் அன்றாட அலுவல் பொறுப்புகள் ஏதும் இல்லாதவர்களாவர். இயக்குநர்களில் ஒரு பிரிவினர் சாந்தா கொச்சாருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கியின் செய்தி தொடர்பாளர், சிபிஐ தற்போது ஆரம்ப கட்ட விசாரணையை மட்டும்தான் தொடங்கியுள்ளது. ஏதேனும் தவறு நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பான விசாரணைதான் அது என்று மட்டும் தெரிவித்தார்.

2009-ம் ஆண்டுக்குப்பிறகு தற்போது வங்கியின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. அதேபோல சாந்தா கொச்சார் பொறுப்பேற்ற பிறகு வாராக் கடன் அளவும் அதிகரித்துள்ளது. தீபக் கொச்சாரிடம் விளக்கம் கேட்க தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் கிடைக்கவில்லை. ஆனால் இதில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x