Published : 23 Jan 2018 09:51 AM
Last Updated : 23 Jan 2018 09:51 AM

ஆன்லைன் ராஜா 11: மர்ம தேசம்

எச்சரிக்கை

இந்த அத்தியாயத்தில் வரும் பெயர்கள், இடங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை அனைத்துமே கற்பனை அல்ல. நிஜம். ஜாக் மா ஏனோ இந்த அனுபவங்கள் பற்றிப் பேசுவதேயில்லை. ஆனால், இன்னொரு நம்பத்தக்க ஆதாரம் இருக்கிறது. சென் வே (Chen Wei) என்பவர் ஜாக் மாவின் ஒய்எம்சிஏ (YMCA ) மாணவர். அவர் உதவியாளராகப் பத்து ஆண்டுகள் பணி புரிந்தவர். ஜாக் மாவின் வாழ்க்கை வரலாறு (Jack Ma – Founder and CEO of the Alibaba Group) எழுதியிருக்கிறார். ஜாக் மா அங்கீகரித்திருக்கும் அவருடைய ஒரே வாழ்க்கை வரலாறு. இந்த அத்தியாயத்தின் சம்பவங்கள் சென் வே உபயம்.

``டொக், டொக், டொக்.”

கதவை யாரோ தட்டினார்கள். ஜாக் மா திறந்தார். குஸ்தி பயில்வான்கள் போல் ஆறடி உயரம், இரண்டடி அகலம். கோட் சூட். அண்ணாந்துதான் அவர்கள் முகங்களை ஜாக் மாவால் பார்க்கமுடிந்தது.

அழைக்கும் முன்னாலேயே அறைக்குள் வந்தார்கள்.

“புறப்படுங்கள். போகலாம்.”

ஜாக் மா மூளையில் ஏனோ ஒரு சிவப்பு விளக்கு பளிச்.

கீழே வந்தார்கள். காரில் ஏறினார்கள். ஒரு பயில்வான் கார் ஓட்டினான். இன்னொருவன் அவர் பக்கத்தில் பின் சீட்டில். கார் பறக்கத் தொடங்கியது. 75 மைல் வேகம் என்று ஸ்பீடோமீட்டர் காட்டியது. சீனாவின் நெருக்கடிப் போக்குவரத்தில், இத்தனை வேகத்தைக் கற்பனைகூடச் செய்யமுடியாது. ஜாக் மாவுக்கு இந்த ஸ்பீட் முதல் அனுபவம். வயிற்றிலிருந்து ஒரு பந்து எழுந்துவந்து தொண்டையை அடைக்கும் உணர்வு. கார் ஓடிக்கொண்டே…….யிருந்தது. லாஸ் வேகஸ் (Las Vegas) நகரத்துக்குள் என்ட்ரி.

லாஸ் வேகஸ் அமெரிக்காவின் பொழுதுபோக்குத் தலைநகரம். நூறு பாங்காங் நகரங்களுக்குச் சமம். 24 மணி நேரமும் வகை வகையான சூதாட்டங்கள், சீட்டாட்ட மேசைகள், வெள்ளமாய்ப் பாயும் மது, அரைகுறை ஆடையில் வாடகைப் பெண்கள். கோடீஸ்வரர்களுக்கு சொர்க்கம். சாமானியர்களுக்கு வயிற்றெரிச்சல் நரகம்.

சர்க்கஸ் சர்க்கஸ் (Circus Circus), சீஸர்ஸ் பேலஸ் (Caesar’s Palace), பிளமிங்கோ (Flamingo), பிளானெட் ஹாலிவுட் (Planet Holywood), வெனீஷியா (Venetia) ஆடம்பரத்தின் உச்சம் தொடும் ஹோட்டல்கள். திறந்த கண் மூடாமல் பார்த்துக்கொண்டே வந்தார் ஜாக் மா. ஒரு ஆடம்பர ஹோட்டலின் முன்னால் கார் நின்றது. இறங்கினார்கள். லிஃப்டில் மூவரும். ஒரு பயில்வான் பட்டனை அழுத்தினான். லிஃப்ட் மேல் மாடியில் நின்றது. அவரை இழுக்காத குறையாகத் தள்ளிக்கொண்டே ஒரு அறைக்குள் நுழைந்தார்கள். பயில்வான் ஒரு பட்டனை அழுத்தினான். மாயாஜாலம். மேல்கூரை விலகியது. அங்கே கண்ணாடி. அதன் வழியாக வானமும், நட்சத்திரங்களும் தெரிந்தன. பயில்வான் மெனு கார்டை நீட்டினான், வகை வகையான உணவுகள் வந்தன. வயிறாரச் சாப்பிட்டார். நிறைந்த வயிறு, பயண அசதி. நித்திராதேவி ஓடோடி வந்து அணைத்துக்கொண்டாள். நடுவில் விழித்தபோதுதான், அவர்கள் போன் நம்பரை வாங்கிக்கொள்ளவில்லை என்று உணர்ந்தார். ``காலையில் வருவார்கள். அப்போது வாங்கிக்கொள்ளலாம்.”

பொழுது விடிந்தது. ரெடியானார்.

``டொக், டொக், டொக்.”

பயில்வான்கள் உள்ளே வந்தார்கள். ஒரு பேப்பரை நீட்டினார்கள்.

“இதில் கையெழுத்துப் போடுங்கள்.”

படித்துப் பார்த்தார். அநியாயம், அக்கிரமம். டாங்லூ அதிகாரிகள் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும், அதற்காக அமெரிக்கக் கம்பெனிக்கு நஷ்ட ஈடு தருவதாகவும் சம்மதிக்கும் கடிதம். கையெழுத்துப் போட மறுத்தார். வாக்குவாதம். ஒரு பயில்வான் பேன்ட் பாக்கெட்டில் கை விட்டான். பள பள துப்பாக்கி. ஜாக் மா நெற்றிக்கு நேரே வைத்தான்.

“கையெழுத்துப் போடு. இல்லா விட்டால்……..டிஷ்யூம்.”

தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்த டாங்லூ அதிகாரிகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எந்தத் தீங்கும் வராமல் காக்கவேண்டும். டாங்லூ அதிகாரிகளிடம் பேசவேண்டும் என்று இரண்டு நாட்கள் வாய்தா கேட்டார். சம்மதித்தார்கள்.

அடுத்த இரண்டு நாட்கள். குண்டர்கள் வரவில்லை. சீனாவிலிருந்து முதன் முறையாக வந்திருக்கும் இவருக்கு அமெரிக்காவில் ஈ, எறும்பைக் கூடத் தெரியாது, அறைக்குள் அடைந்து கிடப்பார் என்னும் அசால்ட்டான நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் கணக்குத் தப்பு. ஜாக் மாவுக்கு அமெரிக்காவில் மூன்று பேரைத் தெரியுமே? பேராசிரியர் பில் அஹோவின் மருமகன் ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி, அவர் உறவினர்கள் டேவ் ஸெலிக், டோலோரெஸ் ஸெலிக். உயிர் பிழைக்கவும், டாங்லூ அதிகாரிகள் தன்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றவும் ஒரே வழி, அவர்கள் வசிக்கும் சியாட்டில் நகரம் போகவேண்டும்.

குண்டர்கள் கண்களில் படாமல் ஹோட்டலிலிருந்து எப்படியாவது தப்பிக்கவேண்டும், பலமுறை அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தார். வில்லன்கள் கண்ணில் படவில்லை. பெட்டியை அறையிலேயே விட்டார். கையில் பர்ஸ் மாத்திரம். பதுங்கிப் பதுங்கி வெளியே வந்தார். லிஃப்டில் ஏறினால் மாட்டிக்கொள்வோமோ என்று பயம். மாடிப்படிகளில் இறங்கினார். ஒவ்வொரு தளத்துக்கு வரும்போதும், யாராவது வருகிறார்களா என்று நோட்டம். கீழ்த்தளத்துக்கு வரும்வரை பயம், பயம்….அங்கே வந்தவுடன், வீதிக்கு ஓடினார். கண்ணில் பட்ட முதல் டாக்சியை நிறுத்தினார்.

``ஏர்போர்ட். ஸ்பீட், ஸ்பீட்.”

லாஸ் வேகஸ் விமான நிலையம், சியாட்டிலுக்கு டிக்கெட். விமானத்தில் ஏறினார். ஃப்ளைட் டேக் ஆஃப். செத்துப் பிழைத்த அனுபவம். நிம்மதிப் பெருமூச்சு விட்டார். எஸ்கேப்!*

* (ஜாக் மா தப்பியது பற்றி இன்னொரு தகவல் இருக்கிறது. ``அவர் பர்ஸில் ஒரு சில டாலர்களே இருந்தன. தான் தங்கியிருந்த ஹோட்டலின் அடித்தளத்துக்கு வந்தார். அங்கிருந்த ``வை ராஜா வை” இயந்திரத்தில் விளையாடினார். 600 டாலர் கிடைத்தது. அதை வைத்து சியாட்டிலுக்கு விமானப்பயண டிக்கெட் வாங்கினார்” என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். இது ரீல் என்று பலர் நினைக்கிறார்கள். நானும் அப்படித்தான். ஏனென்றால், சென் வே இந்த நிகழ்ச்சியை குறிப்பிடவில்லை)

சியாட்டில் அனுபவம் லாஸ் வேகாஸ் காயங்களுக்கு ஒத்தடம் போட்டது. விமான நிலையத்தில் இறங்கியதும், டேவ் ஸெலிக்குக்கு போன். அவர் தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னார். போனார். அன்பான விருந்தோம்பல். ஜாக் மா தன் திடுக்கிடும் அனுபவங்களை அவர்களிடம் சொல்லவில்லை. ``போலீசுக்குப் போவார்கள். அவர்களுக்கு ஏன் பிரச்சினை தரவேண்டும்?” என்னும் பண்பாடு.

டேவ் ஸெலிக் சியாட்டில் நகரத்தை ஜாக் மாவுக்குச் சுற்றிக்காட்டினார். பல வருடங்களுக்குப் பின்னால், அந்த அனுபவத்தைப் பிரபல பி.பி.சி. ரேடியோவுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் அவர் விவரித்தார். “உங்களுக்கு சியாட்டிலில் என்னென்ன பார்க்கவேண்டும் என்று ஜாக் மா விடம் கேட்டேன். கோடீஸ்வரர்கள் வசிக்கும் வீடுகளைப் பார்க்கவேண் டும் என்று சொன்னார். மாடிசன் பார்க் (Madison Park) என்னும் பகுதிக்கு அழைத்துக்கொண்டு போனேன்.

அங்கே குன்றுகளின் மேல் பிரம்மாண்ட வீடுகள். ஜாக் மா முதல் வீட்டைப் பார்த்தார். என்னிடம் விலை கேட்டார். அந்த வீட்டை வாங்குவேன் என்று சொன்னார். இன்னொரு வீடு, இன்னொரு வீடு என்று சுமார் இருபது மாளிகைகள். ஏழை நாடான சீனாவின் குடிமகன், நஷ்டத்தில் நடக்கும் மொழிபெயர்ப்புக் கம்பெனியின் சொந்தக்காரன், கையில் நூறு டாலர் கூட இல்லாதவன், பகல்கனவு காண்கிறான் என்று எனக்குச் சிரிப்பு வந்தது. நினைத்துப் பார்க்கிறேன். இன்று ஜாக் மா நினைத்தால், அந்த இருபது மாளிகைகளையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வாங்குமளவு செல்வம் அவரிடம் இருக்கிறது.”

ஜாக் மாவின் கனவுகளை நிஜமாக்கும் மாற்றங்கள் வரத் தொடங்கின. ஆரம்பமாய் ஒரு ஆனந்தச் சேதி. பேராசிரியர் பில் அஹோ மருமகன் ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி, தன் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பிவிட்டார். டெவ் ஸெலிக் ஜாக் மா-வை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். சியாட்டில் நகரின் புறநகர்ப் பகுதியில் பலமாடிக் கட்டடத்தின் ஒரு மாடி. விர்ச்சுவல் ப்ராட்காஸ்ட் நெட்வொர்க் (Virtual Broadcast Network – சுருக்கமாக VBK) கம்பெனி. இன்டர்நெட் தொடர்பான ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம். முதலாளி, ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி.

ஜாக் மா VBK கம்பெனிக்குள் காலடி எடுத்துவைத்தார். அவர் வலதுகாலை வைத்திருக்கவேண்டும். ஏன் தெரியுமா? ஜாக் மா வாழ்க்கையில் இது திருப்புமுனை, இன்டர் நெட் உலகப் பயணத்தின் ஆரம்பம்.

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x