Published : 02 Feb 2018 07:24 AM
Last Updated : 02 Feb 2018 07:24 AM

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை; 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு - வேளாண் கடனுக்கு ரூ.11 லட்சம் கோடி

நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேர் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓராண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வசதியை பெற முடியும்.

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் நிரந்தர வரிக் கழிவு சலுகை ரூ.40,000 வரை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்குள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 25 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருக்கிறது.

நடப்பு 2018-19-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார்.

பாஜக அரசு தாக்கல் செய்யும் முழு அளவிலான கடைசி பட்ஜெட் இதுவாகும். 2019-ம் ஆண்டு மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்த நிதி ஆண்டுக்கு செலவு அனுமதி கோரிக்கை (வோட் ஆன் அக்கவுண்ட்) மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாட்டு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 1.38 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. இருப்பினும் நிரந்தர வரிக் கழிவு சலுகை ரூ 40 ஆயிரம் வரை அளித்துள்ளது ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு மீதான வட்டிக்கு விதிக்கப்படும் வரி விலக்கு ரூ. 50 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல மருத்துவக் காப்பீடுகளுக்கு ரூ. 50 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வசதியை அளிக்கும் உயரிய நோக்கத்தின் முன்னோடியாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். நாடு முழுவதும் 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்றும் புதிதாக 24 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அதாவது 3 நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி வீதம் அமைக்கப்படும் என்றும் ஜேட்லி குறிப்பிட்டார். இதற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது.

கார்ப்பரேட் வரி குறைப்பு

பெரும் பணக்காரர்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீதம் முதல் 15 சதவீத லெவி தொடரும் என்றும், அனைத்துப் பொருட்கள் மீது விதிக்கப்படும் உபரி வரி (சர்சார்ஜ்) 4 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.250 கோடிக்குள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 25 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருக்கிறது. இதன் மூலம் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் அதிகம் பயனடையும். வருமான வரி தாக்கல் செய்யும் நிறுவனங்களில் 99 சதவீத நிறுவனங்கள் ரூ.250 கோடிக்குள் இருப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த அறிவிப்பால் பயனடையும். இதனால் அடுத்த நிதி ஆண்டில் ரூ.7,000 கோடி அளவுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார்.

மேலும் ரூ.250 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு தற்போது இருக்கும் 30 சதவீத வரி தொடரும். சிறு நிறுவனங்களுக்கான வரியை குறைத்திருப்பதன் மூலம் உபரியாக இருக்கும் தொகை முதலீடுகளுக்கு செல்லும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

செல்போன், கைக்கடிகாரம், ஆட்டோமொபைல், டிரக் மற்றும் பஸ் டயர், காலணி, வைரம், சமையல் எண்ணெய், பழச்சாறு உள்ளிட்ட பல பொருட்களுக்கு சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட கால மூலதன ஆதாய வரி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

பற்றாக்குறை 3.3 சதவீதம்

கூடுதல் ஒதுக்கீடு காரணமாக வரும் நிதி ஆண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.3 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும். அதேநேரம் 3 சதவீத அளவுக்குக் குறைக்கப்படும் என்ற முந்தைய இலக்கு எட்ட முடியாமல் போனது.

விவசாயம், கிராமப்புற வீட்டு வசதி திட்டம், ஆர்கானிக் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்டவற்றுக்கு ரூ. 14.34 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக உற்பத்தி விலையில் 1.5 மடங்கு அளிக்கப்படும். இது இந்த ஆண்டு குறுவை சாகுபடி பயிர்களுக்கும் பொருந்தும். வேளாண் கடனுக்கு ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் சந்தை மேம்பாட்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

ரூ.100 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளும் வேளாண் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ராணுவத்துக்கான ஒதுக்கீடு 7.81 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த ஒதுக் கீடு ரூ.2.74 லட்சம் கோடியிலிருந்து தற் போது ரூ.2.95 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் செலவு 2018-19-ம் ஆண்டில் ரூ 24.42 லட்சம் கோடியாக இருக்கும் என்றும், ரயில்வே துறைக்கான செலவு ரூ.1.48 லட்சம் கோடி என்றும் ஜேட்லி தெரிவித்தார்.

110 நிமிட பட்ஜெட் உரையில் ஜேட்லி ஹிந்தி, ஆங்கிலம் என மாறி மாறி பேசினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x