Published : 17 Jan 2024 02:31 PM
Last Updated : 17 Jan 2024 02:31 PM

சென்செக்ஸ் 1,500+ புள்ளிகள் சரிவு - பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

மும்பை: வங்கிப் பங்குகளின் சரிவு மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளின் பலவீனமான போக்குகள் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையில் புதன்கிழமை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. பல்வேறு காரணங்களால் சரிவு தூண்டப்பட்டாலும் மிகப் பெரிய தனியார் கடன் வழங்குநரான ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கின் வீழ்ச்சிதான் பங்குச்சந்தை சரிவின் முக்கியக் காரணியாக இருந்தது.

முற்பகல் 11.30 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,071.18 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 72,057.59 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 294.40 புள்ளிகள் சரிவடைந்து 21,737.90 ஆக இருந்தது. இதனிடையே, வர்த்தக நேரத்தின்போது மேலும் சரிவடைந்து பிற்பகல் 2.40 மணியளவில் சென்செக்ஸ் 1.523.21 புள்ளிகள் (2.08 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 71,611.11 ஆக இருந்தது. நிஃப்டி 433.15 புள்ளிகள் (1.97 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 21,592.80 ஆக இருந்தது. இது 2024-ஆம் ஆண்டின் பெஞ்ச் மார்க் குறியீட்டின் மிகப் பெரிய சரிவினைக் குறிக்கிறது.

தொடர்ந்து வீழ்ச்சியில் பயணித்த பங்குச்சந்தைகள் வர்த்தக நிறைவின் போது சென்செக்ஸ் 1,628.01 புள்ளிகள் வீழ்ந்து 71,500.76 ஆக இருந்தது. அதேபோல் நிஃப்டி 460.35 புள்ளிகள் சரிந்து 21571.95 ஆக இருந்தது.

இந்தச் சரிவினைத் தொடர்ந்து மும்பைப் பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் மதிப்பு தோராயமாக ரூ.2 லட்சம் கோடி குறைந்தது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் சரிவு பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தாலும், வங்கி மற்றும் நிதி சேவை நிறுவன பங்குகளின் பரந்த அளவிலான வீழ்ச்சியே சென்செக்ஸ் சரிவுக்கு வழிவகுத்தது.

இந்தியப் பங்குச்சந்தைகளைத் தாண்டி, சீனாவின் ஷங்காய் கூட்டுப்பங்கு 1 சதவீத குறைவு, ஹாங்காங்கின் ஹாங் செங் 3 சதவீத சரிவு, சீனாவின் ஏமாற்றம் அளித்த டிசம்பர் காலாண்டு ஜிடிபி தரவுகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஆசிய பங்குச்சந்தைகளிலும் பலவீனமான போக்கே நிலவியது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்த கருத்துகளால் அமெரிக்க பங்குச்சந்தையும் சரிவைச் சந்தித்தன.

கவலையைத் தூண்டும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் க்யூ3 சரிவு: சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டும் தனியாக 700 புள்ளிகள் அளவுக்கு காரணமாகியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி 140 புள்ளிகள் வரையிலும், கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி இணைந்து 120 புள்ளிகள் அளவுக்கு வீழ்ச்சிக்கு வழிகோலின.

2023 - 24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கி 34 சதவீதத்துக்கு நிகர லாபம் ஈட்டியிருந்தாலும், வங்கியின் மார்ஜின் செயல்திறன் மற்றும் அடிப்படை பெரும்பான்மையாக வரி ரைட் பேங்-ஐ (write-backs) ஆதரிப்பதால் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச்சந்தையை பாதித்த பிற காரணிகள்: வட்டி விகிதம் குறித்த அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கவர்னர் கிறிஸ்டோபர் வாலரின் கருத்துக்கள் எதிர்மறை விளைவுக்கு மேலும் வலுசேர்த்தன.பணவீக்கம் குறைவான அளவில் நீடித்திருக்கும் என்று தெளிவாகும் வரை மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை அவசரமாக குறைக்கக் கூடாது என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால் ஒரே இரவில் வீழ்ச்சியடைந்த அமெரிக்க பங்குச்சந்தையின் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆசிய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு காரணியாகும். டிசம்பர் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.2 சதவீதமாக இருந்து ஏமாற்றமளித்தது. இதனிடையே, சீனா ஆறு மாதமாக நிறுத்தி வைத்திருந்த வேலைவாய்ப்பின்மை தகவல்களை மீண்டும் வெளியிடத் தொடங்கியுள்ளது. இது டிசம்பரில் 14.9 சதவீதமாக இருந்தது. இதன் விளைவுகள் ஹாங்காங், கொரியா, சீனா தைவான் மற்றும் இந்தியா போன்ற ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x