Published : 11 Jan 2024 04:10 AM
Last Updated : 11 Jan 2024 04:10 AM

பொங்கல் பண்டிகைக்காக வெண்கலப் பானைகள் விற்பனைக்கு குவிப்பு @ கோவில்பட்டி

கோவில்பட்டி: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி யில் வெண்கலப் பானைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

தமிழர் திருநாளை முன்னிட்டு வீடுகளில் வெண்கலம் மற்றும் மண் பானைகளில் பொங்கலிடுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், புது மணத் தம்பதிகளுக்கு தலைப் பொங்கல் சீர்வரிசை பொருட்களில் முக்கிய இடம் பிடிக்கும் வெண்கல உருளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட வெண்கல உருளிகள் கிலோவுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியில் இருந்து வெண்கல உருளிகளும், கும்கோணத்தில் இருந்து வெண்கல அகப்பைகளும் விற்பனைக்கு வருகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கோவில்பட்டி நகரக் கடைகளில் இவை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

கிலோ-வுக்கு ரூ. 100 உயர்வு: இது குறித்து, பாத்திரக்கடை உரிமையாளர் பொ.பிரபாகரன் கூறும்போது, “பொங்கல் பண்டிகைக்காக வெண்கல உருளிகள், அகப்பைகள், பித்தளைப் பானைகள் ஆகியவற்றை கடந்த மாதமே விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டோம். வெண்கல உருளிகள் ஒரு கிலோ முதல் 4 கிலோ வரை வந்துள்ளன. கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதேவேளை, கிலோ கணக்கு இல்லாமல் அளவுப்படி, அதாவது 1, 2 என எண்கள் கொண்ட வெண்கல உருளிகளும் உள்ளன.

இவை ரூ.800 முதல் ரூ.4,000 வரை விற்கப்படுகின்றன. வெண்கல அகப்பைகள் ரூ.150 முதல் ரூ.750 வரை விற்கப் படுகின்றன. பித்தளைப் பாத்திரங்கள் திருநெல்வேலி, கடலூர், திருப்பூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து வருகின்றன. இவை ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை என ரகத்துக்கும், தரத்துக்கும் ஏற்றவாறு விலை உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு கிலோவுக்கு மட்டுமல்ல அளவுக்கு ஏற்றவாறு ரூ.100 முதல் ரூ.125 வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மண் பானை விற்பனை குறைவு: மண் பானை விற்பனையாளர் சண்முக சுந்தரம் கூறும்போது, “செங்கோட்டை, காருகுறிச்சி, திருநெல்வேலி பகுதிகளில் இருந்து மண் பானைகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இந்தாண்டு மழை வெள்ளம் காரணமாக திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண் பானை வரத்து இல்லை. இதனால் மானாமதுரையில் இருந்து மண் பானைகளை வாங்கி வந்துள்ளோம். தரம், ரகத்துக்கு ஏற்றவாறு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கிறோம். பண்டிகை மற்றும் கோயில் விழாக்களில் மண் பானைகளில் பொங்கலிடுவது வெகுவாக குறைந்து வருகிறது. இந்தாண்டு விற்பனை பெரியளவில் இல்லை,” என்றார்.

மழை வெள்ள பாதிப்புக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாவட்ட பகுதியில் ரூ.1000 வழங்கப்பட்டது. அதேபோல், தற்போது பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. இது ஓரளவு மக்களுக்கு உதவியாக உள்ளது. அதனால் பொருட்கள் வாங்குவதில் சுணக்கம் இல்லை, என வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x