Published : 24 Jan 2018 10:09 AM
Last Updated : 24 Jan 2018 10:09 AM

வருமான வரி விலக்கினை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிக்கை

ஏழாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வருமான வரி விலக்கினை 3 லட்ச ரூபாயாக உயர்த்தலாம் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. தற்போது 2.5 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவையில்லை. இந்த வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக எஸ்பிஐ மேலும் கூறியிருப்பதாவது: வருமான வரி விலக்கினை உயர்த்தும் பட்சத்தில் 75 லட்சம் மக்கள் பயனடைவார்கள். அதேபோல வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துபவர்களுக்கு தற்போது 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரம்பினையும் 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தலாம். இதன் மூலம் வீட்டுக்கடன் வாங்கி இருக்கும் 75 லட்சம் நபர்கள் பயனடைவார்கள்.

அதேபோல சேமிப்பை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டில் இருக்க வேண்டும். தற்போது சேமிப்பு கணக்கு மூலம் ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும் வட்டித் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் சேமிப்பு கணக்கு மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு கொடுக்கலாம்.

அதேபோல வரிச் சலுகை க்காக வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்களின் காலம் ஐந்தாண்டுகளாக இருக்கிறது. இதனை மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும். தவிர பட்ஜெட்டில் விவசாயம், சிறு குறு நிறுவனங்கள், கட்டுமானம், குறைந்த விலை வீடுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு மாதமும் புதிதாக எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது என்பது குறித்த தகவலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 1990-91-ம் ஆண்டு வருமான வரி விலக்கு ரூ.22,000 ஆக இருந்தது. இந்த தொகை படிப்படையாக உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x