Published : 04 Oct 2023 06:33 AM
Last Updated : 04 Oct 2023 06:33 AM

தங்கம் விலை தொடர்ந்து சரிவு; பவுன் ரூ.42,320-க்கு விற்பனை

கோப்புப்படம்

சென்னை: கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், நேற்று ரூ.528 குறைந்து ஒரு பவுன் ரூ.42,320-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த மே 5-ம் தேதி பவுன் தங்கம் ரூ.46,200 எனும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இதற்கிடையே, செப்.25-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று ரூ.528 குறைந்து பவுன் ரூ.42,320-க்கு விற்பனையானது. அதன்படி கிராமுக்கு ரூ.66 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,290-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கமும் பவுன் ரூ.46,080-க்கு விற்பனையானது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,000 குறைந்து, ரூ.73,500-க்கு விற்பனையானது.

இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது:

அமெரிக்காவில் தற்போது மிகப்பெரிய அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பெடரல் ரிசர்வ் வங்கி சில நாட்களாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரம் டாலரில் இருந்து 1,815 டாலராகக் குறைந்துள்ளது. இதனாலேயே இந்தியாவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

கடந்த 7 மாதத்துக்கு முன்பு பவுன் தங்கம் ரூ.42 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இதன் பின்னர் படிப்படியாக தங்கத்தின் விலை அதிகரித்து ரூ.46 ஆயிரத்தை எட்டியது. தற்போது பழைய விலைக்கே தங்கம் வந்துள்ளது. இதுவே தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு சரியான நேரம். ஏனெனில், புரட்டாசி மாதம் முடிந்த பிறகு விசேஷங்கள் அதிகரிக்கும். அப்போது தங்கத்தின் தேவை அதிகரிப்பதால் விலையும் அதிகரிக்கக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x