Last Updated : 01 Oct, 2023 02:20 PM

 

Published : 01 Oct 2023 02:20 PM
Last Updated : 01 Oct 2023 02:20 PM

பயணிகள் அதிகரிப்பால் அக்.29 முதல் தினமும் 5 ஆக உயரும் திருச்சி - சென்னை விமான சேவை

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் 29-ம் தேதி முதல் வாரம் முழுவதும் நாள்தோறும் தலா 5 விமான சேவைகள் அளிக்கப்பட உள்ளன.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் 7 உள்நாட்டு சேவைகள், 11 வெளி நாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சென்னைக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 3 சேவைகள், இதர வார நாட்களில் தலா 4 சேவைகள், பெங்களூருவுக்கு 2 சேவைகள், ஹைதராபாத் வழியாக டெல்லிக்கு ஒரு சேவை அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வழக்கமாக அக்டோபர் மாதம் 29-ம் தேதி அறிவிக்கப்படும் விமான சேவைகளுக்கான குளிர்கால அட்டவணையில் திருச்சியில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதிதாக தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு வெளிநாட்டு சேவை அளிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு சேவையாக மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை விமான நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் சென்னைக்கு நாள்தோறும் இயக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கை அக்.29-ம் தேதி முதல் 4-ல் இருந்து 5 ஆக அதிகரிக்கிறது.

அதேபோல, ஞாயிற்றுக் கிழமைகளில் 3 சேவைகளாக உள்ளதும் 5 சேவைகளாக உயர்கிறது. இதனால், சென்னைக்கான வாராந்திர விமான சேவை 27-ல் இருந்து 35 ஆக அதிகரிக்கிறது. இந்த விமான சேவை எண்ணிக்கை உயர்த்தப் படுவதற்கு, சென்னை - திருச்சி இடையேயான பயணிகள் அதிகரிப்பே காரணம் என விமான நிலைய இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வழக்கமாக சென்னைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும் நிலையில், கடந்த 3 மாதங்களாக சென்னைக்கு இயக்கப்படும் விமானங்களில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிடுகின்றன. இதையடுத்து, இண்டிகோ விமானம் சென்னைக்கு இயக்கப்படும் விமான சேவையை தினசரி 5 ஆக அதிகரிக்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து திருச்சி சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “திருச்சியில் இருந்து மும்பை, டெல்லிக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயணிகள் வரவேற்பைத் தொடர்ந்து, சென்னைக்கு அக்டோபர் 29ம் தேதி முதல் தினசரி 5 சேவை அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் வாரத்துக்கு 35 சேவை அளிக்கப்படுவதுடன் தற்போது, 624 என உள்ள இருக்கைகள் எண்ணிக்கை 810 ஆக அதிகரிக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x