Last Updated : 29 Sep, 2023 04:02 AM

 

Published : 29 Sep 2023 04:02 AM
Last Updated : 29 Sep 2023 04:02 AM

தொடர் மழை, பூச்சித் தாக்குதலால் மல்லிகைப்பூ மகசூல் 80% பாதிப்பு: கிருஷ்ணகிரி விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: தொடர் மழை மற்றும் பூச்சித் தாக்குதலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லிகைப் பூ மகசூல் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக் கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூ அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் பறிக்கப்பட்டு, சரக்கு வாகனங்கள் மூலம் உள்ளூர் மற்றும் ஓசூர், பெங்களூரு மலர் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதில்,பெங்களூருவில் சந்தையில் அதிகாலையில் செல்லும் பூவுக்கு அதிக விலை கிடைப்பது உண்டு. மேலும், இங்கு ஏலம் முறையில் மல்லிகைப் பூவுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் பரவலாக பெய்த தொடர் மழையால், பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாட்டாண்மைக் கொட்டாய் பகுதி விவசாயி ராமலிங்கம் கூறியதாவது: மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மல்லிகை பூக்கள் அறுவடை அதிகரிக்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் உற்பத்தி குறைவாக இருக்கும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரளவுக்கு விளைச்சல் இருக்கும்.

இந்நிலையில், தொடர் மழையால் 70 முதல் 80 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்களில் கிலோ ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, உள்ளூர் சந்தையில் கிலோ ரூ.300 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது. மேலும், தொடர் மழையால் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கிறோம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை பெய்வதால், பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மகசூல் பாதிப்பால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x