Published : 22 Jul 2023 06:20 AM
Last Updated : 22 Jul 2023 06:20 AM

ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் வாபஸ்: தமிழக அரசின் வாக்குறுதியை ஏற்று முடிவு

கோவை: சென்னையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஓபன் எண்ட் நூற்பாலை உற்பத்தி நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஜவுளித் தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டண உயர்வு, கழிவுப் பஞ்சு விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்எஸ்எம்இ பிரிவைச் சேர்ந்த ஓபன் எண்ட் நூற்பாலைகள் தமிழகம் முழுவதும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், சென்னையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, காந்தி, தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தென்னிந்திய மில்கள் சங்கம், இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, ஓபன்எண்ட் நூற்பாலைகள் சங்கம், சிஸ்பா, இஸ்மா, டாஸ்மா உள்ளிட்ட பல்வேறு ஜவுளித் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.

இதுகுறித்து ‘சைமா’ பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறும்போது,‘‘குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதால், புதிதாக ஜவுளித் தொழில்கள் தொடங்கப்படுகின்றன. தமிழகத்தில் மின் கட்டண சலுகை கோரி, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,’’என்றார்.

இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறும் போது,‘‘மற்ற மாநிலங்களில் அதிக சலுகைகள் வழங்கப்படுவதால், தமிழக நூற்பாலைகளின் போட்டித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கினோம். அரசுத் தரப்பில், சிறப்பு நிதியுதவித் திட்டங்களை செயல்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது’’ என்றார்.

மறுசுழற்சி ஜவுளித் தொழில் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறும்போது, ‘‘தொழில் நெருக்கடியால்தான் உற்பத்தியை நிறுத்தினோம். மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக முதல்வரின் அறிவிப்புக்குக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, ‘‘மின் கட்டணம் தொடர்பான கோரிக்கைகளைப் பரிசீலித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர்களின் வாக்குறுதியை ஏற்று, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம்’’ என்றார்.

‘சிஸ்பா’ கவுரவச் செயலாளர் ஜெகதீஷ் சந்திரன், ‘இஸ்மா’ தலைவர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பஞ்சு இறக்குமதி வரியை நீக்குதல், கடனுதவியை திருப்பிச் செலுத்த காலஅவகாசத்தை நீட்டிப்பு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கவும், மின் கட்டண சலுகை உள்ளிட்ட தமிழக அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய உதவிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

அமைச்சர்களின் வாக்குறுதியை ஏற்று, எம்எஸ்எம்இ நூற்பாலை களில் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை தொடங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x