Published : 17 Jul 2023 07:29 AM
Last Updated : 17 Jul 2023 07:29 AM

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பற்றி அமேசான் பிரைம் வீடியோவில் தொடர்

கோப்புப்படம்

புதுடெல்லி: அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் இந்திய முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்துடன் இணைந்து ‘மிஷன் ஸ்டார்ட் ஏபி’ என்ற பெயரில் ஒரு தொடரை தயாரித்து வருகிறது. 7 அத்தியாயங்களாக (எபிசோட்) வெளியிடப்பட உள்ள இது, நாட்டின் 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றியதாக இருக்கும். இந்த 10 நிறுவனங்களை 3 முன்னணி முதலீட்டாளர்கள் தேர்வு செய்தனர். இந்த தொடரின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த தொடரில் பங்கேற்கும் 10 தொழில்முனைவோரும் வெற்றி பெறுவதற்காக ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போடுவார்கள். இந்த தொடரின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

இந்த தொடரின் அறிமுக விழாவில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் பேசும்போது, “இந்தியாவின் அடிமட்ட புதுமையை அறிமுகப்படுத்துவோரின் உணர்வுகளைப் பாராட்டி, பிரைம் வீடியோவின் ரியாலிட்டி தொடரான ‘மிஷன் ஸ்டார்ட் ஏபி’-ஐ அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன். இந்தத் தொடர், புதுமையை அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளவர்களுக்கு கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் களமாக இருக்கும். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நடைமுறைகள், சரியான முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும். அதேநேரம் இந்த தொடர் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமேசான் பிரைம் வீடியோ இந்தியா இயக்குநர் சுஷாந்த் ராம் பேசும்போது, “இந்திய அரசுடனான இந்த கூட்டு முயற்சி ஒரு மைல் கல் ஆகும். இந்த தொடர், தொழில் முனைவோர், புதுமையை அறிமுகம் செய்ய விரும்புவோர் மற்றும் படைப்பாளர்களுக்கு புதிய வடிவத்தை உருவாக்கும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஆலியா பட் பேசும்போது, “நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ரியாலிட்டி தொடரை தயாரித்து வரும் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்துக்கும் பாராட்டுகள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x