Published : 04 Jan 2022 04:25 PM
Last Updated : 04 Jan 2022 04:25 PM

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உடற்தகுதிச் சான்று: மருத்துவமனையில் காளைகளுடன் குவியும் உரிமையாளர்கள்

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ளத் தேவையான தகுதிச் சான்றைப் பெற உரிமையாளர்கள் தங்களது காளைகளுடன் கால்நடை மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விமரிசையாக நடக்கும். இதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வந்து தொடங்கி வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள காளைகளுக்கான உடற்தகுதிச் சான்று அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு சான்று வழங்கப்படுகிறது.

இதுகுறித்துக் கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், ‘‘நடப்பாண்டு போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடிய காளைகள் நாட்டு இனக் காளைகளாக இருத்தல் வேண்டும். காளைகளுக்கு மூன்றரை வயது நிரம்பியிருக்க வேண்டும். காளையின் உயரம் 119 செ.மீ. இருத்தல் வேண்டும். உடல்நலன் குறித்தும் மருத்துவர் பரிசோதனை செய்வதற்கு காளை உரிமையாளர் காளையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், காளை உரிமையாளரின் ஆதார் நகல், உரிமையாளரின் புகைப்படம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தகுதிச் சான்று அடிப்படையில்தான் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முன்பதிவில் இந்தக் காளைகள் இடம்பெறும்’’ என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாவட்டம் முழுவதும் காளைகளுக்கு உடற்தகுதிச் சான்று பெறுவதற்காக காளை உரிமையாளர்கள் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து ஆர்வமுடன் குவிந்து கொண்டிருக்கின்றனர். இந்தத் தகுதிச் சான்றோடு டோக்கன் பெற்று வரும் காளைகள், போட்டி நடைபெறும் அன்று மீண்டும் கால்நடை மருத்துவர்களால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.

இதனிடையே, ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், முறைகேட்டைத் தடுக்கக் குழு அமைக்க வேண்டும் எனவும் காளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x