Last Updated : 22 Jul, 2021 12:57 PM

 

Published : 22 Jul 2021 12:57 PM
Last Updated : 22 Jul 2021 12:57 PM

மேட்டுப்பாளையத்தில் தொடர் நீர்வரத்து; காந்தையாற்றுப் பாலம் நீரில் மூழ்கத் தொடங்கியது: போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காந்தையாற்றுப் பாலம் நீரில் மூழ்கத் தொடங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காந்தவயல் மற்றும் லிங்காபுரம் கிராமங்களுக்கு இடையே ஓடும் காந்தையாற்றின் குறுக்கே, 2004-ம் ஆண்டு 20 அடி உயரம் மற்றும் 200 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இப்பாலம், அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியைக் கடந்தாலே நீரில் மூழ்கத் தொடங்கிவிடும். கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் பெய்யும் மழையின் காரணமாக, அணையின் நீர் ஆதாரமாக விளங்கும் பவானியாறு, காந்தையாறு, மாயாறு, கல்லாறு போன்றவற்றில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்ட உயரமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று (ஜூலை 21) மாலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 96 அடியைக் கடந்த நிலையில், காந்தையாற்றுப் பாலம் மூழ்கத் தொடங்கிவிட்டது. இன்று (ஜூலை 22) காலை நிலவரப்படி, பாலத்தின் மீது தற்போது இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளம் செல்கிறது.

நேரம் ஆக ஆகப் பாலத்துக்கு மேலே செல்லும் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பாலத்தை இணைக்கும் இணைப்புச் சாலைகளும் நீருக்கடியில் சென்றுவிட்டன. இதனால், காந்தவயல், ஆளூர், உளியூர், காந்தையூர் என, நான்கு கிராம மக்கள் பாலத்தின் வழியே நகரப் பகுதிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதால், இன்னும் ஓரிரு நாட்களில் இப்பாலம் ஒட்டுமொத்தமாக இருந்த இடம் தெரியாமல் தண்ணீருக்கடியில் சென்றுவிடும்.

போக்குவரத்தும் முற்றிலுமாகத் தடைப்பட்டுவிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் விரைவில் பாலத்தை உயர்த்திக் கட்ட அரசு முன்வர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x