Published : 22 Jul 2021 12:21 PM
Last Updated : 22 Jul 2021 12:21 PM

தமிழகத்துக்கு ரூ.9,729 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை பாக்கி உள்ளது: வைகோ கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

சென்னை

மாநிலங்களுக்கு, மத்திய அரசு தரவேண்டிய இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்று மாநிலங்களவையில் வைகோ கேள்வி எழுப்பினார். தமிழகத்துக்கு மொத்தம் ரூ.9,729 கோடி ரூபாய் மத்திய அரசு தர வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்வியும் மத்திய இணை அமைச்சரின் பதிலும்:

“2020-21, 2021-22 ஆம் நிதி ஆண்டில், மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை எவ்வளவு? மாநில வாரியாகப் பட்டியல் தேவை.

நடப்பு நிதி ஆண்டில், மாநிலங்களுக்குத் தர வேண்டிய தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்கிவிட்டதா? இல்லை என்றால், வேறு ஏதேனும் மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்தீர்களா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள் தேவை” என மாநிலங்களவையில் வைகோ கேள்வி எழுப்பினார்.

அதற்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்து மூலம் விளக்கம் அளித்தார்.

“மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, 2017 ஜிஎஸ்டி சட்டத்தின் 8 ஆவது பிரிவின்படி, இழப்பீட்டுத் தொகை, ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதி என்ற தனிக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றது; அதே சட்டத்தின் பிரிவு 10(1) இன்படி, இது, பொதுக்கணக்கின் கீழ் வருகின்றது.

ஜிஎஸ்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் விளைவாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளை, பிரிவு 10(2) இன்படி, ஒன்றிய அரசு ஈடுசெய்யும்.

அதன்படி, 2017-18; 18-19; 19-20 ஆகிய நிதி ஆண்டுகளில், வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கி இருக்கின்றோம். ஆனால், பொருளாதாரச் சூறாவளி காரணமாக, ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது. அதே வேளையில், கூடுதல் இழப்பீட்டுத் தொகைக்கான தேவை ஏற்பட்டுவிட்டது. 2020 ஏப்ரல் 20 முதல், 2021 மார்ச் முடிய, 91,000 கோடி ரூபாய், மாநிலங்களுக்கும், மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால், வருவாய்ப் பற்றாக்குறை காரணமாக, முழுத்தொகை வழங்கப்படவில்லை. மாநிலங்களுக்குத் தரவேண்டிய தொகை குறித்த விவரங்கள், இத்துடன் இணைப்பில் உள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டியை நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் விளைவாக ஏற்பட்ட இழப்புக்கு, 2017ஆம் ஆண்டு சட்டத்தின்படி ஈடு கோரி, சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன், எஃப்ஆர்பிஎம் வரையறையைக் கூட்ட வேண்டும். மருத்துவக் கருவிகளை வாங்குவதற்குக் கூடுதல் நிதி தர வேண்டும். மானியப் பகிர்வு குறித்து, பொதுவான கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

மத்திய அரசு அதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது. இயன்ற அளவு உதவிகள் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பு ஈடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து, ஜிஎஸ்டி மன்றத்தின் 41 மற்றும் 42 ஆவது கூட்ட அமர்வுகளில், விரிவாகப் பேசி இருக்கின்றோம்.

2020-21ஆம் நிதி ஆண்டில், இழப்பு ஈடு தருவதற்கான நிதிப்பற்றாக்குறை காரணமாக, மத்திய அரசு, 1.1 லட்சம் கோடி ரூபாய் கடன் திரட்டி, அந்தத் தொகையை மாநிலங்கள் திரும்பச் செலுத்த வேண்டிய கடனாக வழங்கி இருக்கின்றது.

ஜிஎஸ்டி மன்றத்தின் 43ஆவது கூட்டத்தில் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த ஆண்டைப் போலவே, நடப்பு நிதி ஆண்டில், மேலும் 1.59 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு, பொதுச் சந்தையில் திரட்டி, அந்தத் தொகையை மாநில அரசுகள் திரும்பச் செலுத்த வேண்டிய கடனாக வழங்கும்.

அதன்படி, ஜூலை 15 அன்று அன்று, ரூ.75,000 கோடி, மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. கூடுதலாக, இழப்பீட்டு நிதியில் உள்ள இருப்பைப் பொறுத்து, வழக்கமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும், மத்திய அரசு வழங்கும்.

மாநிலங்களுக்கு, மத்திய அரசு தர வேண்டிய இழப்பீட்டுத் தொகை பட்டியல்படி, தமிழ்நாட்டுக்கு, ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை ரூ.6155 கோடியும்; 2021 ஏப்ரல் மே மாதங்களில் ரூ.3,574 கோடியும், மத்திய அரசு தர வேண்டும்”.

இவ்வாறு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதில் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x