Published : 25 Jul 2021 10:16 AM
Last Updated : 25 Jul 2021 10:16 AM

மார்பகப் புற்றுநோய்க்கு பாதுகாப்பான கதிர்வீச்சு சிகிச்சை

கடந்த காலங்களில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்து வந்துள்ளது. மார்பகப் புற்றுநோய் என்று எடுத்துக்கொண்டால் புற்றுநோய் கட்டியை மட்டுமின்றி மார்பகத்தை கூட முழுமையாக அகற்ற வேண்டியிருக்கும். அப்படியும் கூட வேறு இடங்களுக்கு பரவி அந்த இடங்களில் புற்றுநோய் தோன்றுவது மருத்துவர்களுக்கு பெரிய சவாலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய நவீன ஊடுருவி கருவிகள் மூலமும், துல்லியமான சிகிச்சைகள் மூலமும் மார்பகப் புற்று நோயினால் ஏற்படும் இறப்பு என்பது வெகுவாக குறைந்துவிட்டது.

மார்பக புற்றுநோய்க்கான தற்போதைய நவீன சிகிச்சை முறைகளை பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை நம்மோடு இங்கு பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை மூத்த மருத்துவர் டாக்டர் சுரேந்திரன்.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை எவ்வாறு அறிந்து கொள்வது?

மார்பகத்தின் அளவு, வடிவம் மற்றும் தோலின் தன்மையில் ஏற்படும் மாற்றம் போன்றவை முதல் அறிகுறியாகும். மார்பகத்தில் அக்குள் பகுதியில் ஏற்படும் கட்டி மற்றும் மார்பகத் தோலில் தடிப்பு இருந்தால் அடுத்த கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் நேரடி பரிசோதனைக்கு பின்பு மேமோகிராம் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டு கட்டியின் அளவு மற்றும் தன்மை பரிசோதிக்கப்படும். புற்று கட்டியாக இருக்கலாம் எனும் பட்சத்தில் கட்டியின் ஒரு பகுதி திசுக்களை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பும் பயாப்ஸி டெஸ்ட் செய்யப்படும். மார்பகப்புற்று ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் சிகிச்சையும் குணமும் அனுகூலமாக இருக்கும்.

யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வரலாம்?

காலதாமதமான கடைசி மாதவிடாய் , சீக்கிரமாக பூப்பெய்தல் மற்றும் உடல் பருமன் போன்றவற்றினால் ஏற்படும் ஹார்மோன் கோளாறினால் தோன்றும் பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள நபர்களின் யாருக்கேனும் மார்பகப் புற்று அல்லது கருவாய் புற்று இருந்தால் அவர்களுக்கு மார்பகப் புற்று வரலாம். இதைத்தவிர மரபணுக்களின் சடுதி மாற்றத்தினாலும் (மியூடேஷன்) மார்பகப்புற்று ஒருவருக்கு ஏற்படலாம்.

மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையின் முதல் நிலை என்ன?

ஒவ்வொரு மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டவருக்கும் ஏற்றதான முறையில் ஒரு சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும் இந்த குழுவில் நோயாளியை முதலில் பரிசோதித்த மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், பேத்தாலஜிஸ்ட், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர், நியூக்ளியர் மருத்துவர் மற்றும் புற்று நோய்க்கான சிறப்பு வல்லுனர்கள், மருந்து அளிக்கும் மருத்துவர் மற்றும் கதிர்வீச்சு நிபுணர் போன்ற அனைத்து தரப்பினரும் இக்குழுவில் இருக்க வேண்டும். மார்பகப் புற்று நோயின் தன்மையும் தீவிரமும் ஒவ்வொரு நோயாளிக்கும் மாறுபடும். எனவே ஒருவரின் நோயின் தன்மை, அவருக்கு இருக்கும் மற்ற நோய்கள், அவர் சிகிச்சைக்கு வந்து போகும் மார்க்கம் மற்றும் நோயாளியின் பொருளாதார நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டே இந்த நோய்க்கான சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.

மார்பகத்தை முழுவதுமாக நீக்குவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்குமா?

தேவையில்லை. கட்டியின் அளவு, அது பரவியிருக்கும் இடத்தையும் பொருத்தே அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். ஒரு பெண்ணின் மார்பில் ஒரு சிறிய அளவு கட்டியிருப்பதாக இருந்து பயாப்ஸி பரிசோதனையில் அது ஊடுருவக்கூடிய புற்றுநோய் என்று கூறப்பட்டாலும், புற்றுநோய் நிபுணர் குழு ஒன்றிணைந்து மார்பகத்தை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய அறுவை சிகிச்சையை நோயாளிக்கு பரிந்துரைக்கலாம். புற்று கட்டியையும் அதனைச் சுற்றியுள்ள திசுக்களை மட்டுமே நீக்கிவிட்டு கதிர்வீச்சு சிகிச்சை மூலம் வேறு எங்காவது பரவி இருக்கக்கூடிய செல்களையும் அழித்து விடலாம். ஆனால் கதிர்வீச்சு சிகிச்சை பற்றிய பயத்தினாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் இந்தியாவில் பல பெண்கள் மார்பகத்தை அகற்றும் சிகிச்சைக்கும் தயாராக இருக்கின்றனர்.

மார்பகப் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையில் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா?

டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் உள்ள மிகத் துல்லியமான மற்றும் பாதுகாப்பான லீனியர் ஆக்சிலேட்டர் என்ற கருவி புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சையில் பெரும் புரட்சியை ஏற்படுத்த உள்ளது. இதில் நோயாளி மூச்சு விடும் போது ஏற்படும் மார்பு தசைகளில் ஏற்ற இறக்கங்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் ஆக்டிவ் பிரீதிங் கோஆர்டினேட்டர் (ஏ பி சி) மற்றும் மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவதற்கு துணைசெய்யும் தொழில்நுட்பமும் (எம்டி ஐபிஎச்) இணைந்து செயல்படுகிறது. இதனால் சிகிச்சை அளிக்கப்படும் போது புற்றுக்கட்டி மற்றும் பாதிக்கப்பட்ட செல்களின் மீது மட்டுமே குறிவைத்து கதிர்வீச்சை செலுத்த முடிகிறது. இதையும் தாண்டி கதிர்வீச்சு வட்டத்துக்குள் நுரையீரல் அல்லது இதய தசைகளின் ஒருசெல் வந்தாலும்கூட இக்கருவி தன் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தி விடும். எனவே அறுவை சிகிச்சை மூலம் புற்றுக்கட்டி அகற்றப்பட்ட பின் அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையில் புற்று தோன்றிய பகுதியை மட்டுமே நோக்கி ரேடியேஷன் கதிர்கள் அனுப்பப்படும். இந்த நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மார்பக புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக குறைகிறது.

அறுவை மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை அளித்த பின்பு மார்பகப் புற்றுநோய் தோன்றினால் என்ன செய்வது?

இன்றைய நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் பலனால் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்பு 20 வருடங்களுக்கு மேலும் நோய் பரவாமல் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இன்றைய கீமோதெரப்பி சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட செல்களில் மட்டுமே சென்று வேலை செய்யக்கூடிய மருந்துகளும் துல்லியமான சிகிச்சை அளிக்க நமக்கு உதவியாக இருக்கின்றன. அறுவை சிகிச்சை மூலம் கட்டி முழுவதுமாக அகற்றப்பட்ட பின் ரேடியேஷன் தெரபி மூலம் கட்டியையும் கட்டியைச் சுற்றியுள்ள இடம் மற்றும் முழு மார்பகத்தின் எந்த பகுதியிலும் ஒரே ஒரு புற்றுநோய் பாதிக்கப்பட்ட செல் இருப்பினும் நுண்ணோக்கிகள் மூலம் மிகத் துல்லியமாக கண்டறிந்து கதிர்வீச்சு சிகிச்சை மூலம் அதை அழித்துவிட முடிகின்றது. எனவே இதனால் மார்பக புற்று உள்ளவர்கள் விரைவில் குணம் அடைவதுடன் நீண்ட ஆயுளுடன் வாழ முடிகிறது.

டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை மூத்த மருத்துவர் டாக்டர் சுரேந்திரன் அவர்கள்
25 வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு சிகிச்சை வல்லுனர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

அடுத்த வாரம் நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதற்கான அடிப்படைக் காரணங்களும் அவைகளை ரேடியோ தெரபி மூலம் எவ்வாறு குணப்படுத்த முடியும் என்பதை பற்றிய கருத்துக்களை கூற உள்ளார்.

மற்ற புற்றுநோய் பற்றிய சந்தேகங்களுக்கு மருத்துவர் சுரேந்திரன் அளித்த பதில்களை படிக்க கீழே கிளிக் செய்யவும்

மூளை புற்றுநோய்
https://www.hindutamil.in/news/brandhub/693409-concentrated-radiation-special-treatment-for-brain-cancer.html


உங்களின் கேள்விகளை kv@drkmh.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x