Last Updated : 25 Oct, 2017 05:51 PM

 

Published : 25 Oct 2017 05:51 PM
Last Updated : 25 Oct 2017 05:51 PM

மத்தாப்புகளும் சில சிதறல்களும்!

வெடிச்சிரிப்பு, பட்டாசு கொளுத்திப்போட்டது போல் படபட சிரிப்பு, மத்தாப்பு புன்னகை, ஆட்டம் பாம் போல் உற்சாக சிரிப்பு,.... இப்படி இன்னும் நிறைய அன்றாடப் பேச்சு வழக்கில் பட்டாசுகள் சிரிப்போடு சம்பந்தப்படுத்தி பேசப்படுகின்றன.

ஒரு புன்னகையின் ஆழத்தை இப்படி இணைக்கப்படும் பட்டாசின் அடைமொழி நமக்கு உணர்த்துமேயானால், இவ்வகையான பட்டாசுகள் எப்படிப்பட்ட ஒரு நிரந்தர பிம்பத்தை நம் மனதில் பதிய வைத்திருக்கிறது.

இப்படி நம் ஆழ்மனதின் பிம்பமாக, மகிழ்ச்சியின் எதிரொலியாக வெடித்துச் சிரித்து பூவாகச் சொரிந்த பட்டாசுகளுக்கு தற்போது நிலைமை அவ்வளவாகச் சரியாக இல்லை.

டெல்லி நீதிமன்றம் இந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்தது. பட்டாசுகளின் எதிர்ப்பு ஊடகங்கள் மூலமாகவும் எதிரொலித்தது.

இவ்வளவாக எதிர்மறையாகப் பேசப்படும் பட்டாசுகளின் சரித்திரம் பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகாவிட்டாலும் சுவாரஸ்யமான ஒன்று.

சந்தோஷத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்ட ஒரு பொருள் இன்று ஆபத்தானதாகப் பார்க்கப்படுவதன் காரணமும் இங்கே முக்கியமாகிறது.

சமீப காலம் வரை பல வீடுகளில் சீன பட்டாசு என்றே இவை அழைக்கப்பட்டன. அதன்படி, பட்டாசுகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில்தான். வெகு காலம் வரை இங்கிருந்து தான் அவை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டதால் இந்தப்பெயர்.

சீனாவில் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு சீனர் சமையல் அறையில் சல்பர், சால்ட்பெடேர் (பொடாசியம் நைட்ரேட்) மற்றும் கரிப்பொடியை அசந்தர்ப்பமாக கலக்க, அதை அடைத்து வைத்த மூங்கில் குழாய் வெடித்த வெடியில் பட்டாசுகளின் சிசேரின் பிறப்பு நடந்ததாகச் சரிபார்க்க இயலாத ஒரு சரித்திரக்குறிப்பும் இருக்கிறது.

இந்தக்குழந்தையின் பெயர் ஹூயோ யாயோ என்று சூட்டப்பட்டு நாளடைவில் உருவம், செயல் மாற்றம் கொண்டு ஊசி, ஒலி, ஆட்டம், என்று நம்மால் தனிப்பெயர்கள் இடப்பட்டுள்ளது.

இவ்வளவு காலம் முன் கண்டுபிடிக்கப்பட்டாலும், பட்டாசுகளாக அவை தயாரிக்கப்படத் தொடங்கியது சாங் டைனாஸ்டியின் காலத்தில் தான், அதாவது 960 -1279 AD. லி டியான் என்ற துறவியால் ஆயிரம் வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாளை அதாவது ஏப்ரல் 18, இன்றும் லி டியான் தினமாக கொண்டாடப்படுகிறது.

சீனாவின் மலிந்த விலை தொழிலாளர்கள் தான் இந்த அபார வளர்ச்சிக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கிழக்கு மேற்கு சம்பள வேறுபாடுகளுக்கு முன்பே சீனா வெடிகள் தயாரிப்பில் முதன்மையாக இருந்தது என்பது மறக்கப்படுகிறது.

முதலில் சீனாவில் இந்தப் பட்டாசுக்கள் மகிழ்ச்சியின் கொண்டாட்டச் சின்னமாக இல்லை. தீய சக்திகளை பயம்கொள்ளச்செய்ய என்றுதான் வெடிக்கப்பட்டது. இப்போதும் சவ ஊர்வலத்தில் நம் நாட்டில் இப்படி வெடிக்கப்படுகிறது. மற்ற அயல் நாடுகளிலும் ஹலோவீன் தினம் கொண்டாடப்படும்போது வானவேடிக்கை நிகழ்கிறது. இந்த ஹலோவீன் என்பது நம் நரகாசுரனுக்கு இணையான கெட்ட சக்தி. இந்தக்காரணத்திற்காகவேதான் நம் நாட்டிலும் மற்ற பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் தராமல் நரகாசுரனைக் கொன்ற தினமான தீபாவளியில் வெடிக்கப்படுகிறது.

மார்கோபோலாவால் பதிமூன்றாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டு ராணுவ தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டது. பின் இத்தாலியர்களால் பட்டாசு தயாரிக்க உபயோகப்படுத்தப்பட்டு, ஜெர்மனி இந்தத்தயாரிப்பில் முதல் இடத்தைப்பிடித்துக்கொண்டது.

கெட்ட சக்திகளை விரட்ட என்று கருதப்பட்டு நாளடைவில் கண்களுக்கு விருந்து என்று கவரப்பட்டு, பல நாடுகள் வானவேடிக்கை தினம் என்று கொண்டாட தொடங்கிவிட்டனர். இந்தத் தினத்தில் வானவேடிக்கை போட்டிகளும் நடைபெறும்.

இந்தப் போட்டியைக் காண பல தேசங்களிலிருந்து பார்வையாளர்கள் வந்து குவிவார்கள். மாண்ட்ரியல், கனடா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர் போன்ற இன்னும் பல நாடுகளில் இந்த வகை போட்டிகள் வருடாவருடம் நடக்கிறது.

எப்படி இந்தக் கலர் மத்தாப்புக்கள் வருகின்றன என்பதையும் பார்ப்போம். ஸ்டார்ஸ் என்று சுருக்கமாக சொல்லப்படும் பைரோதெக்னிக் நட்சத்திரங்களால் இது சாத்தியப்படுகிறது.

எரிபொருள், ஆக்ஸிஜனூக்கி, வண்ணம், சேர்ப்பான், க்ளோரின் கொடுக்கவல்ல ஒரு சேர்க்கை ஆகியவற்றால் இந்த ஸ்டார் உருபெறுகிறது.

சிவப்பு வண்ணத்திற்கு லிதியம் அல்லது ஸ்ட்ரோந்தியம், ஆரஞ்சு வண்ணத்திற்கு கால்சியம், மஞ்சளுக்கு சோடியம், பச்சைக்குப் பேரியம், தங்க நிறத்திற்கு இரும்பு அல்லது கரி பொடி, வெள்ளைக்கு அலுமினியம் இப்படிப் பல வண்ணம் சேர்க்கும் ரசாயனங்கள்.

பட்டாசுகள் சுற்றப்படும் பெட்டிகளின் மேல் இவை கொடுக்கப்படவேண்டும். சரி நம் நாட்டில் இந்த வான வேடிக்கைகள் எப்போது தொடங்கின? ஒருபுறம் சீனாவிற்கு முன்பாகவே நாம் கண்டுபிடித்துவிட்டதாக சொல்லப்படும் தேசபக்தர்களின் கூற்றிற்கு தகுந்த ஆதாரம் இல்லாததால், சுமார் 1400 ADக்களில் இந்தியாவில் இந்த வான வேடிக்கைகள் ஆரப்பித்திருக்ககூடும் என்று பிகே கோடே என்பவர் 1950 இல் பதிப்பிக்கப்பட்ட அவர் ஆய்வுகளில் கூறி இருக்கிறார்.

இரண்டாவது தேவராயர் சபையில் 1443 யில் வான வேடிக்கை நடத்தியதாக பெர்சியாவின் தூதராக இருந்த அப்துர் ரசாக் என்பவரும் பதிவு செய்துள்ளார்.

கஜபதி பிராபருத்திரதேவா என்பவரால் 1497-1539 ல் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட கவுடுகசிந்தாமணி என்ற புத்தகத்தில் இவற்றைத் தயாரிக்கும் முறை பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வான வேடிக்கைகள் தீபாவளியுடன் இணைக்கப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டில் தான்.

இதன் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், பட்டாசு தயாரிப்புக்குத்தேவையான வெடிமருந்து அப்போது இராணுவத்திற்கும் தேவையாக இருந்தது. அதனால் சாமானிய மக்களால் வாங்கப்படும் விலையில் பட்டாசுகள் இல்லை. மகாராஜாக்களும், ராஜாக்களும் மட்டுமே அவர் அவர்களுக்கான நிகழ்ச்சியில் இவற்றை வெடிக்க முடிந்தது. எப்போது வெடிமருந்துக்கான ராணுவ தேவை குறையப்பெற்றதோ, அப்போதுதான் இந்தப் பட்டாசு தொழில் சூடுபிடிக்கத்தொடங்கியது. முதலில் கொல்கத்தாவில் பின் சிவகாசியில் ஆரம்பிக்கப்பட்டது இந்தத் தொழிற்சாலைகள்.

சரி... முக்கியமான கட்டத்திற்கு வந்துவிட்டோம். இந்தத் தொழிற்சாலைகள் நம் நாட்டில் PESO அமைப்பின் பார்வைக்குட்படுத்தப்பட்டது. எல்லா நாடுகளுமே இந்தத்தொழிலை நிறையக் கட்டுப்பாடுகளின் கீழ் தான் வைத்துள்ளது. காரணம் வெடிமருந்தின் அபாயம், நெருப்பின் அபாயம், சத்தத்தின் அபாயம், வெளிச்சத்தின் அபாயம் என்று பல அபாயங்களை ஒன்று சேர்த்த ஒரு அபாயம் இந்த பட்டாசுகள்.

சிங்கப்பூரில் நேர்ந்த வெடிவிபத்தால் சில வருடங்கள் வரையில் பட்டாசுகள் தடை செய்யப்பட்டு பின் இப்போது தடை விலகி உள்ளது. சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தற்போது அனுமதிக்கப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டில் மேலே சென்று வெடிக்கும் ராக்கெட்டுக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, தற்போது ஐம்பது டெசிபெல்லுக்குள் வெடிக்கும் சில பட்டாசுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

வியட்னாமில் பாதுகாப்பை முன்னிட்டு பட்டாசுகள் அரசாங்கம் மட்டுமே தன் நிகழ்ச்சிகளில் வெடிக்க முடியும். தனி நபர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் பட்டாசுகள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்குமான தனி விதிமுறைகள் விதிக்கப்பட்டு, சுற்றுப்புறச்சூழல் தரம் பாதுகாக்கப்படுகிறது.

ஆனால், நம் நாட்டைப்பொறுத்த வரையில் தற்போது தடை உத்தரவைப் பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முக்கியமான புள்ளியில் நம்மைக்கொண்டு நிறுத்தி இருக்கிறது. பக்கம் பக்கமாக வரையப்பட்டிருக்கும் PESO விதிமுறைகள் சாதித்தது என்ன? நம்மை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில், இந்தப் பட்டாசுகளை நம்மை விட அதிக அளவில் உற்பத்தி செய்யும் சீனாவில் ஏன் இதைப்போல் ஒரு சூழல் உருவாகவில்லை?

காரணம், மக்களிடம் இல்லை செயல்படுத்தும் அரசாங்கத்திடம் தான். நமக்கு எதனால் பிரச்சனை என்பதை அறிந்து கொண்டு அதற்குக் கட்டுப்பாட்டு விதிகள் அமைத்து அதை ஒழுங்காக அமலுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே நமக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து ஒரு விடியல் கிடைக்கும்.

இவ்வளவு பேசிவிட்டு முக்கியமான ஒன்றை கவனிக்க விட்டு விட்டோம். ஜெர்மனி, பின்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஸ்வீடன், அமெரிக்கா என்று பல நாடுகளில் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கடைகளில் பட்டாசுகள் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நம் நாட்டைப் பொறுத்தவரையில் குழந்தைகளை இதன் உற்பத்தித் தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது என்று இருக்கிறதே தவிர, குழந்தைகள் பட்டாசுகளை தாங்களாகவே வாங்குவதில் தடை இல்லை.

ஆக.... மாற்றங்கள் எங்கு எதற்கு எப்படித் தேவை என்பதைக் கண்டுபிடிக்கவும் மாற்றம் தேவை என்பதை மாற்றுக்கருத்தாகக் கொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x