Published : 01 Nov 2016 08:59 AM
Last Updated : 01 Nov 2016 08:59 AM

இணைய களம்: ஒரு தந்தையின் சபதம்!

என்னுடைய பெயர் ‘கே’வில் தொடங்குகிறது. எனினும், என்னுடைய மகள்களுக்கு இனிஷியல் கே.ஒய். அதென்ன ‘கே.ஒய்’ என்கிற கேள்வியை என் குழந்தைகளும் சரி, நானும் சரி… அடிக்கடி எதிர்கொள்கிறோம். இன்றுகூட ஃபேஸ்புக் நிலைத்தகவலில் ஒருவர் பின்னூட்டத்தில் இதைக் கேட்டிருந்தார். வேறொன்றுமில்லை. என் துணைவியாரின் பெயர் ‘ஒய்’யில் தொடங்குகிறது.

முதலில் பள்ளியில்தான் ஆட்சேபணை தெரிவித்தார்கள். என் குழந்தையின் பிறப்புச் சான்றிதழிலேயே தந்தை, தாய் இருவரின் இனிஷியலும் சேர்த்துதான் கொடுத்திருக்கிறார்கள் என்றேன். “ஆனா, வேற யாருக்கும் இப்படி இனிஷியல் இல்லையே?” என்றார்கள். “2003-ல் வெளியிடப்பட்ட அரசு ஆணையே இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்ட பிறகு ஒப்புக்கொண்டார்கள்.

1991-ல் ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் தாயின் பெயரை இனிஷியலாக வைத்துக்கொள்ளலாம் என்று ஜெயலலிதா ஆணையிட்டார். தந்தையால் கைவிடப்பட்ட குழந்தைகள், விவாகரத்தாகி வேறொரு கணவரை மணம் புரிந்துகொண்ட பெண்ணின் குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்குச் சங்கடம் ஏற்படாமல் இருக்க இந்த ஏற்பாடு. ஏனோ அதிகாரிகள் இந்த அரசாணையை வழக்கம்போலத் தொலைத்துவிட்டார்கள். நிஜமாகவே ‘தொலைத்து’விட்டார்கள்.

பத்தாண்டுகள் கழித்து, தாய் பெயரை இனிஷியலாக வைப்பது குறித்த பிரச்சினையை பாமக எழுப்பியது. சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், தந்தை, தாய் இருவரின் பெயரின் முதல் எழுத்துகளையோ அல்லது தந்தை அல்லது தாய் இருவரின் பெயரின் முதல் எழுத்தையோ இனிஷியலாக வைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து, புதிய அரசாணை போடப்பட்டது.

அப்போது திருமணம் ஆகியிராத எனக்கு இந்த ஆணை மிகவும் நேர்மையானதாகப் பட்டது. உடனடியாக தி.க. தலைவர் ஆசிரியர் வீரமணிகூடத் தன்னுடைய பெயரை கி.மீ.வீரமணி என்று சில காலத்துக்கு மாற்றி வைத்துக்கொண்டிருந்ததும் தாக்கத்தை உண்டாக்கியது. எதிர்காலத்தில் பிறக்கப்போகும் என்னுடைய குழந்தைகளுக்குத் தாயின் பெயரையும் இனிஷியலாகச் சேர்ப்பேன் என்று அப்போதே சபதம் எடுத்துக்கொண்டு, ஆறு ஆண்டுகள் கழித்து அச்சபதத்தை நிறைவேற்றினேன்.

- யுவகிருஷ்ணா, பதிவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x