Published : 26 Nov 2016 10:05 AM
Last Updated : 26 Nov 2016 10:05 AM

சுனித் குமார் சட்டர்ஜி 10

இந்திய மொழியியல் அறிஞர்

உலகப் புகழ்பெற்ற பன்மொழி மொழியியல் அறிஞரும் கல்வியாளருமான சுனித் குமார் சட்டர்ஜி (Suniti Kumar Chatterji) பிறந்த தினம் இன்று (நவம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கல்கத்தாவில் ஹாவ்டா நகரில் ஷிவ்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார் (1890). தந்தை சமஸ்கிருத அறிஞர். 1907-ல் மோதிலால் சீலின் இலவசப் பள்ளியிலும், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் பயின்றார். 1911-ல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் 1913-ல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

* கல்கத்தா வித்யாசாகர் கல்லூரியில் விரிவுரையாளராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1914-ல் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1919-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒலிப்பியல் படிப்பிலும் (phonetics), டி.லிட்.டிலும் டிப்ளமோ பட்டங்கள் பெற்றார். பின்னர், லண்டனில் ஒலியியல், இந்தோ - ஐரோப்பிய மொழியியல் கல்வியோடு, பிராகிருதம், பாரசீகம், பண்டைய அயர்லாந்து மொழி, ஜெர்மனியின் பண்டைய மொழி கோதிக் மற்றும் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

* பாரீஸ் சென்று சோர்போன் பல்கலைக்கழகத்தில் இந்தோ - ஆரிய, இந்தோ - ஐரோப்பிய மொழியியல், கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1922-ல் இந்தியா திரும்பிய இவர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

* மலேயா சுமித்திரா, ஜாவா மற்றும் பாலி ஆகிய இடங்களுக்கு ரவீந்திரநாத் தாகூருடன் பயணம் மேற்கொண்ட இவர், அங்கெல் லாம் இந்தியக் கலை, கலாச்சாரம் குறித்து விரைவுரைகள் ஆற்றி னார். இந்தப் பயண அனுபவம் குறித்து நூல் எழுதியுள்ளார்..

* கல்கத்தா பல்கலைக்கழகம் சார்பில் லண்டனில் ஒலியியல் விஞ்ஞானம் பற்றிய சர்வதேச மாநாட்டிலும் ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற மொழியியல் மாநாடுகளிலும் பங்கேற்றார். இந்திய அரசு இவரை சமஸ்கிருதக் கழகத்தின் தலைவராக நியமித்தது.

* ஆங்கிலத்தில் 30, வங்க மொழியில் 22, இந்தியில் 7 நூல்களை எழுதியுள்ளார். இவற்றைத் தவிர நூற்றுக்கணக்கான மொழி ஆய்வுக் கட்டுரைகளையும் பல சமஸ்கிருதக் கவிதைகளையும் எழுதியுள்ளார்.

‘ஆரிஜின் அன்ட் டெவலப்மன்ட் ஆஃப் தி பெங்காலி லாங்குவேஜ்’ என்ற இவரது நூல் மாணவர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. ‘பெங்காலி ஃபொனடிக் ரீடர்’, ‘இன்தோ-ஆர்யன் அன்ட் ஹிந்தி’, ‘ராமாயணா: இட்ஸ் கேரக்ட்டர்ஸ்’, ‘ஜெனசிஸ் அன்ட் எக்சோடஸ்: ஏ ரெஸ்யூம்’, ‘லாங்குவேஜஸ் அன்ட் லிட்டரேசர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ உள்ளிட்ட நூல்கள் பிரபலமடைந்தன.

* கிழக்கு வங்க சட்டசபையின் சபாநாயகராக 1952 முதல் 1958 வரை செயல்பட்டார். 1969-ல் சாகித்ய அகாடமியின் தலைவராகவும், கல்வி, அறிவியல், மொழி தொடர்பாக ஐரோப்பா, ஆசியா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அமைப்புகளில் கவுரவ உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

* 1952-ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. சமஸ்கிருதப் புலமைக்காக ‘பிரேம்சந்த் ராய்சந்த் ஸ்டூடன்ட்ஷிப்’ விருது கிடைத்தது. ராயல் ஏஷியாடிக் சொசைட்டியின் ஃபெலோவாக நியமிக்கப்பட்டார்.

* சாகித்ய வாசஸ்பதி பட்டம், ‘இந்தியாவின் தேசிய ஆசிரியர்’ என்ற கவுரவம், பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் கவுரவங்களும் பெற்றார். மொழியியல் அறிஞர், கல்வியாளர், இலக்கியவாதி என பன்முகத் திறன் கொண்ட சுனித் குமார் சட்டர்ஜி, 1977-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x