Last Updated : 15 Aug, 2022 11:59 AM

1  

Published : 15 Aug 2022 11:59 AM
Last Updated : 15 Aug 2022 11:59 AM

இந்தியா @ 75: சுதந்திர தினக் கொடியேற்றமும் ஆரஞ்சு மிட்டாயும்!

ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த இந்திய சுதந்திரத்தின் கதை மிக நீண்டது. ஆயிரமாயிரம் பலிகளைக் கொண்ட அந்த வரலாறு தலைமுறை தோறும் அவர்களின் காலத்திற்கு ஏற்றபடியே நினைவு கொள்ளப்பட்டும் நெஞ்சில் நிறுத்தி வைக்கப்பட்டும் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த அடுத்து சில வருடங்களில் பிறந்து வளர்ந்த தலைமுறையினருக்கு இந்தியச் சுதந்திரம் ரத்தச் சரித்திரம்... வேட்கையின் சூடுதணிந்து சுதந்திரக் காற்றை உள்வாங்கத் தொடங்கிய 60, 70-களின் தலைமுறைக்கு அது புத்தகச் சரித்திரம். சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்து உலகின் பிற போக்குகளுக்குள் நுழையத் தொடங்கிய 80, 90-களின் தலைமுறைக்கு இந்தியச் சுதந்திரம் என்பது மிட்டாய் சரித்திரம். அதுவும் ஆரஞ்சு மிட்டாய் சரித்திரம்.

பாடப்புத்தகத்தில் தண்டி யாத்திரையையும், கத்தியின்றி ரத்தமின்றி நடந்த யுத்தத்தையும் புரிந்தும் புரியாமலும் படித்த 80, 90-களின் குழந்தைகளாய் இருந்து இன்று 40 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மிட்டாய் சரித்திரமாக தான் நினைவில் நிற்கும். வாரநாட்களில் பள்ளிச் செல்ல கசந்த அந்த தலைமுறையினர் வருடத்தின் இரண்டு நாள் மட்டும் முகம் சுழிக்காமல் பள்ளிக்குச் சென்றனர் என்றால், அது சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் தான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது அப்போது தெரிந்திருக்காது. நினைவில் நின்றதெல்லாம் இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள். இரண்டு நாளும் பள்ளியில் கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார்கள் என்பது மட்டுமே.

நிரந்தர கொடிக்கம்பம் இல்லாத ஆரம்பப் பள்ளிகளில் சுதந்திர தினத்திற்கு தயாராவதும் ஒரு கொண்டாட்டம் தான். சுதந்திர தினம் வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்பே அந்த கொண்டாட்டம் தொற்றிக் கொள்ளும். சுதந்திர, குடியரசு நாளுக்கு முந்தைய நாளில் அது உச்சம் தொட்டிருக்கும். விழாவுக்கு முந்தைய நாள் பள்ளிக் கூடத்தின் ஏதோ ஒரு மூலையில் அல்லது ஊர் பெரியவரின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக்கம்பத்தை பள்ளிக்கு தூக்கி வர வேண்டும். சிறுவர்கள் என்பதால் ஒரு கம்பத்தைத் தூக்க ஏழு, எட்டு பேர் போவோம். கம்பி முழுவதும் நிரம்பி நின்று முன்னே செல்பவர்களின் புறங்காலில் மிதிக்க தட்டுத் தடுமாறி ஒற்றை ஊர்வலம் போவோம்.

கம்பியின் பயணம் பள்ளியை நெருங்குவதற்குள் அதனை நட்டு வைப்பதற்கு ஒரு குழு, குழிதோண்டிக் கொண்டிருக்கும். கொஞ்சம் பலவான்கள் கடப்பாரையை பயன்படுத்தி மண்ணைக்குத்த, பலம்குன்றியவர்கள் மண்ணை அள்ளி வெளியே போட வேண்டும். சுந்திர தினங்கள் வலியவன், வறியவன் என யாரையும் ஒதுக்கி விடவில்லை. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டது. பத்தடி இருக்கும் கம்பி நிமிர்ந்து நிற்க ஒன்றரை அடியாழக் குழி தோண்ட வேண்டும். மேலே தோண்டும் போது எளிமையாக இருக்கும் வேலை ஆழமாக ஆழமாக பெண்டு கழட்டி விடும். கடப்பாறை கம்பி குத்த முடியாது எளிய பிள்ளைகள் தரையோடு படுத்து வலக்கை முழுவதையும் குழிக்குள் இறக்கி தேங்காய் சிரட்டையால் மண்ணை வெளியே அள்ளிப்போட வேண்டும்.

பக்குவமாய் குழிதோண்டி பந்தக்கால் நடுவது போல பதுமானமாய் கம்பியை உள்ளே இறக்கி செங்கல்கள் தேடி மண்ணும் கல்லுமாய் போட்டு கம்பியை ஆடாமல் நிலை நிறுத்த வேண்டும். நிலைத்தன்மையை உறுதி செய்ய இருப்பதிலேயே பொடியன் ஒருவனை மேலே ஏற்றி விட்டு ஆட்டிப்பார்த்துக் கொள்வோம். அந்திச்சூரியன் விடை பெறும் போது வேலையும் முடிந்திருக்கும். ஒருவர் உடல் புழுதியை மற்றவர் கேலி செய்த படியே வீட்டிற்கு நடந்து செல்லும் போது நெஞ்செல்லாம் மறுநாள் விருப்பம் போல கிடைக்கும் ஆரஞ்சு மிட்டாய்க்காய் ஏங்கிக்கிடக்கும்.

கொடியேற்றும் நாள் காலை குளித்து எண்ணெய் பூசி தலைவாரி, சரியாக தேய்ப்படாத எண்ணெய் காலுடன் கேந்திப்பூவும், செம்பருத்திப் பூவும் பறித்துகொண்டு வர தோட்டக்காடு தேடி ஓடுவோம். கொடியில் வைக்க பூ கொண்டு போகிறவர்களுக்கு அதிகமாக ஆரஞ்சு மிட்டாய் கிடைக்கும். நேற்று வேலை செய்தற்கு கொஞ்சம், பூ கொடுப்பதற்கு கொஞ்சம் என எத்தனை ஆரஞ்சு மிட்டாய் என மனம் கணக்கு போட்டபடி, சட்டையில் பதுக்கி வைத்திருக்கும் பூவுடன் பள்ளி நோக்கி ஓடி, கொடி விரித்து பூ தூவி, கொடியேற்றி பட்டொளி வீசி பறக்கு பாரதக் கொடி எனப்படி, இந்தியார் யாவரையும் சகோதரர்களாய் உறுதிமொழியேற்று காத்திருக்கையில் கூட்டத்தைத் கிளித்துக் கொண்டு வரும் ஆசிரியர் ஒருவரின் மேஜை. கொடிக்கம்பத்திற்கு கீழை மேஜை வைக்கப்பட்டு, தாம்பூல தட்டு ஒன்றில் மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு என விதவிதமாய் ஆரஞ்சு மிட்டாய் கொட்டி குவிக்கப்பட்டிருக்கும்.

ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுடன் தொடங்கும் வரிசை இரண்டு மூன்று என நீண்டு ஐந்தாம் வகுப்பை அடையும் போது தட்டின் உள்ளே எட்டிப்பார்க்கும் அளவிற்கு மிட்டாய் குறைந்து பெரிய பிள்ளைங்களுக்கு ரெண்டுதான்பா.. என சுளையத் தருவது போல இரண்டு மிட்டாய் கிடைக்கும். ஏமாற்றத்துடன் கிளம்பும் போது நேத்து வேலை செஞ்சவங்க எல்லாம் நின்னுங்கப்பா மேஜையை தூக்கிப்போடணும் என ஆசிரியர் நிறுத்த வேண்டா வெறுப்பாய் நிற்கும் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த அரை பாக்கெட் ஆரஞ்சு மிட்டாய் மீண்டும் தட்டில் கொட்டப்படும். வேலை செய்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

வேலை எல்லாம் முடிந்து உள்ளங்கை கொள்ள ஆரஞ்சு மிட்டாயுடன் ஆனந்தமாய் வெளியேறி முதல் மிட்டாயை வாயில் அதக்கி சாறு இறக்கும் போது தண்டி யாத்திரையும் ஒத்துழையாமை இயக்கமும் இனிப்பாகவே மனதிற்குள் இறங்கியது. கண்கள் மூடி ருசியில் லயித்து அடுத்த மிட்டாயை எப்படி ருசிக்கலாம் என எண்ணிக் கொண்டிருக்கும் போது, வாத்தியாரின் குரல் வேகமாய் அழைக்கும். மிட்டாய் வச்சிருக்கியால என கேட்கும் போது ஒரு மாதிரியாய் தலையாட்ட வாத்தியார் பக்கத்தில் நிற்கும் பால்வாடி குழந்தைகள் கண்ணில் படுவார்கள்.

அப்புறம் என்ன... கைகொள்ள ஆரஞ்சு மிட்டாய்கள் பிஞ்சுகளின் உள்ங்கைகளுக்கு மாறியிருக்கும்... கூடுதல் பங்குக்காக வேலை செய்து வாங்கிய கூலி மிட்டாய் தானமாய் தரப்பட்டதும் வாயில் அதக்கிய முதல் மிட்டாயின் சாறு தோமிர்தமாய் தொண்டையை நனைக்கும்.. பள்ளியை பராமரிக்கச் சொல்லித்தந்த ஆரஞ்சுமிட்டாய் சுதந்திர தினம் பகுத்துண்டு வளரவும் வைத்தது..!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x