Last Updated : 05 Aug, 2022 07:57 PM

 

Published : 05 Aug 2022 07:57 PM
Last Updated : 05 Aug 2022 07:57 PM

PS for 2K கிட்ஸ் - 8 | பொன்னியின் செல்வன் - குந்தவை மீது பொன்னி நதி பாயும் தேசம் பாசம் கொள்வது ஏன்?

ஆ.மதுமிதா

இளைய பிராட்டி குந்தவை. வேறு எந்த ஓர் அறிமுகமும் இவருக்கு நாம் கொடுக்க வேண்டியதில்லை. சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வி, கரிகாலனின் தங்கை, அருள் மொழிவர்மரின் அன்புத் தமக்கை, வந்தியத்தேவனை காதல் எனும் சிறையிலடைத்த சோழ இளவரசி, சோழ ராஜ்ஜியத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெருஞ்செல்வி என்று இவரைக் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்.

புதினத்தில் மட்டுமின்றி வரலாற்றிலும் பெரும் செல்வாக்கைக் கொண்டவர் குந்தவை. தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் "ஆழ்வார் பராந்தக குந்தவையார்" என்று பொறிக்கப்பட்டுள்ளதாக அமரர் கல்கி குறிப்பிட்டுள்ளார். ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்தும் வந்தார். கதையில் வெகு விரைவிலேயே அறிமுகப்படுத்தப்படும் கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒருவர்.

கல்கி இவரை அறிமுகப்படுத்தும் விதத்திலும் கதையின் இக்கட்டான கட்டங்களில் இவர் எடுக்கும் சாமர்த்தியமான முடிவுகளிலும் குந்தவை மீது நமக்கு ஒரு தனி மரியாதை எழுகிறது. நான் முன்னரே கூறியதுபோல் இப்புதினத்தில் பெண் கதாபாத்திரத்திரங்களுக்கு பஞ்சமில்லை.

கூச்ச சுவாபம் கொண்ட வானதி, தான் ஒருதலையாக காதலிக்கும் வந்தியத்தேவனுக்காக கரிகாலனை கொன்ற பழியை ஏற்க முன்வரும் மணிமேகலை, பாண்டிய மன்னனை கரிகாலர் கொன்றதற்காக சோழ குலத்தை பழிதீர்க்க வந்த பேரழகும் பேராபத்தும் நிறைந்த நந்தினி , கணவர் தங்கள் மகனை ராஜ்ஜியம் ஆளும் ஆசை காட்டாமல் சிவபக்தனாக வளர்த்து வர சொன்னதைக் கடைப்பிடித்து வாழும் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி உள்ளிட்ட அரசுகுலத்தை சேர்ந்த பெண் கதாபாத்திரங்கள் கதையில் ஏராளம்.

ஆனால், இவர்கள் அனைவரிடமும் இருந்து தனித்து திகழ்பவர் குந்தவை. சோழ நாட்டில் உள்ள அனைவருக்கும் செல்லப்பிள்ளை அருள்மொழிவர்மன். ஆனால், எல்லாரிலும் அதிகமாக அவரிடம் வாஞ்சையுடனிருந்தவள் குந்தவைதான். அருள்மொழிக்கு இரண்டு வயதே மூத்தவளான போதிலும் தம்பியை வளர்க்கும் கடமையை தன் தலைமேலேயே சுமந்திருப்பதாக இளைய பிராட்டி எண்ணியிருந்தார். தமக்கை இட்ட கோட்டைத் தம்பி தாண்டுவது கிடையாது. தமக்கையின் வாக்கே, தம்பிக்குத் தெய்வத்தின் வாக்காயிருந்தது!

தம்பியின் முகத்தைத் தமக்கை அடிக்கடி உற்று நோக்குவார். விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டுமல்லாமல் தூங்கும் போதுகூட மணிக்கணக்காக பார்த்துக் கொண்டிருப்பார். "இந்தப் பிள்ளையிடம் ஏதோ தெய்விக சக்தி இருக்கிறது! அதை வெளிப்படுத்திப் பிரகாசிக்கச் செய்ய வேண்டியது என் பொறுப்பு!" என்று எண்ணமிடுவாள். பெண் பிள்ளைகள் அரசு காரியங்களில் ஈடுபடக்கூடாது என்ற வரைமுறைகளெல்லாம் இன்றி ஒரு சுதந்திரப் பெண்ணாக இருந்து தன் தம்பியை வீரனாகவும் சோழ சக்கரவர்த்தியாகவும் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அரசகுலப் பெண்கள் வேறு நாட்டு மன்னருக்கு மணமுடித்து பிற ராஜ்ஜியங்கள் மற்றும் நிலப்பிரபுக்களுடன் கூட்டணியை உருவாக்க பயன்படுத்தப்பட்ட ஒரு காலத்தில், குந்தவை எந்த வெளிநாட்டு அரசனையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தனது வாழ்நாள் முழுவதும் அழகிய பொன்னி நதி பாயும் சோழ ராஜ்ஜியத்திலேயே கழிக்க விரும்புகிறார்.

குந்தவை சோழ சாம்ராஜ்ஜியம் முழுவதும் மிகவும் மதிக்கப்படுகிறார். பல அரச குடும்பங்களின் இளவரசிகள் அவருடைய பராமரிப்பில் இருக்க பழையாறைக்கு அனுப்பப்படுகிறார்கள். அப்படி வந்தவள்தான் கொடும்பாளூர் இளவரசி வானதி. அப்படி அவரிடம் வரும் இளம் பெண்களுக்கு பல்வேறு கலைகள், இசை மற்றும் இலக்கியங்களை கற்பித்து வளர்க்கிறார். அவள் தன் சகோதரனுக்கு ஏற்ற மனைவியைக் கண்டறிய பெண் பார்க்கும் படலத்திலும் ஈடுபடுகிறார். அதில் வானதியை தேர்வு செய்து, அவளிடம் அதீத பாசம் வைத்தும் தன் தம்பிக்கான சரியான மனைவியாக மலர்வதற்கு வானதியைப் பயிற்றுவிக்கவும் முயல்கிறார்.

அரண்மனைப் பெண்டிர், ஆலயத் திருப்பணி செய்தல் அந்த நாளில் பொது வழக்காயிருந்திருக்க, சுந்தர சோழரின் அருமைப் புதல்வி குந்தவைப் பிராட்டி மட்டும் வேறொரு வகை அறத்துக்குத் தம் உடைமைகளைப் பயன்படுத்தினார். நோய்ப்பட்டிருந்த தம் தந்தையின் நிலையைக் கண்டு இரங்கியதனால் தானோ என்னவோ, நாடெங்கும் தர்ம வைத்திய சாலைகளை நிறுவ வேண்டும் என்று ஆர்வம் கொள்கிறார்.

பழையாறையில் பராந்தக சக்கரவர்த்தி பெயரால் ஆதுரசாலை ( பண்டைய காலத்தில் நமது கோவியிகளில் குளம் வெட்டி, அதற்குப் பக்கமாக ஓர் அறையில் நமக்கு தேவையான மருத்துவ மூலிகைகளை வைப்பார்கள். இதுவே ஆதுரசாலை) ஏற்படுத்தியது போல தஞ்சையில் தன் தந்தையின் பெயரில் ஆதுரசாலை அமைக்கவும் கட்டளையிடுகிறார்.

அரசுகுலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி சோழ நாட்டு மக்களுக்கும் குந்தவை மீது அதீத மரியதையும் தனிப் பிரியமும் உள்ளது. பெரிய பழுவேட்டரையர் தன் ராணியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடுகிறார் என்று சொல்லி நந்தினி மீது ஓரளவு அதிருப்தி கொண்டிருந்த மக்களும் அவள் குந்தவையை தஞ்சை கோட்டை வாசலுக்கு வந்து வரவேற்றதால் அவள் பேரில் கொண்ட அசூவை குறைகிறது.

வழக்கமான அரசகுலப் பெண்கள் செய்யும் பணிகள் தானே இவரும் செய்கிறார் என்று இவரைக் குறைத்து இடைபோட்டு விட வேண்டாம். ராஜ தந்திரங்களிலும் சாமர்த்தியசாலியானவர் நம் இளவரசி. ராஜ்ஜியம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்தவர், தன் சகோதரனை உடனடியாக வீட்டிற்கு வரவழைக்க வந்தியத்தேவன் மூலம் ஏற்பாடு செய்கிறார். தன் தந்தைக்கு வரக்கூடிய எந்த வகையான ஆபத்தையும் திசைதிருப்ப அவர் அருகில் இருக்க தஞ்சாவூருக்குச் சென்று, பழுவேட்டரையர்களைக் குறித்து அவரை எச்சரிக்கவும் செய்கிறார். தன் தந்தை மந்தாகினி குறித்து கூறியதை வைத்து நந்தினியை சந்தேகிக்கின்றார். அது மட்டுமின்றி, தற்செயலாக பழுவேட்டரையர்கள் வந்தியத்தேவனைக் கைப்பற்றினால், அவனைக் காப்பாற்ற தலைநகரில் தான் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். அதிர்ஷ்டவசமாக வந்தியத்தேவன் தப்பித்து, அதற்குப் பதிலாக பினாகபாணி பிடிபடுகிறான்.

நந்தினி மந்திரவாதி ரவிதாசனை அடிக்கடி சந்திப்பதையும், அவள் தீட்டும் சதி திட்டத்தையும் ஒற்றர்கள் உதவியின்றி தானே ஓரளவு அறிந்து கொண்டு முடிந்த அளவிற்கு போட்டு வாங்க முயல்கிறார். மந்திரம், துரோகம் ஆகியவை குறித்து பேசுகையில் நந்தினி முகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று கவனித்துக் கொண்டே இருக்கிறார். இருப்பினும் நந்தினியை சூழ்ச்சிகள் செய்வதிலும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் போன்ற தந்திரங்களில் அவராலேயே மிஞ்சுவது இயலவில்லை.

வந்தியத்தேவன் மீதான காதலால், அவன் ஒற்றன் என்று சின்னப் பழுவேட்டரையரால் தேடப்படுவதால் விரைவில் அகப்பட்டுக்கொள்வான் என்று நந்தினி கூறும் ஒவ்வொரு முறையும் தன் மனத்தில் எழும் பீதியை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் இருக்க அவதிப்படுகிறார் பாவம்.

மந்தாகினியைப் பற்றி உண்மையை அவரது தந்தை அவரிடம் சொன்னபோது, நந்தினியின் தாய் பற்றிய உண்மையை யூகிக்கிறாள். மேலும் அருள் மொழிவர்மனுடன் அவர் நடத்திய உரையாடல் அவரது சிறந்த குணம் வெளிப்படுகிறது. நந்தினி, மந்தாகினியின் மகள் என்பதை அறிந்ததோடு , சுந்தர சோழர் தான் நந்தினியின் தந்தை என்றும் நினைக்கிறாள். நந்தினி தன் சகோதரி என்றும், அவளை வெறுப்பதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் அருள்மொழியிடம் கூறுகிறார்.

கதையின் முடிவில் காதலர்கள் இருவரும் நடந்தவை குறித்து பேசுகையில், நந்தினியை பாம்பு என்று வந்தியத்தேவன் சொல்வதைக் கூட மறுதலிக்கிறார். 'நந்தினி பிறக்கும்போதே பாம்பாகவோ சிறுத்தையாகவோ பிறக்கவில்லை; நாங்கள் தான் அவளை அப்படி செய்து விட்டோம்' என்று கூறி வருந்துகிறார்.

வந்தியத்தேவனிடம் நந்தினியின் பெற்றோர் பற்றி அவர் அறிந்த உண்மையைக் கூறி, பாண்டிய ஆபத்துதவிகளின் பிடியில் இருந்து அவளைக் காப்பாற்றவும் விரும்புகிறாள். பின்னர் ஆதித்த கரிகாலனிடம் நந்தினி அவனது தங்கை என்றும் எச்சரிக்கிறாள். குந்தவை வரும் ஆபத்தை தவிர்க்க இவ்வளவு முயற்சிகள் செய்தபோதிலும், நந்தினியின் சதியினால் ஆதித்த கரிகாலன் இறந்துவிடுகிறார்.

தன் சகோதரனை இழந்த துக்கம், வந்தியத்தேவன் தன் சகோதரனை கொன்ற கொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்டது ஆகியவற்றை எல்லாம் விட நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே என்ற கவலைதான் அதிகமாக இருந்திருக்கலாம்.

இந்த கலவரத்துக்கிடையில், மணிமேகலை காதல் ஒப்புதல் வாக்குமூலம் (வந்திய தேவனுக்காக) கொள்வது மட்டுமன்றி கரிகாலனின் கொலைக்கான பழியை சுமக்க முயற்சிக்கிறாள்.

வந்தியத்தேவனை தன் காதலன் என்று மனிமேகலை கூறியபோதிலும் அவள் மீது குந்தவை பொறாமை காட்டவில்லை. இந்த முதிர்ச்சியும், சிந்தனைத் தெளிவும்தான் நாவலில் வரும் மற்ற பெண்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. நந்தினி, வந்தியத்தேவனிடம் உணர்ந்திருக்க வேண்டிய அன்பைக் குறித்து அவனிடம் பேசும்போதும் ​​பொறாமையின் அறிகுறிகளே குந்தவையிடம் இல்லை. ஏனென்றால், தன் காதலனின் அன்பை உறுதியாக நம்புகிறார். காட்டினுள் பித்துப் பிடித்தவள் போல சுற்றிக் கொண்டிருந்த மணிமேகலையைக் கண்டுபிடித்த கந்தமாறனைச் சந்திக்க கடம்பூருக்குச் செல்லும்படி அவள் வந்தியத்தேவனை அனுப்புகிறாள். மணிமேகலை உடலும் மனமும் நன்றாக இருந்திருந்தால், குந்தவை அவளை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வந்தியத்தேவனை கண்டிப்பாக கொடுமைப்படுத்தியிருப்பார்.

ஓர் இளவரசி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு குந்தவை உண்மையிலேயே ஒரு சிறந்த உதாரணம். பெண்ணானவள் அழகுடன் திகழ்வதைக் காட்டிலும் அறிவுடன் திகழ்வது அவசியம் என்றும் புரியவைத்தவர் குந்தவை தேவி.

| தொடரும்... |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x