Published : 17 May 2016 12:11 PM
Last Updated : 17 May 2016 12:11 PM

தீரேந்திர வர்மா 10

இந்தி கவிஞர், மொழியியல் வல்லுநர்

பிரபல இந்தி கவிஞரும், எழுத்தாளரும், மொழியியல் ஆராய்ச்சி யாளருமான தீரேந்திர வர்மா (Dhirendra Verma) பிறந்த தினம் இன்று (மே 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் (1897) பிறந்தார். இவரது தந்தை, ஆரியசமாஜக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தீரேந்திரனிடம் சிறுவயது முதலே அப்பாவின் தாக்கம் இருந்தது.

# பரேலி, நைனிடாலில் பள்ளிப்படிப்பை முடித்தார். லக்னோ குயீன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். இந்தியை விசேஷப் பாடமாக எடுத்து படித்து 1914-ல் பட்டம் பெற்றார். அலகாபாத் சென்ட்ரல் கல்லூரியில் சேர்ந்து 1921-ல் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

# இந்தியாவில் 1917-23 காலகட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் குறித்து குறிப்பேட்டில் எழுதி வந்தார். இது 4 பாகங்கள் கொண்ட ‘மேரீ காலேஜ் டைரி’ என்று இந்தியில் புத்தகமாக வெளிவந்தது. பிரான்ஸின் பாரீஸ் பல்கலைக்கழகத்தில் 1934-ல் டி.லிட். பட்டம் பெற்றார். இந்தி மற்றும் வ்ரஜபாஷாவில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

# அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதலாவது இந்தி விரிவுரையாளராக 1924-ல் நியமிக்கப்பட்டார். பின்னர் பேராசிரியராகவும் அத்துறை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். சாகர் பல்கலைக்கழகத்தில் மொழி அறிவியல் துறை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் ஜபல்பூர் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டார்.

# நூல்களைப் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டவர். இவருடைய சிந்தனை தனித்துவம் வாய்ந்தது. மொழி, இலக்கியத்தை கலாச்சாரத் தின் அடிப்படையாகவே கருதுவார். மொழி, இலக்கியங்களின் இளங் கலை, முதுநிலை பாடத்திட்டங்களில் பல சீர்திருத்தங்கள் செய்தார்.

# மிகவும் தெளிவாகவும், நன்கு புரியும்படியும் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பார். மொழி அறிவியல் போன்ற பாடங்களைக்கூட எளிமை யாக, சரளமாக கற்பிப்பார். முன்னுதாரண ஆசிரியராகத் திகழ்ந்தார்.

# இந்திய மொழிகள் சம்பந்தமான ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு இந்தி மொழியின் முதல் அறிவியல்பூர்வமான வரலாற்றை 1933-ல் எழுதினார். தனது ஆய்வுகளின் அடிப்படையில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். வ்ரஜபாஷா தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொண்டு பிரெஞ்சு மொழியில் கட்டுரை எழுதினார். அது இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

# ‘வ்ரஜபாஷா’, ‘வ்ரஜசாப் கா வ்யாகரண்’, ‘அஷ்டசாப்’, ‘சூர்சாகர் ஸார்’ என்பது உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அதில் பல நூல்கள் இந்தி இலக்கியத்தின் செவ்வியல் நூல்களாகப் போற்றப்படுகின்றன. தரம் வீர் பாரதி உள்ளிட்ட பல பிரபல எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

# இந்துஸ்தானி அகாடமியின் உறுப்பினராக நீண்ட காலம் செயல்பட்டார். 1958-ல் இந்திய மொழியியல் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். முதலாவது இந்தி கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக இருந்தார். மொழி, இலக்கியம் தொடர்பான அறியப்படாத உண்மைகளை ஆராய்வதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவர்.

# மொழி ஆராய்ச்சிக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவரும், இந்தி இலக்கியத்துக்கு புது வடிவம் கொடுத்தவருமான தீரேந்திர வர்மா 76-வது வயதில் (1973) மறைந்தார். ‘இந்தி இலக்கிய களத்தைப் பொருத்தவரை, அவரை ஒரு தனி நபராக கருதமுடியாது. அவர் ஒரு நிறுவனம் போல சாதனை படைத்திருக்கிறார். ஒரு யுகம் போல திகழ்ந்திருக்கிறார்’ என்று இந்தி இலக்கிய ஆர்வலர்களால் தீரேந்திர வர்மா இன்றளவும் போற்றப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x