Published : 20 Apr 2016 08:44 AM
Last Updated : 20 Apr 2016 08:44 AM

மன்னா.. என்னா?- தேர்தல் அறிக்கை செய்யும் மாயம்!

புத்தக காற்றாடி மாயாஜால அறை திறப்பு விழாவால் அரண்மனை வளாகம் களைகட்டியிருந்தது. மந்திரி பிரதானிகள், அதிகாரிகள், பொதுஜனங்கள் கூட்டம் அலைமோதியது.

குதிரையில் வந்திறங்கினார் மன்னர். ‘‘ஸ்.. ப்பா.. என்ன வெயில்.. என்ன வெயில்’’ என்று அங்கவஸ்திரத்தால் வியர்வையை துடைத்தபடியே மாயாஜால அறைக்குள் நுழைந்தார். மேலே ராட்சத மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது. ஆளையே இழுத்துக்கொண்டு போய்விடும் போலிருந்தது காற்றின் வேகம். வெயிலில் வந்த களைப்பு தீர நின்று சிறிது நேரம் காற்று வாங்கிவிட்டு, அறையைப் பார்வையிட புறப்பட்டார்.

அதென்ன புத்தக காற்றாடி மாயாஜாலம்? அறைக்குள் ஆங்காங்கே காற்றாடிகள் இருக்கும். அதன் அருகே ஏதாவது புத்தகத்துடன் போய் நிற்க வேண்டும். அந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் உண்மை என்றால், காற்றாடி சுற்றாது. பொய் என்றால் சுற்றும். இதுதான் மேட்டர்.

மக்களுக்கு குஷியோ குஷி. தங்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்கள், தாத்தா எழுதி வைத்துவிட்டுப் போன உயில், ‘நலம், நலம் அறிய ஆவல்’ என்று உறவினர் எழுதிய கடிதம், மளிகைக்கடை பில்.. இப்படி கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து, காற்றாடி சுற்றுகிறதா என்று பார்த்து குதூகலித்துக் கொண்டிருந்தனர். சத்தியசோதனை, திருக்குறள், பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வைத்தபோது காற்றாடி துளிகூட அசையவில்லை.

இதையெல்லாம் பார்த்து வியந்தபடியே வெளியே வந்த மன்னர், ‘‘ஆமா.. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் என்று சொல்லி ஒரு புத்தகக் கட்டுகளை கொடுத்தேனே. அதை என்ன செய்தீர்கள்?’’ என்றார்.

‘‘மன்னா! அறை வாசலில் ராட்சத மின்விசிறி சுற்றுவதை கவனித்திருப்பீர்களே. எல்லாம் தேர்தல் அறிக்கைகள் செய்யும் மாயம். அந்த கட்டுகளைத்தான் அதன் அடியில் வைத்திருக்கிறோம்’’ என்றனர் பணியாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x