Last Updated : 27 Dec, 2021 09:33 AM

 

Published : 27 Dec 2021 09:33 AM
Last Updated : 27 Dec 2021 09:33 AM

திருக்குறள் கதைகள் 91 - 92: ஹேராம்

திருக்குறள் கதை 91: ஹேராம்

1948 ஜனவரி மாதம் 30-ம் தேதி மாலை 4.30 மணி. ஆபா, காந்திக்கு உணவு தயார் செய்கிறாள். ஆட்டுப்பால், பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகள், ஆரஞ்சுப்பழம், பச்சடி, எலுமிச்சம்பழம், கொழுப்பு நீக்கிய வெண்ணெய், இஞ்சி கற்றாழைச் சாறு கலந்த பச்சடி அது.

புதுடெல்லி பிர்லா மாளிகையின் பின்புறம் காந்திஜி அறை. உள்ளே உதவிப் பிரதமர் வல்லபாய் படேலுடன் காந்தி பேசிக் கொண்டிருக்கிறார். படேலின் மகள் மணிபென் -அவர் காரியதரிசி உடன் இருக்கிறாள்.

படேலுக்கும், நேருவுக்கும் அடிக்கடி மனத்தாங்கல் ஏற்படும். காந்திதான் அடிக்கடி சமரசம் செய்து வைப்பார்.

காந்தி எதிலும் நேரத்தைக் கடைப்பிடிப்பவர். மனு, ஆபா இரண்டு பெண்களுமே தன்னுடைய பங்காளிகளின் பேத்திமார். இவர் தனது பேத்தி போல் அவர்கள் மீது பாசம் காட்டி இருவர் தோள் மீதும் கைபோட்டு நடப்பார்.

நடந்து செல்லும் அந்த 5 நிமிடத்தில் எல்லாவற்றையும் மறந்து அந்த பேத்திகளிடம் குறும்பாகப் பேசுவார். ஆபா கொடுத்த கேரட் ஜூஸைக் குடித்துவிட்டு, ‘இன்று எனக்கு நீ மாட்டுத்தீனி கொடுத்துவிட்டாய்!’ என்றார். அதுக்கு ஆபா, ‘கஸ்தூரிபா பாட்டி இதை குதிரைத் தீனி என்றுதானே சொல்லுவார்?’ என்று பதிலுக்குக் கிண்டலடித்தாள்.

காந்தியின் உடலுக்கு மரியாதை

மாளிகையின் இடதுபுறம் பெரிய தோட்டம். பிரார்த்தனை மைதானம் அங்குதான் இருக்கிறது. இன்று சுமார் 500 பேர் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகி விட்டதே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு பரபரப்பாக நடந்தார் காந்தி.

மேடை ஏற 5 படிகள். அந்த மேடைக்கு 15 அடி தூரத்தில் காந்தி வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் கூட்டத்தினர் எழுந்து நின்றனர். சிலர் முன்னோக்கி நகர்ந்தனர். சிலர் காந்திக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். சிலர் அவர் பாதம் தொட்டு வணங்கினர். பேத்திகள் தோளிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்து மேடையில் இருந்தவாறு கூட்டத்தை நோக்கி கும்பிட்டார் காந்தி.

அப்போது ஒருவன் முழங்கையால் இடித்துத் தள்ளி முன்னேறி காந்தியிடம் வந்தான். காந்தியின் பாதம் தொட்டு கும்பிடப் போகிறான் என்று அனைவரும் நினைத்தனர். காந்தியை நெருங்கி வந்தவனை மனு தடுத்தாள். அவளைத் தள்ளிவிட அவள் குப்புற தரையில் விழுந்தாள்.

காந்தி -கோட்சே

காந்திக்கு 2 அடி தூரத்தில் எதிரே வந்து நின்று முதல் குண்டு வெடித்தான். நின்ற இடத்தில் நடுங்கியது காந்தி உடம்பு. இரண்டாவது குண்டும் வெடித்தது. ரத்தம் பீறிட்டு காந்தியின் வேஷ்டியை நனைத்தது. முகம் வெளிறிப் போயிற்று. கூப்பிய கைகள் தொங்கின. ஹேராம் என்று முணுமுணுக்கும்போது 3-வது குண்டு. துவண்ட உடல் தரையில் சாய்ந்தது. மூக்குக் கண்ணாடி சிதறி ஓடியது. மிதியடிகள் கழன்று விட்டன.

கும்பிட்ட கைக்குள் துப்பாக்கி வைத்து சுட்டவன் கோட்சே.

‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் -ஒன்னார்

அழுத கண்ணீரும் அனைத்து’ என்கிறார் வள்ளுவர்.

--

குறள் கதை 92: வேதம்

இரண்டாவது உலக யுத்தம் உலகையே புரட்டிப் போட்டுவிட்டது. இந்த யுத்தத்துக்குக் காரணமான முதல் தலைவன் ஹிட்லர். அவனோடு இத்தாலி நாட்டுத் தலைவர் முசோலினி, ஜப்பான் தலைவர் ஹிரோ ஹிட்டோ.

ஜெர்மனி -இத்தாலி, ஜப்பான்- அச்சு நாடுகள்.

ஃபிராங்களின் ரூஸ்வெல்ட் தலைமையில் அமெரிக்கா, வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் இங்கிலாந்து, ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ரஷ்யா - இவை நேச நாடுகள்.

இந்தக் கொடூரமான இரண்டாம் உலக யுத்தத்தில் அழிந்து போன மனிதர்கள் எண்ணிக்கை 7 கோடி முதல் 8.5 கோடி வரை என்று சொல்கிறார்கள்.

இந்த யுத்த முடிவில் ஹிட்லர் தனிமையில் தற்கொலை செய்து கொண்டானாம். தப்பித்தவறி இந்தப் போரில் அவன் வென்றிருந்தால் சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின் கண்களில் விரல்விட்டு ஆட்டியிருப்பான். கடைசி வரை காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி என்றே சர்ச்சில் கிண்டலடித்தார்.

அந்த சர்ச்சிலுக்கு 1890-களில் சென்னையிலிருந்து கடிதம் எழுதி YOU SPEAK BAD ENGLISH என்று குற்றம் சாட்டினார் ஒருவர்.

‘WHO ARE YOU? WHERE ARE YOU? என்று சர்ச்சில் விசாரிக்க, நான் தமிழ்நாட்டில் சென்னை திருவல்லிக்கேணி, இந்து ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர்!’ என்றார்.

உடனே அவரை இங்கிலாந்து வரச்சொன்னார் சர்ச்சில். இவர் போனார்.

சாஸ்திரி

ஒரு மேடையில் இலக்கணப் பிழையுடன் சர்ச்சில் பேசியதை இவர் விளக்கிச் சொல்ல மிரண்டு போய்விட்டார் சர்ச்சில். என் தாய்மொழியை அயல்நாட்டான் கற்றுக் கொண்டு என் பேச்சிலேயே தவறு கண்டுபிடிக்கிறாயா? நீ யார் -உன் பூர்வீகம் எது?’ என்று திரும்பக் கேட்டார்.

‘கும்பகோணம் அருகே வலங்கைமான் கிராமத்தில் கோயிலில் பூஜை செய்யும் சாஸ்திரியின் மகன். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு, சேலத்தில் முனிசிபல் கல்லூரியில் பேராசிரியராக கொஞ்ச நாள். இப்போது திருவல்லிக்கேணி, இந்து ஹைஸ்கூலில் ஹெட்மாஸ்டர். என் பெயர் சீனிவாச சாஸ்திரி!’ என்றார்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார் சர்ச்சில்.

ரென் அண்டு மார்ட்டின் ஆங்கில இலக்கணப் புத்தகம் போல ஜே.சி.நெஸ்பீல்டு ஆங்கில இலக்கண நூல் தயாரித்திருக்கிறோம். ஒரு முறை சரிபார்த்துச் சொல்லுங்கள் என்று கொடுத்தனர். இரவெல்லாம் படித்து 4, 5 அத்தியாயங்கள் தரக்குறைவாக உள்ளன’ என்று மாற்றி எழுதிக் கொடுத்தாராம்.

ஆங்கில மொழிப் புலமையில் -ஆங்கிலப் பேச்சாற்றலில் இந்த நூற்றாண்டில் உலகில் சிறந்த பேச்சாளர்கள் 5 பேரில் நீங்களும் ஒருவர் என்று மரியாதை செய்து -தாமஸ் ஸ்மார்ட் என்பவர் பிரிட்டீஷ் அரசின் சில்வர்டங் அரேட்டர் -வெள்ளி நாக்குப் பேச்சாளர் என்று பட்டம் கொடுத்து அனுப்பினார்.

இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பல பதவிகள் வகித்தவர். தென்னாப்பிரிக்காவில் பிரிட்டீஷ் அரசின் இந்தியப் பிரதிநிதியாக கொஞ்ச நாள் இருந்தார்.

சர்ச்சில்

கோபாலகிருஷ்ண கோகலேவின் அரசியல் பார்வையில் ஈர்க்கப்பட்டு அவரது சீடர் என்று சொல்லிக்கொண்டார். மகாத்மா காந்தியை விட 10 நாள் முன்னதாகப் பிறந்தார். காந்திஜி அக்டோபர் 2-ல் பிறந்தார். இவர் செப்டம்பர் 22-ல் பிறந்தார். அதனால் அண்ணா என்றே சாஸ்திரியை காந்தி அழைப்பார்.

‘பார் -அட் லா’ படித்த உனது ஆங்கிலம் தரமாக இல்லை என்று சாஸ்திரி சொல்ல, தன் வரலாற்று நூலான சத்தியசோதனை- ஆங்கிலப் புத்தகத்தைத் திருத்தித் தரக் கேட்டுக் கொண்டார் காந்தி.

அதேபோல அரசியல் செய்திகளைச் சொல்ல ‘ஹரிஜன்’ என்று ஒரு பத்திரிகை நடத்தினார் காந்தி. மாதாமாதம் அந்த புரூஃபை சாஸ்திரிக்கு 2- வாரம் முன்னரே அனுப்பி திருத்தி அவர் அனுப்பிய பின்னரே அச்சுக்குக் கொடுத்தார் காந்தி.

ஒரு தரம் காந்தியைப் பார்க்க வேண்டும் என்று சாஸ்திரி கேட்க, குஜராத்தில் ஆனந்த் நகரில் நடக்கவிருந்த ஒரு மாநாட்டுக்கு வரச்சொன்னார் காந்தி. சாஸ்திரி போனார்.

கட்டுக்கடங்காத கூட்டம். ஐயாயிரமோ, பத்தாயிரமோ அத்தனையும் ஏழை விவசாயிகள். பாட்டாளிகள். அவர் மீது அந்த மக்கள் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து சொல்லாமல் கொள்ளாமல் சென்னை திரும்பி விட்டார் சாஸ்திரி.

‘இனிமேல் ஹரிஜன் புரூஃப் எனக்கு அனுப்ப வேண்டாம். நீங்களே திருத்திக் கொள்ளுங்கள்!’ என்று காந்திக்கு கடிதம் எழுதினார்.

‘அண்ணா! நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா?’ என்று காந்தி கேட்டார். இல்லை. என்னிடம் கேவலம் இங்கிலீஷ் மட்டும்தான் உள்ளது. உங்களிடம் ஆன்மா உள்ளது. ஆன்மா சொல்வதுதான் வேதம். நீங்கள் சொல்வது சத்தியம். தொடருங்கள்!’ என்றார்.

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரதமரே மெச்சும் அளவுக்கு சாஸ்திரியின் ஆங்கிலப் புலமை இருந்துள்ளது. கற்றறிந்த பெரியோர் முன்பு தன் ஆற்றலைத் துணிந்து வெளிப்படுத்தும் ஒருவனே கற்றவர்களிலெல்லாம் சிறந்தவன் என்கிறார் வள்ளுவர்:

‘கற்றாருள் கற்றார் எனப்படுவர் -கற்றார் முன்

கற்ற செலச் சொல்லுவார்’

---

கதை பேசுவோம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x