Last Updated : 04 Mar, 2016 05:04 PM

 

Published : 04 Mar 2016 05:04 PM
Last Updated : 04 Mar 2016 05:04 PM

யூடியூப் பகிர்வு: கணினி கால வாழ்க்கை விளைவை சொல்லும் முற்பகல் செய்யாவிடில்

இன்றைய கம்ப்யூட்டர் யுக மனிதனின் வாழ்க்கை எப்படிப்பட்டது. அவன் எப்படிப்பட்டவனாக மாறுகிறான் என்பதையெல்லாம் தெளிவாக நிர்ணயம் செய்ய முயன்றுள்ளது 'முற்பகல் செய்யாவிடில்' எனும் குறும்படம்.

இக்குறும்படத்தில் வரும் 'சித்து' ஒரு உதாரணம்தான். வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிப்பதைவிட உள்ளூரில் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருக்கலாம் என்கிற சித்து வேறு. தங்களையும் குழந்தையையும் ஆசையாகப் பார்க்கவரும் அப்பா அம்மாவை சென்னைக்கு வரவேண்டாம் என்று சொல்வதற்காக பெங்களூருக்கு ஆபீஸ்வேலைப் பயணம், குழந்தைக்கு எக்ஸாம் என்றெல்லாம் பொய்களை அடுக்கும் சித்து வேறு... ஆனால் இவர்கள் எல்லாம் நம்மிடமே உள்ளவர்கள்தான்.

உடன் பணியாற்றும் ஊழியருக்கு உதவ மறுப்பவனும் வழியில் காணும் ஒரு சமூக அவலத்தைக் கண்டு கோழையாய் பயந்து ஓடுபவனும்கூட இன்று நாம் காணும் இன்னொருவகையான மனிதனைத்தான்.. அவ்வகையில் மனிதத்தை காணாமல் அடித்துவிட்டது இந்தக் கம்ப்யூட்டர் வாழ்க்கை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

இன்றுள்ள அவசர உலகத்து மனிதனின் சுயநலம்கூட ''இப்போ ஜனங்க அப்படித்தான்'' என்று ஒருவகையில் நியாயப்படுத்தப்படுகிறது. கடைசியில் அவனது சுயநலத்தினால் அவனுக்கேக் கூட ஆபத்துதான் அது எவ்வளவு தவறானது என்பதையும் எக்குத்தப்பான இறுதிக்காட்சியின் திருப்பம் சொல்கிறது. இருவேறு முடிவுகளைக் கொண்டு பிரித்துக் காட்டியுள்ள இயக்குநர் கணேஷ் கார்த்திக்கின் திரைக்கதை உத்தி மிகமிகப் புதுமையானது.

ஜாவீத் கச்சிதமான ஒளிப்பதிவை, கணேஷ்ராம் மற்றும் மாதவ் ஆகியோரின் இனிய இசையை, ஒரு திரைப்படத்திற்குண்டான ராஹுலின் எடிட்டிங்கையும் மாக்ஸ்வெல், சஷி, அக்ஷயா, நந்து, ஐஸ்வர்யா, தியா, ஆசைத்தம்பி உள்ளிட்டோரின் ஈடுபாடுமிக்க நடிப்பைக் காண 'முற்பகல் செய்யாவிடில்' குறும்படத்தை நீங்களும் பாருங்களேன். மார்ச் 9 அன்று நடைபெறவுள்ள ராடன் குறும்பட விழாப் போட்டியில் பங்கேற்பதற்காக இறுதிச்சுற்றுக்கு தேர்வான காரணம் புரியும்.

இணைப்பு > >யூடியூபில் வீடியோவைக் காண - 'முற்பகல் செய்யாவிடில்'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x