Last Updated : 20 Dec, 2021 10:17 AM

 

Published : 20 Dec 2021 10:17 AM
Last Updated : 20 Dec 2021 10:17 AM

திருக்குறள் கதைகள்  87- 88: பெரியோர்

குறள் கதை 87 பெரியோர்

கலங்கல் பள்ளியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் கல்யாணசாமி நாயுடு. கல் மண்டபத்தை தயார் செய்து அதில் தனி ஒருவராக சுமார் 50 பிள்ளைகளுக்கு ஒண்ணாம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை பாடம் நடத்துவார்.

கால் அரைக்கால் காசுக்கு -நாலரைக்கால் கத்திரிக்காய், ஒரு காசுக்கு எத்தனை கத்திரிக்காய் என்று கேள்வி கேட்டு 5 எண்ணுவதற்குள் விடை எழுதி சிலேட்டை தரையில் குப்புற வைத்து விட வேண்டும். கொஞ்சம் தாமதமானாலும் அவர் கையிலுள்ள கொண்டைப் பிரம்பு தலையை பதம் பார்த்து விடும்.

கணக்குப் பாடத்தில் இண்டர்மீடியட் படித்த போது மாநிலத்தில் இரண்டாவது ரேங்கில் தேறியவர் என்று சிறுவயதில் அவரைப்பற்றி சொல்லுவார்கள்.

4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சூலூர் பள்ளியில் டபுள் பிரமோஷன் வாங்கி 6-வது படிக்கப் போனேன். வயது குறைவானதால் ‘ஒழுங்காக 5-வது வகுப்பை படித்து விட்டு வா!’ என்று துரத்தி விட்டார்கள்.

சூலூர் உயர்நிலைப் படிப்பு முடிந்து ஓவியக்கலை 6 ஆண்டுகள் படித்து தேறி, திரையுலகில் 15 ஆண்டுகாலம் நடித்து விட்டு 1980-களில் ஒரு நாள் ஆசிரியரைப் பார்க்கப்போனேன். சற்றேறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின் அவரைப் பார்த்தேன்.

‘தண்டபாணி (இது என் தந்தை வைத்த பெயர்) மழை மாரியெல்லாம் ஏமாத்திடுச்சு. காடு கரையில எதுவும் வெளையறதில்லை. மாடு கன்னுக்கு தீவனம் போட முடியாம அதுகளை வித்தாச்சு. விவசாயம் படுத்துப் போச்சு. தூக்குப் போட்டு செத்துப் போறதைத்தவிர வழியில்லை. இதுதான் இப்ப எங்க நிலமை. நீ என்ன பண்றே- அந்த காட்டுக்குள்ளே கொஞ்ச தூரம் நடந்துட்டுவா!’ என்றார். புரியவில்லை. ஒரு கணம் யோசித்தேன். ‘ஐயா நான் ராமபிரானும் இல்லே. அந்த பூமி அகலிகையும் இல்லே. என் பாதம் பட்டு விமோசனம் அடையறதுக்கு!’ என்றேன்.

கல்யாணசாமி, குடும்பத்தாருடன்

‘‘ராமாயணம், பாரதம் கதையெல்லாம் நான்தாண்டா உனக்கு சொல்லிக் குடுத்தேன். தீட்டுன கல்லுலயே பதம் பார்க்கறியோ? வாழ்க்கைங்கறதே நம்பிக்கையை அடிப்படையாக வச்சுத்தாம்பா. பேசாம கொஞ்ச தூரம் நடந்திட்டு வா!’ என்றார்.

எதிர்த்துப் பேச மனமில்லாமல் தொண்டை அடைக்க நூறடி தூரம் நடந்து திரும்பி கையெடுத்துக் கும்பிட்டு விடைபெற்றேன்.

ஆறுமாதம் கழித்து மீண்டும் கிராமம் சென்றபோது வழியில் உள்ள அவரது தோட்டத்தில் அவரைச் சந்தித்தேன்.

‘தண்டபாணி! உன் பாதம் பட்ட நேரம். பிளாட் போட்டு 4 ஏக்கராவை வித்துட்டேன். ராமமூர்த்திக்கு ரூ. 2லட்சம் பாப்பாயிக்கு (மகள்) ரூ 2 லட்சம் நான் ரூ. 2 லட்சம் பேங்கில டெபாசிட் பண்ணீட்டேன். இப்ப நல்லா இருக்கேம்பா!’’ என்றார்.

‘ஹோம் ஒர்க் ஏன் செய்யவில்லை?’ என்று கேட்டதற்கு சென்னை அர்மீனியன் தெருவிலுள்ள ஒரு பள்ளி மாணவன் ஆசிரியரைக் கத்தியால் குத்தி விட்டான்.

எங்கோ ஒரு குக்கிராமத்தில் எப்போதோ மாணவனாக இருந்த ஒருவன் மீது கல்யாணசாமி நாயுடு வைத்திருந்த நம்பிக்கை சிலிர்க்கச் செய்தது. இன்றைக்கு என் போன்றோருக்கு சமுதாயத்தில் ஏதாவது மரியாதை இருந்தால் அது அன்றைய ஆசிரியர்கள் போட்ட பிச்சையாகத்தான் நான் கருதுகிறேன்.

அறிவிற்சிறந்த பெரியோர்கள் வழிகாட்டும் வாய்ப்பு நமக்கு அமைந்தால் அதை விட வலிமை மிக்க துணை எதுவுமில்லை என்கிறார் வள்ளுவர்:

‘தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை!’

----

குறள் கதை 88: ஆட்சி

1954-ல் ராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததும், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூடியது.

இன்று கலைவாணர் அரங்கம் என்று அழைக்கப்படும் கட்டடமே அன்று தமிழக சட்டமன்றக் கட்டடமாக இருந்தது.

இங்கு நடந்த சட்டமன்றத் தலைவர் தேர்தலைப் பார்வையிட காங்கிரஸ் மேலிடம் சார்பாக இந்திரா காந்தி வந்திருந்தார்.

காமராஜர் பெயரை டாக்டர் பி. வரதராஜூலு நாயுடு முன்மொழிந்தார். தியாகி என். அண்ணாமலை பிள்ளை வழிமொழிந்தார்.

அதே முதல்வர் பதவிக்கு ராஜாஜியின் அனுதாபி சி.சுப்ரமணியம் எதிர்த்து நின்றார். முன்மொழிந்தவர் எம். பக்தவத்சலம்.

சி.எஸ் -காமராஜ்

வாக்கெடுப்பு நடைபெற்றது. 134 உறுப்பினர்கள் வாக்களித்தனர். காமராஜருக்கு 93 வாக்குகளும், சி.சுப்ரமணியத்திற்கு 41 வாக்குகளும் கிடைத்தன.

பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றிய அனுபவம் பெற்ற காமராஜரை விட தகுதியானவர் வேறு எவரும் இல்லாததால் காமராஜரே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகக்குறைந்த கல்வி அறிவு கொண்ட இவர் எப்படி முதல் மந்திரி பதவியை திறம்பட நிர்வகிக்கப் போகிறார் என்று சிலர் பேசினர்.

ஆனால் மாநில முதல்வர் பதவி ஏற்றவுடனே மந்திரிசபையில் மந்திரிகளின் எண்ணிக்கையை எட்டாகக் குறைத்தார்.

காமராஜ் -வெங்கட்ராமன் -பக்தவத்சலம்

தன்னை எதிர்த்து முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட சி. சுப்ரமணியம், பக்தவத்சலம் ஆகியோரை அழைத்து படித்தவர்கள்தான் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி பதவியளித்தார்.

ராஜாஜி அமைச்சரவையில் இருந்த எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கர், ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ஏ.பி.ஷெட்டி ஆகியோரையும் இணைத்துக் கொண்டார்.

புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்கள் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி பி.பரமேஸ்வரன் இருவர் மட்டுமே.

காமராஜர் மதி நுட்பத்துக்கு பொருந்தும் திருக்குறள்:

‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல்’

--

கதை பேசுவோம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x