Last Updated : 10 Dec, 2021 09:54 AM

4  

Published : 10 Dec 2021 09:54 AM
Last Updated : 10 Dec 2021 09:54 AM

திருக்குறள் கதைகள் 81 - 82: வதை

திருக்குறள் கதை 81: வதை

கிராமத்தில் வாழ்ந்த 16 வயது வரை நான் சைவ உணவுதான் சாப்பிட்டேன். சென்னை வந்த பிறகு, ஒரு மாறுதலுக்காக மாதம் ஒரு நாள் மணியார்டர் ஊரிலிருந்து வந்த அன்று மட்டும் ஒருவேளை அசைவம் சாப்பிட்டேன்.

ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘இன்று மாலை வரை நாம் உயிரோடு இருக்க ஒரு அப்பாவி ஜீவனைக் கொல்ல வேண்டுமா?’ என்று நினைத்தேன். அசைவு உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.

1988 ஜனவரி 1-ம் தேதி இந்த முடிவெடுத்தேன். ‘மனித ஜாதி’ படத்திற்காக கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து குண்டேரிப் பள்ளம் படப்பிடிப்புக்கு அதிகாலை 5 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். நடுரோட்டில் கண் மூடி முழிப்பதற்குள் ஒரு ஆட்டின் தலையை வெட்டி ஒருவர் கையில் எடுத்துக் கொண்டார். இன்னொருவர் கழுத்து வழியே பீறிட்டு வந்த ரத்தத்தைப் பாத்திரத்தில் பிடித்தார். அந்த அதிர்ச்சியில் நாம் எடுத்த முடிவு சரிதான் என்று தோன்றியது.

1991-ல் ‘தசரதன்’ படப்பிடிப்புக்கு தென்காசி, குற்றாலம் பகுதிக்குச் சென்றேன். தென்காசி தவமணி ஓட்டலில் 3-வது மாடியில் பின்னால் உள்ள அறை எடுத்துத் தங்கியிருந்தேன்.

அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கோழிகள் கூச்சலிடும் சத்தம் கேட்கும். அடுத்த பத்து நிமிடத்தில் இறகுகள் படபடவென்று அடிக்கும் சத்தம் கொஞ்ச நேரம் கேட்கும்.

ஒருநாள் என்ன நடக்கிறது என்று கதவைத் திறந்து பார்த்தேன். பிரியாணி செய்யக் கூண்டிலிருந்து கொத்தாக பத்து இருபது கோழிகளைப் பிடித்துக் கழுத்தை அறுத்து விட்டதும், உயிர் போக அதன் சிறகுகள் அடிக்கும் கொடுமையைப் பார்த்து வாழ்நாள் முழுவதும் இனி அசைவம் வேண்டாம் என்று முடிவு செய்தேன். அசைவப் பிரியர்கள் மன்னிப்பார்களாக...

‘கொல்லான் புலால் மறுத்தானை -கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்’ என்கிறார் வள்ளுவர்.

--

குறள் கதை 82: செல்வம்

சாண்டோ சின்னப்பா தேவர் ‘ஹாத்தி மேரா சாத்தி’ இந்தியில் எடுத்த படம் சூப்பர் ஹிட் ஆகி விட்டது. இந்திப் படவுலகினர் டெல்லியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

விமான நிலையத்தில் இந்தியின் பிரபல படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ‘ஹாத்தி மேரா சாத்தி’யின் ஹீரோ, ஹீரோயின் இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என்று பெருங்கூட்டம் காத்திருந்தது.

சென்னையிலிருந்து டெல்லி வந்த விமானத்திலிருந்து 6 அடி தாண்டிய செம்பட்டை முடி, நீலக்கண்கள், கம்பீரத் தோற்றமுள்ள ஆண்கள், கவுன்போட்டு ஹைஹீல்ஸ் ஷூ போட்டு ‘டக் டக்’ என்று குதிரை போல நடக்கும் அவர்களின் மனைவிமார்கள், ஆப்பிரிக்க கருப்பு இனத்தைச் சேர்ந்த ‘பாடி பில்டர்ஸ்’, அவர்கள் குடும்பத்துப் பெண்கள், விபூதி அணிந்தவர்கள், நாமம் போட்ட பெரியவர்கள், மடிசார் மாமிகள், ஜீன்ஸில் கல்லூரி மாணவர் மாணவிகள் என்று 200-க்கும் மேற்பட்ட பயணிகள்.

இவர்களின் நடுவே கன்னங்கரேலென்று கருந்தேக்கில் செதுக்கிய ‘பாடி பில்டர்’ வெற்றுடம்பில் விபூதி பூசி மேலே ஒரு சில்க் துண்டைப் போர்த்திக் கொண்டு இடுப்பிலுள்ள சில்க் வேஷ்டியை தொடைக்கு மேலாக மடித்துக் கட்டிக் கொண்டு ராஜநடை போட்டு நடந்து வருகிறார்.

தேவர் அண்ணா

அவர்தான் சாண்டோ சின்னப்பா தேவர் அண்ணன் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

விமான நிலையத்திற்குள் அவர் நுழைந்ததும் தேவர் கீ ஜிந்தாபாத் என்ற ஆரவார கோஷத்துடன் ஸ்டண்ட் கலைஞர்கள் நான்கு பேர் அவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியே நின்றிருந்த காருக்கு அழைத்துப் போனார்கள்.

ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் 'ஹாத்தி மேரா சாத்தி' மகத்தான வெற்றி பெற்றதற்கு தேவர் அண்ணாவுக்குப் பாராட்டு விழா.

தேவர் அண்ணா பள்ளிக்குப் போகாதவர். எழுத்துக்கூட்டிப் படிப்பார். எழுத வராது. இந்தி சுத்தமாகத் தெரியாது. ஆங்கிலத்தில் பத்து வார்த்தைகள் மட்டுமே தெரியும். அவற்றை முன் பின்னாக மாற்றிப்போட்டு, வட இந்திய விநியோகஸ்தர்களிடம் தைரியமாக பிஸினஸ் பேசுவார்.

மேடையில் சில பேர் ஆங்கிலத்தில் பாராட்டிப் பேசினர்.

‘BLACK MAN FROM SOUTH INDIA CREATED A HISTORY IN HINDI FIELD, சிறுத்தைகளையும், சிங்கத்தையும் வைத்து டார்ஜான் பாணியில் இந்தியில் அவர் எடுத்துள்ளது எங்களுக்கெல்லாம் புது அனுபவம்!’ என்று பேசினர்.

சில பேர் உணர்ச்சிவசப்பட்டு இந்தியில் பாராட்டு மழை பொழிந்தார்கள். கடைசியில் ஏற்புரை. THANKS GIVING SPEECH...

அரங்கத்தில் கூடியிருந்த 500 பேருக்கும் வியப்பு. இந்த மனிதர் என்ன பேசப்போகிறார். தமிழிலா, இந்தியிலா, இங்கிலீஷிலா?

தமிழில் பேசினால் நமக்குப் புரியாது. இந்தி அவருக்குப் பேச வராது. ஆங்கிலம் படித்த மனிதர் மாதிரி தெரியவில்லை. அரங்கமே மூச்சடக்கி அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.

தேவர் அண்ணாவுடன்

தேவர் அண்ணா எழுந்தார். வேட்டியை மடித்துக் கட்டினார். மைக் அருகே வந்து குதிரை போல் ஒருமுறை கனைத்தார். அதற்கே கைதட்டல் பலமாக இருந்தது.

‘‘லேடீஸ் அண்ட் ஜென்டில்மேனு! ஐ கோ நோ ஸ்கூலு. ஒர்க் ஹார்டு. லார்டு முருகா கிவ் மணி. ஐ டேக் நமஸ்தே!’’ என்றார். கைதட்டல் அடங்க 5 நிமிடமாயிற்று. திருக்குறள் போலச் சொல்ல வேண்டியதை ஆழமாக சுருக்கமாக இரண்டு வரியில் பேசி அனைவரையும் கவர்ந்தார்.

தேவர் அண்ணா தீவிர முருக பக்தர். படங்களுக்குப் பூஜை போடும்போது, தீபாராதனை காட்டும்போது ‘முருகா, முருகா’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு தாரை, தாரையாக கண்ணீர் விடுவார்.

ஊட்டியில் படப்பிடிப்புக்கு வெயில் வராவிட்டால் கெட்ட வார்த்தையில் முருகனைத் திட்டுவார். நிந்தா ஸ்துதி செய்வார். முருகன் போட்ட பிச்சை இந்த வாழ்வு என்று நினைத்தவர் முருகனுக்கு உகந்த கிருத்திகை நாளில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

இவருக்குப் பொருந்தும் வள்ளுவர் குறள்:

‘அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் -பொருட் செல்வம்

பூரியார் கண்ணும் உள!’

----

கதை பேசுவோம்.
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x