Last Updated : 17 Sep, 2021 09:05 AM

 

Published : 17 Sep 2021 09:05 AM
Last Updated : 17 Sep 2021 09:05 AM

திருக்குறள் கதைகள் 32 - 33: சொலல் வல்லன்

1927-ல் பிறந்து 54 வருடங்களே வாழ்ந்து கவிதை வழியில், பாரதிக்குப் பிறகு அதிக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன். ஆன்மீகம், தத்துவம், திரைப்படப் பாடல், கவிதை, படத்தயாரிப்பு, நடிப்பு, திரைக்கதை-வசனம் இப்படி அவர் கால்பதிக்காத எழுத்துத் துறையே இல்லை என்று சொல்லலாம்.

சினிமாவுக்கு 5000-க்கும் மேலான பாடல்கள், 6000-க்கும் மேல் கவிதைகள், 232-க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியவர்.

சேரமான் காதலி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1980-ல் குழந்தைக்காக படப்பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

பிறந்தபோது இவர் பெயர் முத்தையா. சிகப்பி ஆச்சிக்குத் தத்து கொடுக்கப்பட்டவர். அவர் மூலம் சிறுகூடல்பட்டி, அமராவதிபுதூரில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

கண்ணதாசன் -சிவாஜி

தொடக்கத்தில் அண்ணாவின் அரவணைப்புடன் பகுத்தறிவு இயக்கத்தில் இருந்தார். ஆண்டாள், ‘திருப்பாவை’ -படித்து அந்தத்தமிழில் மயங்கி பக்தி இயக்கத்திற்குள் வந்து விட்டார்.

அர்த்தமுள்ள இந்து மதம்- 10 பகுதிகள் என்றைக்கும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.

பாபநாசம் சிவன், விந்தன், மருதகாசி, கவி கா.மு.ஷெரீப், தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோர் இவரின் முன்னோடிகள். ஆனால் அவர்களையெல்லாம் தன் கவிபுனையும் ஆற்றலால் விரைவில் தாண்டி- எங்கும், எதிலும் கண்ணதாசன் என்ற அளவுக்கு மேலே வந்து விட்டார்.

இவரது குடும்பத்தில் 10 குழந்தைகள். இவர் எட்டாவது குழந்தை. அதனால் 8-வது குழந்தையாக பிறந்த கண்ணனை நினைவுபடுத்த கண்ணதாசன் என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

தன் பெற்றோரை மிஞ்சும் வகையில் 3 மனைவிகளுக்கு 15 குழந்தைகள் பிறக்கக் காரணமானார்.

இல்லறஜோதி, மதுரை வீரன், மகாதேவி, மாலையிட்ட மங்கை, நாடோடி மன்னன், சிவகெங்கை சீமை போன்ற படங்களில் இவர் வசனங்கள் பெரிதும் பேசப்பட்டன.

ரத்ததிலகம் -நாட்டைக்காக்கும் போர் வீரனைப் பெருமைப்படுத்தும் படம். இவர் தயாரித்தது.

‘கம்பரசம்’ என்ற தலைப்பில் கம்பனை கடுமையாக அண்ணா விமர்சனம் செய்து ஒரு புத்தகம் எழுதினார். ஆனால் கண்ணதாசன் தன் ஆதர்ஸ கதாநாயகனாக கம்பனை வரித்துக் கொண்டு மேடைகளிலும், திரைப்பட பாடல்களிலும் கம்பனின் அளப்பறிய ஆற்றலைப் பேசியும் எழுதியும் கொண்டாடினார்.

எஸ்.எஸ்.ஆர்-எம்.ஜி.ஆர் கண்ணதாசனுடன்

அவர் பக்திக்கு உதாரணமாக கந்தன் கருணையில் பார்வதி முருகனைப் பாடும் பாடலை எடுத்துக் கொள்ளலாம்.

‘‘சொல்லச் சொல்ல இனிக்குதடா- முருகா

உள்ளமெலாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா...

முருகனென்றால் அழகனென்று

தமிழ்மொழி கூறும்

அழகனெந்தன் குமரனென்று

மனமொழி கூறும்

உயிரினங்கள் ஒன்றை யொன்று

வாழ்த்திடும்போது- அதன்

உள்ளிருந்து வாழ்த்துவது

உன்னருளன்றோ- கந்தா

உன்னரு ளன்றோ...’

காதலைப் பற்றி அவர் எழுதிய பாடல்களில், ‘மாலையிட்ட மங்கை’- பாடல்..

‘செந்தமிழ்த் தேன் மொழியாள்- நிலாவென

சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கிளி இதழில் பழரசம் தருவாள்

பருகிடத் தலை குனிவாள்’ - என்பான்

பாசத்தைப் பற்றி சொல்லச் சொன்னால் ‘பாசமலர்’ -படத்தில் வரும்

‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே- வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே- வளர்

பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே!’ என்று எழுதுவான்.

அடக்கமுடன் வாழும் குடும்பத் தலைவன்

அடக்கமின்றி வாழும் துறவியை விட மேலானவன்

பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை

திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை

பேராசையை மிஞ்சிய தீமையில்லை

கருணையை மிஞ்சிய அறமில்லை

மன்னித்தலை விட பெரிய ஆயுதம்

உலகில் எதுவும் இல்லை- என்று தத்துவம் சொல்வான்.

இவனைப் போன்றோரை புகழ்ந்து சொல்ல வள்ளுவன் எழுதிய குறள்:

‘சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான்- அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது!’

------

குறள் கதை 33- பிறன்கேடு

காவிரி ஆற்றங்கரை, தாமிரபரணி ஆற்றுப்பாசனம், ஆழியாறு அணை நீர்ப்பாசனம் உள்ள இடங்களில்தான் நெல்வயல், தென்னந்தோப்பு, கரும்பு விவசாயம் அதிகம் இருக்கும்.

வானம் பார்த்த பூமிகள், ஆடிமாதம், ஐப்பசி மாதம் மட்டுமே மழை பெய்யும் பூமிகள் எங்கள் கிராமத்தை சுற்றிலும் நிறைய உள்ளன. புஞ்சை நிலம் என்று அதைச் சொல்வார்கள்.

கம்பு, சோளம், தினை, வரகு, சாமை, கேள்வரகு போன்ற உணவு தானியங்கள், பாசிப்பயிறு, தட்டப்பயிறு; நரிப்பயிறு, கொள்ளு போன்றவை அந்த நிலங்களில் குறைந்த தண்ணீர் வசதியில் விளைபவை.

சோளத்தில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், மஞ்சள்சோளம் என்று மூன்று வகை உண்டு. விதைச்சோளம் என்று ஒரு வகை உண்டு. மழை பெய்ததும் விதைச் சோளத்தை 4 லிட்டர் அளவு பிடிக்கும் ஒரு கூடையில் போட்டு இடது கையால் அந்த கூடையை தூக்கிப்பிடித்து ஒரு பிடி சோளத்தை வலது கையால் அள்ளி, வேகமாக நடந்தவாறே, அந்த பிடிசோளத்தை கூடையின் வெளிப்பக்கம் வீசி அடித்தால் அது சிதறி பூமியில் பரவலாக விழும்.

அதன் பிறகு உழவு ஓட்டி விட்டு விடுவார்கள். சோளப்பயிர் இரண்டடி உயரம் வரும்போது அந்தப் பயிரின் குருத்துப் பகுதியில் கசப்பு சுவை இருக்கும். அதை மாடு, கன்றுகள் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து.

‘சொக்கு’ பிடிக்கும் பயிர் என்று அந்தப் பயிரைச் சொல்வார்கள். மாட்டுக்காரச் சிறுவன் தெருவிலே கில்லி தாண்டு விளையாடிக் கொண்டிருந்த மும்முரத்தில், மாடுகள் அந்த ‘சொக்கு’ பிடிக்கும் சோளப்பயிரை மேயப்போய் விட்டதை கவனிக்கவில்லை.

காட்டுக்குள் 4 மாடுகளை பார்த்ததும், தோட்டத்துக்காரர் ஓடி வந்தார் மாடுகளை விரட்டி விட்டு, மாட்டுக்காரச்சிறுவனைப் போய் காதை பிடித்து இழுத்து வந்து -சோளக்காட்டில் ‘மாடு புகுந்து பயிரைக் கடிப்பது கூட தெரியாமல் உனக்கு அப்படி என்ன விளையாட்டு?’ என்று சாட்டையால் நாலு வாங்கு வாங்கி விட்டார். கற்றாழை மஞ்சியில் செய்த சாட்டைக்கயிறு தொடையில் ரத்தக்கோடுகளைப் போட்டு விட்டது.

மஞ்சிக் கயிறு அடி

சிறுவன் அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடி பெற்றோரிடம் முதலாளி அடித்து ரத்தம் வருவதைக் காட்டினான்.

பெற்ற குழந்தை கத்துவதை எந்த பெற்றோரால் தாங்க முடியும்? பக்கத்துக் குடிசைகளிலிருந்த பெரியப்பன், சித்தப்பன்மார்களைக் கூட்டிக் கொண்டு முதலாளியைப் பார்க்கப் போனார்கள்.

‘‘சாமி! காட்டுல மாட்டை உட்டது தப்புத்தாங்க. அதுக்காக மாட்டை அடிக்கற மாதிரி இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிருக்கீங்களே நியாயமா?’’ என்று பெத்தவன் கேட்டான்.

காடுகரையில் கூலி வேலை செய்து வயிறு கழுவும் அவர்கள் நேருக்குநேர் முதலாளியைப் முகம் பார்த்துப் பேசியது அவருக்கு எரிச்சலை ஊட்டியது.

‘‘எங்கிட்டயே நேர்ல வந்து கேக்கற அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்திருச்சா? போங்க கவனிச்சுக்கறேன்!’ என்று அனுப்பி விட்டார்.

அன்று நள்ளிரவில் 10 குடிசைகள் தீ பற்றி எரிந்தன.

சாவு, தீக்காயம் எதுவானாலும் போலீஸ் வரை போக முடியாது. ஊர்க்கட்டுப்பாடு அப்படி.

நான்காவது மாதம் முதலாளி குடும்பத்தோடு கொடைக்கானல் போய் 10 நாள் தங்கி விட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். குண்டூசி வளைவு (HAIR PIN BEND) பாதைகள் மலைகளுக்கு இடையே ஆங்காங்கு இருக்கும்.

கொண்டை ஊசி வளைவு

கீழே இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு மேல் நோக்கி வரும் லாரிக்கு வழி விட காரை சாலை ஓரமாக ஒதுக்கினான் டிரைவர். பிரேக் பிடிக்காமல் அப்படியே உருண்டு 4 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாதாளத்தை நோக்கி கார் பாய்ந்தது. கூண்டோடு கைலாசம் போய் விட்டார் முதலாளி.

அடுத்தவனுக்கு மறந்தும் கூட துரோகம் செய்ய நினைக்காதே; அப்படி நினைத்தால் தர்மம் உன்னைத் தண்டிக்கும் என்கிறார் வள்ளுவர்:

‘மறந்தும் பிறன்கேடு சூழற்க- சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு’

---

கதை பேசுவோம்.
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x