Last Updated : 03 Sep, 2021 09:55 AM

 

Published : 03 Sep 2021 09:55 AM
Last Updated : 03 Sep 2021 09:55 AM

திருக்குறள் கதைகள் 24 - 25: பெரிசுகள்

ராஜா உத்தரவு போட்டார். ‘‘80 வயது தாண்டின பெரிசுகள் எல்லாம் பூமிக்கு பாரம். அவர்களை கூட்டிகிட்டுப் போய் 4 ஆயிரம் அடி உயரம் உள்ள மலையிலிருந்து கீழே தள்ளிடுங்க’’ என்று.

18 வயது இளைஞன் ஒருவன் தன் தாத்தாவத் தோளில் சுமந்து எடுத்துப் போனான். ‘‘அடே தம்பி! நீ சின்ன புள்ளையா இருந்தப்போ, தீ விபத்தில உங்கப்பா அம்மா ரெண்டு பேருமே செத்துப் போயிட்டாங்க. நான்தான் உன்னை வளர்த்தேன். இந்த தாத்தா இனிமே வேண்டாமாப்பா?’’ என்று தாத்தா கேட்டார்.

‘‘எனக்கு நீ அவசியம் வேணும் தாத்தா. ஆனா, ராஜா உத்தரவு போட்டிருக்காரே! நான் என்ன செய்ய?’’ என்றான்.

‘‘அப்ப, நீ ஒன்னு செய். என்னை ராத்திரி 12 மணிக்கு மேல நல்ல இருட்டில, ஊரே தூங்கிட்டு இருக்கும்போது -தூக்கிட்டுப் போய் நம்ம வீட்டில நிலவறை இருக்குல்ல. தரைக்கு அடியில் தானிய மூட்டைகளை அடுக்கி வைக்கும் அறை -அதில் ஜன்னல் இருக்கும்- வெளிச்சம் இருக்கும். காற்றோட்ட வசதியும் இருக்கும்.- அதுக்குள்ள விட்டு தரைக்கதவை சாத்திடு. நான் உள்ள இருக்கறது யாருக்கும் தெரியாது. தினம் ஒரு வேளை சோறு ரகசியமா எனக்குக் கொண்டுவந்து கொடு. அது போதும்’’ என்றார் தாத்தா.

அவர் சொன்னபடியே நடுநிசியில் யாருக்கும் தெரியாமல் தாத்தாவைத் தூக்கிக்கொண்டு போய் நிலவறைக்குள் இறக்கிவிட்டான்.

அடுத்த இரண்டு நாளில் பொங்கல் பண்டிகை. ராஜா குடிமக்களை அழைத்து சில போட்டிகள் வைத்தார். போட்டியில் ஜெயிப்பவருக்கு ஆயிரம் வராகன் பொன் தருவதாக அறிவித்தார்.

முதல் நாள் போட்டி- பனை மரத்தின் நடுப்பகுதியில் 4 அடி நீளம் வெட்டிக்கொண்டு வந்து வைத்தனர். மேலும் கீழும் ஒரே அளவு திருமலை நாயக்கர் மகால் தூண் போல இருக்கும். அந்த பனைமரத் துண்டில் அடிப்பக்கம் எது மேல்பக்கம் எது என்று கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு 1000 வராகன் என்று அறிவித்தனர்.

மக்கள் விடை கண்டுபிடிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றனர். இளைஞன் வீட்டுக்கு ஓடி நிலவறைக்குள் நைஸாக நுழைந்து தாத்தாவிடம் போட்டி பற்றிச் சொன்னான்.

‘‘அது ஒன்னும் பெரிய விஷயமில்லை பேராண்டி! 4 அடி நீளப் பனை மரத்துண்டு மிதக்கற மாதிரி, 6 அடி தொட்டியில தண்ணி நிரப்பி, அந்தத் துண்டு மரத்தை உள்ளே தூக்கிப் போட்டா, அடி மரம் கீழ்ப்பக்கமும், மேல்மரம் மேலயுமா மிதக்கும்’’ என்று சொன்னார்.

பையன் ஓடினான். தாத்தா சொன்னபடி 6 அடி ஆழத்தண்ணித் தொட்டிக்குள் அந்த பனைமரத் துண்டைத் தூக்கிப் போட்டான்.

அவர் சொன்னது போல மிதந்தது. ‘இது மேல் பக்கம்- அது அடிபக்கம்!’ என்றான். பனை மரத்தை அறுத்தவன், ‘சரியான விடை’ என்றான்.

1000 வராகன் இளைஞனுக்குத் தரப்பட்டது. ஊரே கரகோஷம் செய்தது. யாரும் இதை நினைத்துப் பார்க்கவில்லை.

ராஜா முன் பனை மரத்துண்டு

அடுத்த பந்தயம். மிருதங்கம் - ஆளே வாசிக்காமல் அதிலிருந்து சத்தம் வர வேண்டும் என்றனர். கை விரல்களோ குச்சியோ தோல் பகுதியில் படாமல் சத்தம் மட்டும் வர வேண்டும்.

பேரன் நிலவறைத் தாத்தாவைச் சந்தித்தான்.

தேன்கூடு ஒன்றை அப்படியே எடுத்து வர வேண்டும். அதன் உள்ளே ராணித்தேனீ உட்பட எல்லாத் தேனீக்களும் இருக்கும்.

மிருதங்கத்தின் ஒருபக்கத் தோலைக் கழட்டி உள்ளே இந்த தேன்கூட்டை வைத்துவிட வேண்டும். ராணி தேனீ உள்ளே இருந்தால் அத்தனை தேனீக்களும் அதற்குள்ளேதான் இருக்கும். பின்னர் தோலை மூடி கயிறுகளை இறுக்கி, வழக்கமான மிருதங்கமாக அதைச் சரிசெய்து, 4 அடி நீள இரும்புக் கொக்கியை, மிருதங்கக் கயிற்றில் கோத்து தூக்கிச் செல்.

ஆடாமல் அசையாமல் அதை மேடை மேல் வை. ராஜா உத்தரவிட்டதும், அந்தக் கம்பியில் கோத்து மிருதங்கத்தை மேலே தூக்கி லேசாக ஒரு ஆட்டு. அந்த அதிர்ச்சியில் உள்ளே இருக்கும் அத்தனை தேனீக்களும் மிருதங்கத்தின் தோல் பகுதியைக் கொட்டும். அப்போது , ‘ங்கொய்’ என்று சத்தம் வரும் என்று சொல்லி அனுப்பினார்.

பையன் அதேபோல் அங்கே செய்து காட்டினான். மகாராஜா அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். 2-வது முறை 1000 வராகன் இளைஞன் பரிசைப் பெற்றதும் ஊரே கொண்டாடியது.

மூன்றாவது பந்தயம். சாம்பல் கயிறு திரிக்க முடியுமா? எல்லோரும் இளைஞன் பக்கம் திரும்பினார்கள். அவன் மாயமாகி விட்டான்.

மிருதங்கம் -சாம்பல் கயிறு

தாத்தா சொன்னார்.

‘ஒரு பெரிய தாம்பாளத் தட்டில் எண்ணெயை ஊற்றி, 6 அடி நீளக் கயிற்றை அந்தத் தட்டுக்குள் பாம்பு படுத்திருப்பது போல வட்டமாகச் சுற்றி அமிழ்த்தி வைக்க வேண்டும். ஒரு இரவு முழுவது்ம் விட்டால் அந்த எண்ணெய் முழுவதையும் அந்தக் கயிறு உறிஞ்சி விடும். கயிற்றின் ஒரு மூனையில் தீ வைத்தால் 4 மணி நேரம் நின்று எரியும். கடைசியில் கயிறு சாம்பலாகி கயிறு போல் காட்சிளிக்கும்!’ என்றார்

தாத்தா சொன்னபடி செய்தான். சாம்பல் கயிறு பார்த்துச் சொல்லொணாத மகிழ்ச்சி ராஜாவுக்கு. அதே சமயம் ராஜாவுக்கு ஒரு சின்ன சந்தேகம். இவ்வளவு சின்னபையன், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மூளையுள்ளவனாக இருக்கிறானே. இது எப்படி அவனுக்கு சாத்தியம்? என்ற சந்தேகம் வந்ததும் அவனை அழைத்தார்.

‘‘தம்பி, உண்மையைச் சொல். உன் வயதில் இப்படிப்பட்ட அறிவுடன் ஒருவன் இருக்க வாய்ப்பில்லை. இது எப்படி உன்னால் முடிந்தது?’’

‘‘மன்னிச்சிடுங்க பிரபு! பெரியவங்களையெல்லாம் மலை மேலே கொண்டு போய் வீசி கொலை பண்ணச் சொல்லி நீங்க உத்தரவு போட்டீங்க. எனக்கு எங்க தாத்தாவைக் கொல்ல மனசில்லே. கூட்டிகிட்டு வந்து வீட்டில் நிலவறையில ஒளிச்சு வச்சிருக்கேன். இதெல்லாம் அவர் குடுத்த ஐடியாதான்!’’ என்றான்.

பெரியவர்கள் வைரங்கள், வைடூரியங்கள், எவ்வளவு அனுபவங்களை அவர்கள் வாழ்க்கையில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். முட்டாள்தனமாக அவர்களை அழித்துவிட உத்தரவு போட்டு விட்டேனே!’ என்று வருந்தியவர், ‘இனிமேல் யார் வீட்டில் வயதானவர்கள் உயிரோடு இருந்தாலும் அரசுக்குத் தெரிவியுங்கள். அவர்களை இனி அரசே பராமரிக்கும்!’ என்று உத்தரவு போட்டார்.

பெரியாரை நாம் மதிக்காமல், கவனிக்காமல் இருந்தால் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்கிறார் வள்ளுவர்:

பெரியாரைப் பேணாது ஒழுகின் -பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

---

குறள்கதை 25- சாக்காடு

எங்கக்காவும், மச்சானும் வித்தியாசமான வேடிக்கையான தம்பதி. எப்போது சண்டை போட்டுக் கொள்வார்கள்; எப்போது சிரித்துப் பேசிக் கொள்வார்கள் என்று சொல்லவே முடியாது.

மச்சானுக்கு தினத்தந்தி- தினமணி எழுத்துக்கூட்டி படிக்க மட்டுமே தெரியும். விவசாயம் உயிர் மூச்சு. உடம்பில் பலம் இருந்த வரை ஓயாது உழைத்து ஓய்ந்து முழங்கால் முட்டி தேய்ந்து படுக்கையில் ஓய்வெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

87 வயதைத் தாண்டிக் கொண்டிருந்தார். அக்காவுக்கு 78 வயது இருக்கலாம். காலையில் மெதுவாகக் கட்டிலிலிலிருந்து படி இறங்கி வாசலில் நடந்து டாய்லெட் அறை சென்று விட்டு அதையொட்டிய குளியல் அறையில் குளித்து வேட்டி மாற்றி, மீண்டும் தடுமாறி திண்ணையில் ஏறி, கட்டிலுக்கு வந்துவிட்டால், மறுநாள் காலை வரை கட்டில் மீதுதான்.. ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் திருமால் போல் வாழ்க்கை.

அக்கா பஜ்ஜி சுட்டுக் கொடுத்தனுப்பினால், ‘நல்லா இருக்கு; கொஞ்சம் உப்பு பத்தலே- காரம் கொஞ்சம் அதிகம்!’ என்பார்.

40 வருடங்களுக்கு முன் அக்கா- மச்சான்

‘‘கட்டில்ல படுத்திட்டு அதிகாரம் பண்றியாய்யா- இளைப்பு வியாதியோட, போனா போகுதுன்னு பஜ்ஜி போட்டுக் குடுத்தா நொள்ளை சொல்றீங்களோ? நான் போனாத்தான்யா உன் பூளவாக்கு தெரியும்!’’ என்பார் அக்கா.

‘‘நீ போனா நான் என்ன மயித்துக்கு உசிரோட இருக்கேன். நானும் உங்கூடவே செத்துப் போவேன்!’ என்பார் மச்சான்.

எதிர்பாராமல் அக்கா முந்திக் கொண்டார். அப்படி ஒரு ராஜசாவை அக்காவே நினைக்கவில்லை. ஆஸ்பத்திரி, டாக்டர்கள், நர்சுகள், மருந்து மாத்திரைகள், வாயில், மூக்கில் ட்யூப்கள் என்று எந்த தொல்லையுமில்லாமல் பட்டென்று போய்விட்டார்.

‘‘உங்க அக்கா போயிட்டா மாப்பிள்ளே! நான் எதுக்கு இனி உயிரோட இருக்கணும். நானும் செத்துப் போறேன்!’’ சென்னையிலிருந்து துக்கம் விசாரிக்கப் போனபோது என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்.

சாவு அவ்வளவு சுலபமா வந்து விடுமா என்ன? நினைத்தவுடனே உயிர் போய்விடுமா?

80-வது பிறந்த நாள்

அக்கா இறந்து போய் ஆறு மாதங்கள் ஓடிவிட்டன.

தனிமை நோய் அவரைத் தாக்காத வண்ணம் மகன் மணி உதவிக்கு ஆள் ஒருவரை ஏற்பாடு செய்து, குளிப்பது, உடை மாற்றுவது, உணவு கொடுப்பது என்று கூடவே இருந்து கவனித்துக் கொள்ளும்படி செய்துவிட்டான்.

சிறுவயதில் பீடி பிடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. வயதாகும்போது அது நுரையீரலை பாதிக்கத் தொடங்கி, அடக்க முடியாத இருமல், இரவில் தூக்கத்தைக் கெடுத்தது.

கோவை மெடிக்கல் மருத்துவமனையில் சேர்த்து சுவாசப் பிரச்சினையைச் சரிசெய்து கொண்டிருந்தபோது திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்து இதயச் செயல்பாட்டில் பிரச்சினை எழுந்தது. சிறுநீரகக் கோளாறும் சேர்ந்துகொண்டது.

செய்தி எனக்கு எட்டியது. நிச்சயம் பிழைக்க வாய்ப்பிருந்தால் மட்டும் சிகிச்சையைத் தொடருங்கள், இல்லையென்றால் அவர் குடியிருந்த வீட்டில், குழந்தை குட்டிகள் முன்னிலையில்தான் உயிர் பிரிய வேண்டும் என்று சொல்லி- ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி, நர்ஸ் ஒருவரை கூட அனுப்பும்படி கேட்டுக் கொண்டேன்.

செய்தி கேள்விப்பட்டு, சுடுகாட்டில் சவக்குழி மட்டும் தோண்டவில்லை. ஊரே கூடி வீட்டு வாசலில் அவரை வரவேற்க காத்துக் கொண்டிருந்தனர். உயிரோடு வருவாரா, உடல் மட்டும் வருகிறதா தெரியவில்லை.

உயிரோடுதான் வந்தார். ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி அவர் படுக்கும் கட்டிலில் தூக்கிப் போய் படுக்க வைத்தார்கள். மூக்கில் ட்யூப் வழி ஆக்சிஜன் போய்க் கொண்டிருந்தது.

மகன் பேரனுடன் மச்சான்

என்ன தோன்றியதோ- திடீரென்று, ‘ம்ஊம்’ என்று செருமிக்கொண்டு மூக்கிலிருந்த ‘ட்யூப்’பை கையில் பிடுங்கி எறிந்துவிட்டு- எழுந்து உட்கார்ந்து கொண்டார். சுயநினைவு வந்து நன்றாக எல்லோரையும் பார்த்தார்.

‘‘என்ன இவ்வளவு கூட்டம்? ஓ.. என்னைப் பார்க்க வந்திருக்கீங்களா? சந்தோஷம். மணி எல்லாரையும் சாப்பிட வச்சு அனுப்புப்பா!’’ என்றார்.

50 பேருக்கு ஓட்டலில் சாப்பாடு ஏற்பாடு செய்து அனைவரையும் சாப்பிட வைத்து அனுப்பினான் மகன் மணி.

சாவுங்கறது தூங்கற மாதிரி; பிறப்புங்கறது தூங்கி எழுந்திருக்கற மாதிரி என்கிறார் வள்ளுவர்..

உறங்குவது போலும் சாக்காடு - உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

பின்குறிப்பு: அதன் பிறகும் ஆரோக்கியமாக 6 மாதம் மச்சான் இருந்து நாங்கள் ஐரோப்பா சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது 2019 அக்டோபரில் விடைபெற்றார்.

****

- கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x