Published : 14 Feb 2016 02:03 PM
Last Updated : 14 Feb 2016 02:03 PM

வாழ்வு இனிது: காலம் முழுதும் நீந்துவோம்!

முதல் இடம்!

நீச்சல் தரும் பலன்கள் நிறைய. சொல்லப்போனால், நடைப் பயிற்சியை விடவும் நீச்சல் உடல் நலத்துக்குக் கூடுதல் பலம். அரை மணி நேர நடையில் 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் 150 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அரை மணி நேர நீச்சலில் 350-க்கும் மேற்பட்ட கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

நீருக்குள் பயிற்சி!

75 கிலோ எடை கொண்ட ஒருவர் மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு மணி நேரம் நீந்தினால், 900 கலோரிகளை எரிக்கலாம். 6 இட்லி சாப்பிட்டவராக இருந்தால், அதில் கிடைத்த 510 கலோரியைக் கரைக்க அரை மணிக்கும் சற்று அதிக நேர நீச்சல் போதும். ஒரு மணி நேரத்துக்கும் சற்று அதிகமாக நீந்தினால், மதியச் சாப்பாட்டின் போது கிடைத்த 1,200 கிலோ கலோரிக்கு விடைகொடுத்துவிடலாம்.

கொழுப்பு குறையும்

த்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை நீச்சல் கட்டுப்படுத்துகிறது. குறைந்தபட்சம் வாரம் மூன்று முறை, தலா 30 நிமிடங்கள் நீந்தினால் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புத்துணர்வு

ஸ்பீடோ நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், நீந்துவதால் மன இறுக்கம் குறைவதாக 74% பேரும், புத்துணர்வுடன் இருப்பதாக 70% பேரும், உடல் நலம் பெறுவதாக 68% பேரும் தெரிவித்திருக்கிறார்கள். அத்தனை பலன்கள் உண்டு இதில்!

முழுப் பலன்!

டைப் பயிற்சியின்போதும், ஜாகிங் செய்யும்போதும் உடலின் கீழ்ப் பகுதிதான் வேலை செய்கிறது. நீந்தும்போது உடலின் ஒவ்வொரு தசையும் வேலை செய்கிறது!

லப் டப்!

நுரையீரல் வலுவடைவதற்கு நீச்சல் நல்ல பயிற்சி. நீந்தும்போது, ஆக்ஸிஜனைப் பெறுவதற்கு இதயமும் நுரையீரலும் நன்கு வேலை செய்ய வேண்டியிருக்கும். ஒரு நிமிடத்துக்கு 13% இதயம் துடிப்பது குறைந்து இதயத்தின் வேகம் சீரடையும். இதன் மூலம் அதிக ஆக்ஸிஜன் உட்கிரகிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராக இது பெரிய அளவில் கைகொடுக்கும்!

வியர்க்காதே!

நீந்துவதால் தசைகள் வலுப்பெறும். காற்றைவிட நீர் அடர்த்தியானது என்பதால், தரையில் உடற்பயிற்சி செய்வதை விடவும் 44 மடங்கு அதிகம் தசை இறுகும். நரம்பு மண்டலம் சீராகும். நல்ல தூக்கம் வரும். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சியில் உடலிலிருந்து வியர்வை வெளியாகும். நீச்சல் பயிற்சியில் விடுவதில்லை.

பொலிவு பெற

டலில் கால் கிலோ எடையைக் குறைக்க 2,800 கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். எனில், எடையைக் குறைக்க தினமும் அரை மணி நேரம் நீந்தினால், விரைவில் எடையைக் குறைத்து, பொலிவு பெறலாம்! மேலும், நீந்துவதால் உடலின் நெகிழ்வுத் தன்மையும் அதிகரிக்கும்.

வாழ்த்துக்கள் நீந்துங்கள்!

நீந்தச் செல்லும் முன்னர், 5 அல்லது 10 நிமிடங்களுக்குச் சின்ன அளவில் உடற்பயிற்சி செய்து உடலைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் நடுப்பகல் நேரங்களில் நீந்துவதைத் தவிர்ப்பது நல்லது. புதியவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை நீந்துவது நல்ல தொடக்கமாக அமையும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x